அகர்தலா, பிப்.4- திரிபுரா மாநில தேர்தலில் இடது முன்னணியுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி காங்கிரஸ் 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூடுதலாக போட்டியிட்ட 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் லாபஸ் பெற்றுவிட்டனர். பிப்ரவரி 16 அன்று நடைபெறவுள்ள திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் விரிவான மதச்சார்பற்ற முன்னணி ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டுக்கு மாறாக அதிகமாக 4 தொகுதிகளில் காங்கிரஸ் அறிவித்த தனது வேட்பாளர்களை கடந்த 2-ஆம் தேதி வாபஸ் பெற்றுக்கொண்டது. உடன்பாட்டின்படி காங்கிரஸ்க்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், காங்கிரஸ் தன்னிச்சையாக 17 தொகுதிகளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துவிட்டது. இந்நிலையில், வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தினமாகிய பிப்ரவரி 2 அன்று மூன்று வேட்பாளர்களை காங்கிரஸ் வாபஸ் பெற்றுக் கொண்டது.
ஏற்கெனவே அதற்கு முதல்நாள் ஒரு வேட்பாளரை காங்கிரஸ் வாபஸ் பெற்றிருந்தது. இதையடுத்து கூட்டணிக்குள் இருந்த எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரசாந்த பட்டாச்சார்ஜி தெரிவித்தார். இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை முதன்மை தேர்தல் அதிகாரி வெளியிட்டார். தகுதியற்ற 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்று அறிவித்தார். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுமுன்னணி 46 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், சுயேச்சை 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. பாஜக-ஐ.பி.எஃப்.டி. கூட்டணி 55 தொகுதிகளிலும், திரிணாமுல் கட்சி 28 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.