states

‘ஆடுகள் போல உடையணிந்து திரியும் ஓநாய்கள்’

மதுரை, ஜூலை 6-   பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மனநலம் குன்றிய சிறுமிக்கு இழப்பீடாக  14 லட்சம் ரூபாயை 4 வாரத்தில் மாவட்ட சட்ட சேவை மைய சேர்மன் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 55 வயது மதிக்கத்தக்க நபர், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதில் கருவுற்ற மனநலம் குன்றிய சிறுமிக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி தாய் காளியம்மாள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு வியாழனன்று நடைபெற்றது.  அப்போது நீதிபதி,  “ஓநாய்கள் ஆடுகள் போல் உடை அணிந்து திரிகின்றன” “wolf in sheep’s clothing” என்ற வாசகத்தை கூறி, தந்தை வயதில் உள்ளவர் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து அந்தக் குழந்தை கருவுற்றதைக் குறிப்பிட்டு, கடுமையாக சாடினார். 2020 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், அப்போதே, மனநலம் பாதித்த குழந்தையின் கருவை கலைக்கவும் முதற்கட்டமாக ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் 55 வயது நபர் மீது போக்சோ பிரிவின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து குற்ற வழக்கு முடிக்கப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது போல், மனநலம் குன்றிய குழந்தை கருவை கலைக்கும் வரை தமிழ்நாடு அரசு மறுவாழ்வு மையத்தில் தங்கி, அதன் பின்பு பெற்றோரால் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கில் மாவட்ட சட்ட சேவை மையத்தின் சேர்மன், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மனநலம் குன்றிய குழந்தைக்கு மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்குவதை தவிர்த்து மனுவை தள்ளுபடி செய்யக்கோரி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதை கடும் விமர்சனத்துடன் நிராகரித்த நீதிபதி, “சட்ட சேவை ஆணையத்தின் நோக்கம் பலவீனமானவர்களுக்கு இலவச மற்றும் திறமையான சட்ட சேவைகளை வழங்குவதும், பொருளாதார அல்லது பிற இயலாமை காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் நீதி மறுக்கப்பட கூடாது என்பதாகும்” எனக் குறிப்பிட்டார். மேலும், “பாதிக்கப்பட்ட குழந்தை இழப்பீடு நிதி ஒதுக்கீடு அட்டவணையின் படி ரூ. 14 லட்சம் இழப்பீடு பெற தகுதியானவர். ரூ. 14 லட்சத்தை  சிறுமியின் வைப்பு நிதியில் செலுத்த வேண்டும். இதிலிருந்து கிடைக்கும் வட்டியை சிறுமியின் தாயார் பெற்றுக் கொண்டு சிறுமியின் மறுவாழ்விற்கு உபயோகப்படுத்த வேண்டும். மாவட்ட குழந்தை நல அதிகாரி மூன்று மாதத்திற்கு ஒரு முறை குழந்தையின் நிலைகுறித்த அறிக்கையை மாவட்ட சட்ட சேவை மையத்தில் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பணத்தேவை இருந்தால் பணத்தை எடுக்க நீதிமன்றத்தில் உரிய உத்தரவு பெற வேண்டும். ரூ.14 லட்சத்தை 4 வாரத்திற்குள் மாவட்ட சட்ட சேவை மைய சேர்மன், குழந்தையின் கணக்கில் செலுத்த வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.