states

“நீரோ” வின் விருந்தினர்கள் - ஆர்.பத்ரி

பற்றியெரிந்து கொண்டிருக்கும் ஊரில் பதற்றமில்லாமல் இசைத்துக் கொண்டிருந்த “நீரோ” மன்னனைப்பற்றிய வேறொரு கதையும் கூட உண்டு. தனது நண்பர் களுக்காக அவன் ஏற்பாடு செய்யும் மாலை நேர கேளிக்கை விருந்துகளில் வெளிச்சத்தின் தேவைக்காக அடிமைகளை பிடித்து கட்டி வைத்து உயிரோடு கொளுத்துவானாம். அந்த துயரத்தை ஒத்ததாகத்தான் நமது நிலைமையும் உள்ளது. அற்புதங்களை நிகழ்த்த கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஒருவரின் ஆட்சியில் தான் பசியும் பட்டினியும் தலைவிரித்து ஆடுகிறது. இத்தகைய மக்களின் துயரத்தை ரசித்துக் கொண்டே, தன்னையும் புகழ்ந்து கொள்ள ஒருவரால் முடிகிறது எனில் அதுவும் கூட நீரோவின் மாலை நேர கேளிக்கையை போன்றது தான்.  அண்மையில் உலக வங்கி, நிதி ஆயோக் ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கைகள் இந்தியா வறுமையின் பிடியிலிருந்து முழுமை யாக விடுபட்டு விட்டது என சொல்கின்றன. ஜீரோ பாவர்ட்டி இன்டெக்ஸ் (Zero Poverty Index) எனும் அட்டவணையின்படி வறுமைக்கோட்டிற்கு கீழே யாருமே இல்லை எனும் நிலையை இந்தியா  எட்டிவிட்டதாக ஆட்சியாளர்களும் கூட தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன?

வறுமைக்கோடும் பட்டினிக் குறியீடும்

2023 ம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலக பட்டினிக் குறியீடு அறிக்கையில் 125 நாடுகளில் இந்தியா 111 ஆவது இடத்தில் இருக்கிறது. அப்படியானால், ”பெரும்பாலான மக்கள் பட்டினியோடு இருக்கும் ஒரு நாடு எப்படி வறுமைக் கோட்டிற்கு கீழே யாருமில்லை எனும் நிலையை எட்டியிருக்க முடியும்” எனும் கேள்வி இயல்பாக எழுகிறது தானே? ஆனால் அதிபுத்திசாலிகளான ஆட்சியாளர்களோ “வறுமைக்  கோட்டிலிருந்து பெரும்பாலான மக்கள் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் எனும் போது உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் இந்தியா எப்படி இடம் பெற முடியும்” என கேள்வியை தலைகீழாக திருப்பிப்போட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கிறார்கள். உண்மை யில் இவர்களின் வறுமைக்கோடு குறித்த வரையறை மிகவும் வேடிக்கையான ஒன்று.  உதாரணமாக, ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களில் மிக பெரும்பாலானவர்கள் பள்ளித் தேர்வுகளில் தொடர்ச்சியாக தோல்வி யடைந்து வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அவர்களை தேர்ச்சி பெற செய்ய என்ன செய்ய வேண்டும்? அவர்களது கற்றல் திறனை மேம்படுத்த கூடுதலான தலையீட்டை மேற்கொண்டு அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். ஆனால் அது கஷ்டமான வேலையாயிற்றே. எனவே  நூற்றுக்கு ஐம்பது  மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி எனும் நடை முறையை மாற்றிவிட்டு நூற்றுக்கு பதினைந்து மதிப்பெண் எடுத்தால் போதும் என முடிவெடுத்துவிட்டால் அனைவரையும் எளிதாக தேர்ச்சி பெற வைத்து விடலாம் தானே. இப்படித்தான் இருக்கிறது ஆட்சியாளர்களின் லட்சணம். வறுமைக்கோட்டிற்கு மேலே மக்களை கொண்டு வருவதற்கு பதிலாக வறுமைக்கோடு எனும் வரையறையை மாற்றிவிட்டால் போதுமானது என நினைக்கிறார்கள்.

வறுமைக்கோடு குறித்த 1973 ம் ஆண்டின் வரையறையில்,  கிராமப்புறங்களில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 2200 கலோரி அளவிலான ஊட்டச்சத்தும், நகரப்புறங்களில் 2100 கலோரி அளவிலான ஊட்டச்சத்தும் கிடைத்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்து விட்டார் என்று கொள்ளலாம் என்கிறது. ஆனால் நிலைமை என்பது அப்படியாக இல்லை. குறிப்பாக குஜ ராத்தில் கிராமப்புறத்தில் வசிக்கும் ஒருவருக்கு சராசரியாக 1670 கலோரி ஊட்டச்சத்தும், பஞ்சாப்பில் 1800 கலோரி ஊட்டச்சத்தும் தான்  கிடைக்கிறது என விபரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெனில் இன்னமும் மிகப்பெரும்பாலா னோர் வறுமையின் பிடியிலிருந்து வெளிவர வில்லை என்பதும் பட்டினி நிலையில் இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். அதுவும்  கூட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளி யிடப்பட்ட அளவுகோலை வைத்தே இப்போது வரை மதிப்பிடப்படுகிறது. அதை தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு மறுவரையறை செய்து ஒப்பிட்டால் நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கும் என்பதே உண்மை.

நிதி ஆயோக்கின் மோசடிக்கணக்கு

கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ.57/- ம் நகரப்புறங்களில் ரூ.69/- ம் ஊதியம் பெறுபவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்து விடுவார்களாம். ஆஹா. இத்தனை சொற்பமான ஊதியத்தை வாங்கும் ஒருவர் வறுமைக்கோட்டுடன் போராட்டத்தை நடத்தி ஜெயித்து விடுவார் என்றால் என்னவென்று சொல்வது.   அதுவும் கிராமப்புறத்தில் ஒரு நாள் ஊதியம் ரூ.57/- ஐ ஒருவர் பெறுகிறார் எனில் அதில் உணவுக்காக செலவென்பது ரூ.26.60/- ஆகவும், நகர்ப்புறத்தில் ஒருவர் பெறும் ரூ.69/- ஊதியத்தில் உணவுக்கான செலவென்பது ரூ.27/- ஆகவும் இருக்கிறது. ஊதியத்தின் மீதம் தொகையென்பது உணவல்லாத சுகாதாரம், உடை, வாழ்விடம் உள்ளிட்ட இதர தேவைகளுக்கானது. கிராமப்புறமோ அல்லது நகர்ப்புறமோ ஒருவர் பெறும் ஊதியத்தின் உணவுக்கான தொகையிலிருந்து, இன்றைய விலைவாசியில் அவரால் அதிகபட்சமாக ஒன்றரை லிட்டர் பாட்டில் குடிநீரைத்தான் வாங்க முடியும்.   ஒன்றரை லிட்டர் பாட்டில் குடிநீரை மட்டும் குடித்து ஒருவர் உயிர் வாழமுடியுமா என்று கேட்டால், அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது,  ஆனால் அவர் வறுமைக்கோட்டுக்கு  மேலே தான் இருக்கிறார் என்பதை மட்டும் எங்களால் உறுதியாக சொல்ல முடியும் என்கிறது அரசாங்கம்.  கணக்குகளில் மோசடி இருக்கலாம். ஆனால் மோசடிகளைக் கொண்டே கணக்குப் போடுகிறது மோடி அரசு. 

என்னதான் தீர்வு?

வெற்று ஜம்பத்தையும், போலியான புள்ளிவிபரங்களையும் முன்வைக்கும் ஒரு அரசால் பிரச்னைகளை தீர்க்கவோ, வறுமை யை ஒழிக்கவோ முடியாது. மக்கள் தேவைகளி லிருந்து ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்கும் துணிச்சல் அரசுக்கு இருக்க வேண்டும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), பத்தில் ஒரு பங்கு அளவிற்கு, உணவு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக ஒதுக்கிட வேண்டும்.   உள்நாட்டு உற்பத்தியின் (GDP) அளவில்,  7 % அளவிற்கான வரியை பெரும் முதலாளி களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் விதிக்க வேண்டும்.  தேசிய உணவு உத்தரவாத சட்டம் 2013, தேசிய ஊரக வேலைவாய்ய்பு உறுதி சட்டம் ஆகியவற்றை நீர்த்துப் போகவிடாமல் உறுதியாக அமலாக்க வேண்டும்.  இத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை களையெல்லாம், பாஜக அரசோ, மோடியோ எடுப்பார் என்பதில் மக்களுக்கு துளியும் நம்பிக்கையில்லை. ஆகவே தான் ஆட்சி மாற்றம் என்பது அவசியமாகிறது.  நாடாளுமன்ற தேர்தலில் பிரதானமாக எழும் கேள்வி மதவெறியா அல்லது மக்கள் வாழ்க்கையா என்பதே. மதவெறியை தூக்கியெறிந்து மக்கள் வாழ்க்கையை பாதுகாப்போம். நீரோவின் மாலைநேர கேளிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

தகவல் ஆதாரம் : உத்சா பட்நாயக் கட்டுரை,
பீப்பிள்ஸ் டெமாக்ரசி

 

;