states

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிரான வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க அக். 31 வரை அவகாசம்

புதுதில்லி, ஜூலை 12 - வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான வழக்குகளில், ஒன்றிய அரசு பதிலளிக்க, அக்டோபர் 31 வரை அவகாசம் வழங்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “இந்த மனுக்கள் தொடர்பாக விரிவான பதிலைத் தாக்கல் செய்வதற்கு ஒன்றிய அரசுக்கு அவகாசம் வேண்டும். எனவே, வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, தலைமை  நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 6-ஆவது முறை யாக கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. “கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட்  15-ஆம் தேதி நாடு விடுதலை அடைந்த  போது, அனைத்து வழிபாட்டுத் தலங் களும் எந்த தன்மையில் இருந்ததோ, அதில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும்” என்று வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் (Places of Worship (Special Provisions) Act 1991) கூறுகிறது.  பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து, 1991-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில், அயோத்தி பாபர் மசூதி - ராம ஜென்மபூமி விவகாரத்திற்கு மட்டும் (அப்போது அந்த வழக்கு நிலுவையில் இருந்ததால்) விலக்கு அளிக்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும் கூட, ராமஜென்ம பூமியைத் தவிர, இதர தலங்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்திலிருந்து விதி விலக்கு அளிக்கப் படாது என்று தெளிவாக குறிப்பிட்டே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சிறப்புச் சட்டத்தைப் பொறுத்த வரை, வழிபாட்டுத் தலங்களை வேறு மதத்தின் வழிபாட்டுத் தலமாக மாற்ற முடியாது என்பது மட்டுமன்றி, அவ்வாறு மாற்றும் கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றத்திற்கு வருவதையும் தடை செய்கிறது. ஆனால், இந்தச் சட்டத்தின் சில பிரிவு களுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, பாஜக-வைச் சேர்ந்த வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய உள்பட பலர் உச்சநீதிமன்றம்சென்றனர். இந்த மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், பி.எஸ். நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகி யோர் அடங்கிய உச்ச நீதிமன்ற ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு வரும் ஒவ்வொரு முறையும், ஒன்றிய அரசு கூடுதல் அவகாசம் கேட்டு வருகிறது. இந்த வகையில் ஏற்கெனவே 5 முறை அவகாசம் கேட்டுப் பெற்றது.  செவ்வாயன்று (ஜூலை 11) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது, ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கம்போல “மனுக்கள் தொடர்பாக விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மேலும் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு சுப்பிரமணியசாமி எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், ஒன்றிய அரசு பதிலளிக்க அக்டோபர் 31 வரை அவகாசம் அளித்து வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.