மும்பை, ஜூன் 10 - மகாராஷ்டிராவில் 6 மாநிலங்களவை உறுப்பி னர் இடங்களுக்கு 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அங்கு வெள்ளியன்று தேர்தல் நடைபெற்றது. ஒவ்வொரு கட்சியிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடம், பாஜக-விற்கு 2 இடம் கிடைப்பது உறுதி யாகி இருந்தது. ஆனால் பாஜக 3 வேட்பாளர் களையும், சிவசேனா 2 வேட்பாளர்களையும் நிறுத்தி இருந்ததால், அந்த 6-ஆவது இடம் யாருக்கு என்பதில் குழப்பம் நிலவியது. மகாராஷ்டிராவில் ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 42 எம்எல்ஏ-க்கள் தேவை என்ற அடிப் படையில், தற்போது சிவசேனா - காங்கிரஸ் - தேசிய வாத காங்கிரஸ் கூட்டணிக்கு 169 எம்எல்ஏ-க்களில் 3 எம்.பி.க்கள் தேர்வானது போக 40 எம்எல்ஏ -க்கள் மீதம் இருந்தனர். எனினும், சிறையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஆகியோருக்கு நீதி மன்றம் அனுமதி மறுத்து விட்டதால், 38 எம்எல்ஏ- க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 4 எம்எல்ஏ-க்களும், பாஜக-விற்கு 13 எம்எல்ஏ-க்களும் தேவைப்பட்டனர். இவ்விரு கூட்டணிக்கும் வெளியே மஜ்லிஸ் கட்சிக்கு 2 எம்எல்ஏ-க்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ராஜ்தாக்கரேவின் எம்என்எஸ் கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 எம்எல்ஏ என இருந்தனர்.
இந்நிலையில்தான் அவுரங்காபாத்தைச் சேர்ந்த மஜ்லிஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர் இம்தியாஸ் ஜலீல், தங்கள் கட்சியின் மகா ராஷ்டிரா மாநில எம்எல்ஏ-க்கள் 2 பேர், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சாயர் இம்ரானுக்கு வாக்க ளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்’’ என்று வெள்ளியன்று காலை வாக்குப்பதிவுக்கு முன்னதாக அறிவித்தார். இதேபோல கர்நாடக மாநிலத்தில், எச்.டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ ஸ்ரீனிவாச கவுடா, காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்ததாக பகி ரங்கமாகவே பேட்டி அளித்துள்ளார். “காங்கிரஸ் மீது எனக்கு பெரும் அன்பு இருக்கிறது; அத னால் நான் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்க ளித்தேன்” என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே ஒருவரல்ல, தங்களின் கட்சியின் 2 எம்எல்ஏ-க்கள் கட்சிமாறி வாக்களித்து இருப்பதாகவும், அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி புகார் கூறியுள்ளார். மதச்சார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏ எச்.டி. ரேவண்ணா தனது வாக்குச் சீட்டை காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவரான டி.கே. சிவகுமாரிடம் காட்டியதாக பாஜக-வும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது.