பிரதமராக நரேந்திர மோடி அதிகாரத்துக்கு வந்த பிறகு கடந்த பத்தாண்டுகளில் நவீன ஊடகங்கள் முதல் தேசிய-சர்வதேசிய ஊடகங்கள் வரை வேட்டையாடப்பட்டு வருகின்றன.
பிபிசி
குஜராத் இனப் படுகொலையில் நரேந்திர மோடியின் பங்கை “இந்தியா: மோடியின் கேள்வி” என்ற ஆவணப் படத்தை ஒளிபரப்பி அம்பலப்படுத்தியது. பின்னர் பிபிசியின்
தில்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஊழியர்களின் செல்பேசிகள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது ஆய்வு மட்டுமே என்றும், ரெய்டு இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. ரெய்டுகள் வழக்கமான நிகழ்வாக மாறியதால், இந்தியாவில் பிபிசி நேரடியாக வேலை செய்வதை நிறுத்திக் கொண்டது. இப்போது இந்தியாவில் அதன் ஊழியர் சங்கம் செய்திகளின் பொறுப்பில் உள்ளது.
தி வயர்
பாஜக அரசின் பார்வையை உறுத்திய நிறுவனம் தி வயர். அவதூறு வழக்குகளை தாக்கல் செய்து வயர் பலமுறை நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைதிப்படுத்தும் முயற்சிகளை எதிர்கொண்டது. பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியாவின் புகாரின் பேரில் தில்லி காவல்துறையினர் வயர் மீது வழக்கு பதிவு செய்தனர். நிறுவன ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், எம்.கே.வேணு, சித்தார்த் பாட்டியா, ஜானவி சென் ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2021 வரை உபியின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் தோல்விகளைப் பற்றி செய்தி வெளியிட்டதற்காக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆதித்யநாத் அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஊடக நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்த செய்திக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மேற்கொண்ட நடவடிக்கை நீதிமன்றத்தில் தோல்வியடைந்தது. அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா தொடர்ந்த அவதூறு வழக்கில் விசாரணை தொடர்கிறது. 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜெய் ஷாவின் பொருளாதார வளர்ச்சி 6,000 மடங்கு அதிகரித்ததாக செய்திகள் வெளியாகின.
காஷ்மீர் வாலா
ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட காஷ்மீர் வாலா செய்தி நிறுவனம், 2023 ஆகஸ்ட் 23, முதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் அந்த நிறுவனத்தில் இருந்து கணினிகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். 2022 பிப்ரவரி 4 அன்று, ஆசிரியரும் நிறுவனருமான ஃபஹத் ஷா பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். புல்வாமா துப்பாக்கிச் சூடு தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26-ஆம் தேதி ஜாமீன் கிடைத்ததும், மீண்டும் கைது செய்யப்பட்டார். ஃபஹத் 21 மாதங்கள் சிறையில் இருந்தார்.
தி ஸ்க்ரோல்
நரேந்திர மோடியால் தத்தெடுக்கப்பட்ட டோமாரி கிராமத்தில் உணவுப் பஞ்சம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக வாரணாசி மாவட்ட அதிகாரிகள் ஸ்க்ரோலின் ஆசிரியர் பிரியா சர்மா மீது வழக்குப் பதிவு செய்தனர். கோவிட் முழுஅடைப்பின் போது சமூக சமைய லறை மூடப்பட்டதாக புகாரளித்ததற்காக அவர் மீது குற்ற வியல் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மதிய உணவு திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட ஜன சந்தேஷ் நாளிதழுக்கு விளம்பரம் வழங்குவதைக் கூட அரசு நிறுத்தியது.
நியூஸ் லாண்டரி
நிதி முறைகேடு புகாரின் பேரில் வருமான வரித்துறையினர் 2 முறை நியூஸ் லாண்டரி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். முதல் சோதனை 2021 ஜூனில் நடத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட தகவல்கள் கசிந்தது தொடர்பாக நீதிமன்றத்தின் தலையீடு வருமான வரித் துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. நியூஸ் லாண்டரி இணை நிறுவனர் அபிநந்தன் சேக்ரியின் தனிப்பட்ட தகவல்கள் கசியாமல் இருப்பதை உறுதி செய்யு மாறு வருமான வரித் துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டைனிக் பாஸ்கர்
2021 ஜூலை 22 அன்று, தில்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் டைனிக் பாஸ்கர் குழுமத்தின் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்தது. அரசாங்கத்தின் கோவிட் நடவடிக்கை களின் தோல்வியை அம்பலப்படுத்தியதற்கு பதிலடியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
பாரத் சமாச்சார்
உ.பி.யில் முக்கிய செய்தி சேனலான பாரத் சமாச்சார் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவிட் காலத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சித்திக் கப்பன்
ஹத்ராஸில் தலித் சிறுமி கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பன் உத்தரப் பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். யுஏபிஏ சட்டத்தின் கீழ் 846 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு சித்திக் ஜாமீன் பெற்றார்.
நியூஸ் க்ளிக்
மோடி அரசின் ஊழல் மோசடிகள், இந்துத்துவா வெறுப்பு அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்தியது நியூஸ் க்ளிக் இணையதள செய்தி நிறுவனம். சீனாவிடமிருந்து நியூஸ் க்ளிக்குக்கு பணம் வருவதாக குற்றம் சுமத்தி நிறுவனத்திலும் ஊழியர்களிடமும் சோதனை நடத்தியது. இதன் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவை மோடி அரசு யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்தது. மே 15 புதனன்று உச்சநீதிமன்றம் கைது நடவடிக்கை தவறு என்றும் உடனே அவரை விடுதலை செய்யுமாறும் உத்தரவிட்டது.