states

img

தமிழகம் ஒருபோதும் காவிக் கூட்டத்திற்கு அடிபணியாது

சென்னை, செப். 6 - “இந்தியாவின் இருள் அகற்றுவோம் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’ என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய  மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் நிறைவு பொதுக்கூட்டம் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் சத்தியமூர்த்தி நகரில் திங்களன்று (செப். 5) நடைபெற்றது.   இதில் பேசிய கட்சியின் மாநிலச்செய லாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தை காவி பூமியாக மாற்ற அண்ணாமலையும், சங்பரிவார் கூட்டமும் தவமிருக்கிறார்கள். அதற்கு துணை போகும்  வகையில் ஆளுநர் போர்வையில் அமர்ந்திருக்கக் கூடிய என்.ரவியும் அறி விக்கப்படாத பாஜக தலைவரைப் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழகம் ஒரு போதும் காவிக் கூட்டத்திற்கு அடி பணியாது என்றார்.

மக்களை  விலைபேசும் பாஜக

“திருவாருரில்  வந்த கூட்டத்தை வைத்து  அடுத்து எங்களுடைய ஆட்சிதான் என அண்ணாமலை கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்தக் கூட்டம் எப்படி திரட்டப் பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். தமிழக மக்களை ஆயிரத்திற்கும், ஐநூறுக்கும் விலை பேசுகிற வியாபாரக் கூட்டமாக பாஜக உள்ளது” என்று அவர் சாடினார். “ஆகஸ்ட் மாதம் பெண்கள், குழந்தை களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக கடந்த 15 நாட்களாக 5  ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் 50 லட்சம் குடும்பங்களை சந்தித்து பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததை பார்க்க முடிந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.  “தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்கும் மகத்தான பணியை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாஜக, சாதித் தலைவர்களை கூட்டிவைத்து மாநாடு நடத்துகிறார்கள். சாதி, மதத்தின் பெயரால் மக்களை திரட்டுகிறது. இந்த நாட்டில் பாஜக தோன்றிய பிறகுதான் விநாயகரே அவதரித்தது போல் கொட்டம் அடிக்கின்றது. பல நூறு ஆண்டுகளாக மக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். ஆனால் விநாயகரையும் பாஜக வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

முகப்புரையை சிதைக்கும் மோடி அரசு

நாட்டில் மதக்கலவரத்தை தூண்டி சிறுபான்மை மக்களை தாக்குவதை ஆர்எஸ்எஸ், பாஜக ஒரு முழுநேர வேலையாக செய்து கொண்டிருக்கிறது. அரசியல்  சாசனத்தின் முகப்புரையில் மதச்சார்பற்ற நாடு  என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தினசரி மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டை ஆட்சியாளர்கள் தகர்த்துக் கொண்டுள்ளனர். `ஹிஜாப் அணியக் கூடாது எனக் கூறி பல்லா யிரக்கணக்கான இஸ்லாமிய மாணவிகளின் படிப்பில் மண்ணை போட்டுள்ளனர். அரசியல் சாசனத்தில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற வார்த்தைகளை நீக்கி விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலே சுப்பிரமணியசாமி மனு  தாக்கல் செய்துள்ளார். மோடி ஆட்சியில் இந்த வார்த்தைகள் அகற்றப்படுவது மட்டு மல்ல, அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அர சியல் சாசனத்தையே முற்றிலுமாக நீக்கி விட்டு, காவிகள் உருவாக்கி இருக்கிற மநு சாஸ்திரத்தை அரசியல் சாசனமாக உரு வாக்கும் முயற்சியை மேற்கொண்டு வரு கிறார்கள் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

தேசியக் கொடியை இழிவுபடுத்தியவர்கள்

75ஆவது சுதந்திர தினத்தில் அனைவரும் வீட்டில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்களே, 1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்த போது உங்கள் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றினீர்களா என ஆர்எஸ்எஸ் அமைப்பின ருக்கு கேள்வி எழுப்பினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரிட்டனை விட இந்தியா  முன்னேறி விட்டது எனக் கூறுகிறார்; ஆனால்  தேசியக் கொடியை சீனாவில் இருந்து இறக்கு மதி செய்துள்ளனர்; இதுதான் ‘மேக் இன் இந்தியாவா’ எனவும் கேள்வி எழுப்பினார்.  

போதைப் பொருள் கடத்தலின் தலைநகரம் குஜராத்

தென் மண்டல முதலமைச்சர் மாநாட்டில் பேசிய அமித்ஷா, போதைப் பொருட்களை தடுப்பதற்கு மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இன்று உலகின் 3ஆவது பணக்கார ராக இருக்கக் கூடிய அதானிக்கு சொந்தமான குஜராத்தில் உள்ள  துறைமுகம் வழியாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 5 லட்சம் கோடி  ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனை வரும் சிந்தனைகளை இழந்து போதைக்கு அடிமையாக வேண்டும் என்று நினைக் கிறார்கள் எனவும் கே.பாலகிருஷ்ணன் சாடினார்.

அழிக்க நினைத்தால்...

மேலும் பேசிய அவர், “இடதுசாரிகள் மீது கடுமையான தாக்குதலை தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் கடுமையான அடக்குமுறை, திரிபுராவில் முன்னாள் முதல்வர் தனது சொந்த தொகுதிக்குச் செல்ல முடியவில்லை. சமூக விரோதிகளை, ரவுடிகளை கட்சியிலே இணைத்து வன்முறை வெறியாட்டத்தை கேர ளத்திலே தற்போது கட்டவிழ்த்து விட்டுள்ள னர். வன்முறை வெறியாட்டத்தின் மூலம்  இடதுசாரி இயக்கத்தை ஒழித்துவிடலாம் என  நினைக்கிறார்கள். இடதுசாரி சிந்தனை யாளர்களை கொலை செய்கின்றனர். செங்கொடி இயக்கத்தை அழிக்க நினைத்த `ஹிட்லர்தான் அழிந்து போனான். கீழ் தஞ்சையிலே நிலப்பிரபுக்களை எதிர்த்துப் போராடிய போது, தமிழக காவல்துறை மட்டும் போதாது என்று கூறி மலபார் காவல் துறையை வைத்து அடக்க நினைத்தார்களே, அது முடிந்ததா? எனவே இடதுசாரி இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள் என்பதை ஒன்றிய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று எச்சரித்தார்.

‘குண்டு வைப்பது தானே உங்கள் மாடல்’

“திமுக திராவிட மாடல், காங்கிரஸ் காமராஜர் மாடல், கம்யூனிஸ்டுகள் இடதுசாரி மாடல் எனக் கூறுகிறோம். ஆனால் பாஜக தங்களுடைய மாடல் என்று எதையாவது கூற முடியுமா? குண்டு வைப்பது, கொலை செய்வதுதானே உங்களுடைய மாடலாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்திலே உங்களுடைய தொண்டர் யஷ்வந்த் ஷின்டே இதைத்தானே கூறினார். இதுவரை பாஜக, ஆர்.எஸ்.எஸ். அதை மறுக்கவில்லை. அவர்களுடைய ஆட்களே ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு குண்டு வைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தற்போது அந்த அலுவலகத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே வெடிகுண்டு அரசியலை, மதவெறி அரசியலை முறியடிக்க, அரசியல் சாசனத்தை பாதுகாக்க, மாநில உரிமைகளை மீட்டெடுக்க அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், அமைப்புகளும் ஓரணியில் திரள வேண்டும்” என கே.பாலகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார்.

‘தேசம் எங்கே செல்கிறது?’

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. செக்கு இழுக்க வைத்தார்கள். சித்ரவதை செய்தார்கள். ஆனால் அவர், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், சாவர்க்கர் போல்  மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்காமல், சிறையில் இருந்துகொண்டே எது அழிந்தா லும் என் நெஞ்சுறுதியை யாராலும் அழிக்க முடியாது என்று முழக்கமிட்டார். விடுதலையான பிறகும் நாட்டு விடுதலைக்காக தொடர்ந்து போராடினார். நாடு இன்றுள்ள நிலையில் மத வேற்று மைகள், சாதி வேற்றுமைகள் குறித்து பேசு பவர்கள் நாட்டிற்கு துரோகம் இழைக்கிறார்கள் என்று 110 ஆண்களுக்கு முன்பே சிதம்பரனார் கூறினார். 1929ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுகள் மீது தொடுக்கப் பட்ட மீரட் சதி வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 1931ஆம் ஆண்டு பி.ஜி.ஜோஷி உள்ளிட்டோர் அந்நியர் ஆட்சி அகற்றப்பட்டால் மட்டும் போதாது, அரசியலில் இருந்து மதம் விலகியிருக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் நீதிமன்றத்திலேயே தெரிவித்தார்கள். 

சாவர்க்கர் தேசத்தந்தையா? 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  வள்ளுவர் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறினார். அனைவரும்  பிறப்பால் சமமானவர்கள். ஆனால் பாஜக மதத்தின் பெயரால் சாதியின் பெய ரால் அந்த கூற்றையே சீரழித்து இந்து சனாதன தத்துவத்தை அமல்படுத்த முயற்சிக்கிறது. மோடி சுதந்திர தின உரையில் அந்தமான் சிறையில் இருந்த போது தன்னை விடுதலை செய்யக் கோரி 6 முறை மன்னிப்புக் கடிதம் எழுதிய, காந்தியை சுட்டுக் கொன்ற சதித் திட்டத்திலே பங்கேற்ற சாவர்க்கரை தேசத்தந்தை எனக் குறிப்பிடுகிறார். தேசம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? மக்களவையில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி கிடையாது, ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், சுயசார்புப் பொருளாதாரக் கொள்கை அனைத்தும் சீரழிக்கப்பட்டு வருகிறது. அரசியலமைப்பின் தன்மையை, விழு மியங்களை மோடி அரசு தகர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே தேசத்தை, அரசியலமைப்புச் சட்டத்தை, ஜனநாயகத்தை, மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க அனைத்துத் தரப்பு மக்களும் இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

‘நீதிமன்றத்தையே பிரச்சார மேடையாக மாற்றியவர்கள்’

சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் பேசுகையில், “போராட்டம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத, பிரிட்டீஷ் அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் தேசியக் கொடியை அனைவரும் ஏற்றுங்கள் என்று கூறுவதற்கு அருகதை உண்டா” எனக் கேள்வி எழுப்பினார். சுந்ததிரப் போராட்டத்தின் போது கம்யூனிஸ்டுகள் பல்வேறு சதி வழக்குகளை சந்தித்தனர். நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட போது, அஞ்சாமல் அதையே பிரச்சார மேடையாக மாற்றியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கூறினார். எனவேதான் கம்யூனிஸ்டுகள் இன்றும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமை என போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாற்றுக் கொள்கையை முன் வைத்து போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பிரச்சார நிறைவு கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எம்.ராமகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், க.பீம்ராவ், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா, எஸ்.கோபால், பி.எஸ்.பாரதி அண்ணா, சி.சங்கர், எஸ்.தயாநிதி, எம்.சிவக்குமார், எம்.காசிநாதன், டி.எம்.ஜெய்சங்கர், கோ.மாதவன், எம்.இளங்கோவன், பி.ரமேஷ், என்.சுப்பிரமணியன் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயகுமார் நன்றி கூறினார். முன்னதாக நடைபெற்ற பூபாளம் கலைக்குழுவின் ‘அரசியல் நையாண்டி” அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

 


 

;