சென்னை, செப்.28- தமிழகம் முழுவதும் மாணவர்கள் கல்வி நிலையங்க ளுக்கு சென்றுவர கூடுதல் பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு சென்றுவர பேருந்து வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நெரிசல் மிகுந்த ஓடும் பேருந்தில் மாணவர் தவறி விழுந்து உயிரி ழந்தார் என்ற துயரச் சம்பவத்தை தமிழக அரசும் போக்கு வரத்துத் துறையும் உணர வேண்டும். நெரிசல் மிகுந்த பயணத்தால் பேருந்து படியில் தொற்றிக் கொண்டு மாணவர்கள் கீழே விழுந்து காயமடைவதும் சில நேரம் விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெரும் சிர மத்திற்கு ஆளாகின்றனர். படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் மாணவர்களை காவல்துறை பல இடங்களில் கடுமையாக தாக்கும் நிகழ்வும் ஏற்படு கிறது. அரசு அதிகாரிகளோ மாணவர்கள் மீதும், அவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பள்ளி, கல்லூரி சென்றுவர கார ணம், போதுமான பேருந்து வசதி இல்லை என்பதை அரசு அதிகாரிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். எனவே அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மாணவர்கள் அதிகமாக பயணிக்கும் வேளைகளில், அரசு கூடு தலாக பேருந்துகளை இயக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.