சென்னை, மே 4- மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக மீண்டும் மருத்துவர் ஏ.ரத்தினவேலை நிய மித்துள்ளதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை வரவேற்று வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாக ராஜன், மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ் சேகர், கல்லூரி முதல்வர் ஏ.ரத்தினவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது மாணவர்கள் தங்களது சீரு டையை அணிந்த பின்பு ஏற்றுக்கொள்ளும் வழக்கமான ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவர் தலைவர் ஆங்கிலத்தில் மொழிபெயர் க்கப்பட்ட சமஸ்கிருத ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை வாசிக்க, இதர மாண வர்கள் தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
பின், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் மருத்துவக் கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த உறுதிமொழி விவகாரம் முதல்வருக்கோ, பேராசிரியர்களுக்கோ தெரியாது என மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் தெரிவித்தார். இதற்கிடையே, மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது எடுக்கப்பட்ட நடவடிக் கையை கைவிடுமாறு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்தச் சம்பவம் புதனன்று(மே 4) சட்டப்பேரவையில் எதிரொலித்தது. இதற்கு விளக்கம் அளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன்,“உலக நாடுகள் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உறுதிமொழிக்கு மாற்றாக புதிய நடைமுறையை நாடு முழு மைக்கும் திணிப்பதற்கு ஒரு கூட்டம் முயல்கிறது”என்றார். தன்னை நேரில் சந்தித்த மதுரை கல்லூரி முதல்வர் தனக்கு தெரியாமல் சமஸ்கிருத உறுதி மொழி எடுக்கப்பட்டதாக நேரில் விளக்கம் அளித்தார். என்றாலும்கூட தமிழ் நாடு முழுவதும் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களையும் சென்னைக்கு அழைத்திருக்கிறோம். எதிர்க்காலத்தில் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு அறிவுறுத்தப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், “மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் ரத்தினவேல் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர். நடந்த தவறுக்கு வருத்தமும் தெரிவித்துவிட்டதால் முதல்வர் உத்தரவுப்படி மீண்டும் அதே கல்லூரியின் முதல்வராக பணியில் அமர்த்தப்படுகிறார்” என்றார்.