பாசிசம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால், அது தவிர்க்க முடியாத ஒரு வளர்ச்சிக் கட்டமல்ல. பாசிசத்தால், முதலாளித்துவத்தின் பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் அடிப்படையில் தீர்க்க முடியாது. இதனால் அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும். பாசிசம் அதிகாரத்திலிருக்கும் மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதக்குப் போராடுவது சாத்தியமே. பாசிசமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது. ஆனால் அதை தோல்வியுறச் செய்ய, அந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், பாசிச எதிர்ப்பு ஒற்றுமை என்ற அதனுடைய கொள்கைகளும்தான், பாசிச சவாலை முறியடித்து, பாசிச எதிர்ப்புக்கு வெகுஜன அடித்தளத்தை உருவாக்கி தந்தன. நமது எதிரிகள் யார் என்பதை வரையறை செய்தல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் ஒரு தவறான விளக்கமானது அரசியல் தவறுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும். ‘பகைவர்கள்’ என்று பேசும்பொழுது பாசிச அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள வெகுமக்களை நாம் சிந்தனையில் கொண்டிருக்கவில்லை. நமது பகைவர்கள் பாசிச அமைப்புகளேயாகும். ஆனால், அந்த அமைப்புகளில் உள்ள மக்கள் நமது எதிரிகள் அல்ல. அவர்கள் உழைக்கும் வெகுமக்கள். அவர்களை நம் பக்கம் ஈர்ப்பதற்கு நாம் ஒவ்வொரு முயற்சியையும் செய்ய வேண்டும்.