states

கேரளத்தின் சொந்த வருவாய் அதிகரிப்பு

திருவனந்தபுரம், ஜுலை 26- கேரளத்தின் சொந்த வருவாயில் எதிர்பார்த்ததை விட சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு அக்கவுண்டன்ட் ஜெனரல் அளித்துள்ள விவரங்கள் சாட்சியமாகி உள்ளன. கடந்த நிதியாண்டில் தனது சொந்த வருமானமாக ரூ.70,000 கோடி பெற்றதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21இல் இருந்த 47,157 கோடிகளைவிட, ஐம்பது சதவிகிதம் அதிகமாகும். மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டின் முனை மழுங்கும் தணிக்கை விவரங்கள் இவை. நிதித்துறையின் வலிமையை ஆராயும் மூன்று பிரிவுகளிலும் கேரளா முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 2.2 சதவிகிதமாக இருந்தது. வருவாய் பற்றாக்குறை 0.67 சதவிகிதம். முன்னதாக 2.6 சதவிகிதமாக இருந்தது தற்போது ஒன்றுக்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 24,000 கோடி மட்டுமே கடன் வாங்கப்பட்டுள்ளது. 2021-22 இல் 37,000 கோடியும், 2020-21இல் 35,000 கோடியுமாகும். ஒன்றிய அரசின் கொள்கையால் மாநிலத்திற்கு பெரும் தொகை மறுக்கப் பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன. கடந்த ஆண்டு மத்திய மானியத்தில் 2300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவுக்கு இந்த ஆண்டு மத்திய அரசிடமிருந்து ரூ.28,400 கோடி வருவாய் இழப்பு  ஏற்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை  மானியத்தில் 8400 கோடி குறைக்கப் பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.12,000 கோடி இல்லாமல் போய்விட்டது.  ரூ.8000 கோடி பொதுக்கடன் வெட்டப் பட்டது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமனை சந்தித்த கேரள நிதி யமைச்சர் கே.என்.பாலகோபால், ரூ.15,000 கோடி அவசர நிதி அனு மதி கோரியும், எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. இந்த விவகாரங்களில் ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் வாய்மொழியாகக் கூட குற்றம் சாட்டுவதில்லை. ஜிஎஸ்டியில் வாகன தணிக்கை இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் ஆதாரமற்றது. மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி துறை, ஆறு மாதங்களுக்குள் வரி ஏய்ப்பாளர்களிடமிருந்து ரூ.1000 கோடியை மீட்டுள்ளது. ஒன்றரை மாதத்தில் நூற்றைம்பது வாகனங்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓணம் பண்டிகைக்கு தகுதியானவர்களுக்கு கிட் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. எரிபொருள் செஸ் காரணமாக பெட்ரோல், டீசல் விற்பனை குறைகிறது என்ற வாதம் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை மறைத்து முன் வைக்கப்படுகிறது. நெல் கொள்முதல் உட்பட சப்ளைகோவுக்கு ரூ.2500 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.400 கோடி கிடைக்கும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.2000 கோடி ரூபாய் தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.