states

போதைப் பொருட்கள் கடத்தல் - மறைக்கப்படும் உண்மைகளும், விலகாத மர்மமும் - ஆர்.பத்ரி

போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தாமல் ஓயமாட்டேன் என செல்லுமிடமெல்லாம் உறுதிமொழி அளித்துக் கொண்டிருக்கிறார் திருவாளர் அண்ணாமலை.  சும்மாவா பின்னே. ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றுகின்ற போது ஐந்து லட்சம் வழக்குகளை போட்டவராயிற்றே. இவரை கண்டாலே குற்றவாளிகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள் எனும் பிரச்சாரத்தை பாஜகவினர் இன்று வரையிலும் சிரிக்காமல் சீரியசாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர் போலீசாக இருந்து பிடித்த குற்றவாளிகளை விட பாஜக தலைவராக ஆன பின்பு கட்சியில் சேர்த்துக் கொண்ட குற்றவாளிகள் தான் அதிகம் எனும் காமெடி சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

அண்ணாமலையின் அளப்பு

போதைப் பொருட்களை தடுக்க அண்ணாமலையோ, பாஜகவோ களத்தில் இறங்கிப் போராடலாம். அந்த கோரிக்கையில் ஒன்றும் தவறில்லை. ஆனால் தாங்கள் மட்டுமே ஏதோ, சுத்த சுயப்பிரகாசம் போல அவர் பேசுவதைத் தான் கேட்க சகிக்கவில்லை. போதைப் பொருள் பிரச்சனை குறித்த பிரச்சனைகளில் அவர் பேசுவதை பார்க்கிற போது, அதைத் தடுக்க வேண்டும் எனும் அக்கறையை விடவும், தனக்கான அரசியல் ஆதாயத்திலேயே அவர் குறியாக இருப்பதாகப்படுகிறது. ஏனெனில் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களில் போதைப் பொருட்கள் பயன்பாடும், அதனால் விளையும் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பல மாநிலங்களில் உள்ள போதைப்பொருள் புழக்கம் குறித்தும், அதை தடுப்பதில் ஒன்றிய அரசாங்கம் எவ்வாறு தோல்வி அடைந்திருக்கிறது என்பது குறித்தும் பின்வரும் ஆதாரங்களின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஏதோ அண்ணாமலை பேசுவதைப் போல் ஆதாரம் இல்லாமல் நாம் சொல்லவில்லை. உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தராய் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வமான பதில், தேசிய குற்றப் பதிவு ஆணையம், இதர புலனாய்வு மற்றும் காவல் அமைப்புகள் ஆகியவை அளித்த தரவுகளின் மூலமே தொகுக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களில் மட்டும் 1. 2018 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் 68,200 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் குஜராத்தில் உள்ள அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் 2988 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் மூன்று மாநிலங்களில் மட்டும் 71,188 ஆயிரம் கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

90 சதவீதம் என்னாச்சு?

2. இந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு புலனாய்வு மற்றும் போதைப்பொருள் தடுப்பு அமைப்புகளின் மூலம் மொத்தம் 16,860 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக தெரியலாம். ஆனால் பறிமுதல் செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களின் அளவோ வெறும் 7900 கிலோ தான். அப்படியெனில் உண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட மீதமுள்ள 90 சதவீதம் போதைப் பொருட்கள் என்னவானது எனும் கேள்விக்கு ஒன்றிய அரசிடமோ, அல்லது புலனாய்வு அமைப்புகளிடமோ பதில் இல்லை. 3. போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரத்யேகமாக பணியாற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு  (Narcotic Control Bereau) சுமார் 4000 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) குஜராத் முந்ரா துறைமுகத்தில் 2988 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் அறிவித்திருக்கிறது. இவை தவிர  எல்லைப் பாதுகாப்புப்படை, அஸ்ஸாம் ரைஃபில்ஸ், இந்தோ திபெத்தியன் எல்லை காவல், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை உள்ளிட்ட சில அமைப்புகள் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் அளவு சுமார் 900 கிலோ என கணக்கிடப்பட்டுள்ளது.

பின்னணி - மர்மம் என்ன?

4.  உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய குற்றப்பதிவு ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 71,188 கிலோ போதைப் பொருட்களில் சுமார் 10 சதவீதம் மட்டுமே இதுவரையிலும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அனைத்து வழக்குகளி லும் குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியெனில் மீதமுள்ள 90 சதவீதம் போதைப் பொருட்கள் என்னதான் ஆனது. அவை யார் வசம் உள்ளது.  5. இந்த போதைப் பொருட்களின் மதிப்பு  சுமார் 5 லட்சம் கோடிக்கு மேல் என சொல்லப்படு கிறது. அப்படி எனில் மலையளவு போதைப் பொருளையும் பல லட்சம் கோடிகளையும் உண்மையில் சுருட்டியது யார்? இவ்வளவு புலனாய்வு அமைப்புகள் இருந்தும் ஏன் உண்மையை கண்டறிய முடியவில்லை. இப்பிரச்சனைகளுக்குப் பின்னணியில் நீடிக்கும் மர்மம் தான் என்ன? 6. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் அளவு, பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலேயே இவ்வளவு ஓட்டை இருக்குமெனில் இன்னமும் கண்டறியப் படாமல் உள்ள போதைப் பொருட்கள் கடத்தல் குறித்தோ, அதற்கு பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள், அவர்களுக்கும் அதிகார மட்டத்திலிருப்பவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தோ வெளிப்படையாக தெரிய வில்லை. அதானிக்கு சொந்தமான ஒரு துறைமுகத்தில் மட்டும் சுமார் 3000 கிலோ  போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டி ருக்கிறது. இந்திய கடல் எல்லையில் ஒவ்வொரு 500 கி.மீ இடைவெளியிலும் அவரது கட்டுப்பாட்டில் ஒரு துறைமுகம் இருக்கிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்வது அவசியம்.  

நாட்டு மக்களின் சந்தேகம்

விடையில்லாமல் தொடரும் இத்தகைய கேள்விகள் நாட்டு மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாஜகவின் போதைப் பொருள் ஒழிப்பு எனும் முழக்கமும் ஒரு நாடகம் தானோ என எண்ணத் தோன்று கிறது. கருப்புப் பணத்தை மீட்போம்; கள்ளப் பணத்தை ஒழிப்போம் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் கரைந்து காணாமல் போனதைப் போலவே, போதைப் பொருள் ஒழிப்பும் இருக்கப் போகிறதா? வெளிநாட்டு சுவிஸ் வங்கியில் இருந்து பதுக்கப்பட்ட பணத்தை மீட்போம் என்றார்கள். ஆனால் உள்நாட்டு பாரத ஸ்டேட் வங்கியில் பதுக்கிய பணத்தை கூட  இவர்களால் நேர்மையாக வெளியில் சொல்ல முடியவில்லை. ஆனால் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வருவதை போல வாய்தான் காதுவரையிலும் நீள்கிறது.  மே ஹூ செளகிதார், அதாவது நான் தான் நாட்டின் காவலன் என்றும், இந்தியா தான்  என் குடும்பம் என்றும், அமுத காலம் பிறந்து விட்டதாகவும் வெற்று வார்த்தைகளை அள்ளித் தெளிக்கும் இவர்களால் மக்களுக்கான நிவா ரணத்தையும் வழங்க முடியவில்லை. கருப்புப் பணத்தை ஒழித்து கள்ளப் பணத்தையும் மீட்க முடியவில்லை. பெருகிவரும் போதைக் கலாச்சாரத்தையும் தடுக்க முடியவில்லை. பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங் களையும் நிறுத்த முடியவில்லை. ஆனால் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற ஆசை மட்டும் இருக்கிறது. ஏற்கெனவே இரண்டு முறை இவர்கள் ஆண்டதும் போதும், இவர்களால் மக்கள் மாண்டதும் போதும் என முடிவெடுத்து இவர்களை மூட்டை கட்டி அனுப்ப வேண்டிய மிக  முக்கியமான தருணம் இது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம்.