states

மாநில மொழிகளை காவு கொடுத்து இந்தியை தூக்கிப் பிடிப்பதா?

புதுதில்லி, அக்.13-  மாநில மொழிகளை காவு கொடுத்து இந்தியை தூக்கிப்பிடிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கம், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியைத் திணிப்பதை அனுமதியோம் என்று எதிர்ப்பும்  தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய விவசாயி கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் இயக்கம், “இந்தி, இந்து,  இந்துஸ்தான்” மற்றும் “கலாச்சார தேசிய வாதம்” என்கிற தன்னுடைய நிகழ்ச்சி நிரலை அமல்படுத்திட மோடி அரசாங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுத்திருப்பது, தேச விரோத மற்றும் அரசமைப்புச்சட்ட விரோதம் என்றும், இது நாட்டின் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரத்துடன் ஒன்றுபட்டு வாழ்ந்துவரும் பண்பை அழித்துவிடும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமையிலான ஆட்சி மொழி மீதான நாடாளு மன்றக் குழு (Committee of Parliament on  Official Language), நாட்டிலுள்ள தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத நிறுவனங்கள் அனைத்திலும் பயிற்று மொழியாக (medium of instruction), ஆங்கி லத்திற்குப் பதிலாக இந்தி மட்டுமே கட்டாய மாக (mandatorily) இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்குத் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் என்பதன் கீழ் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (IIMs-Indian Institutes of  Technology), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப்  டெக்னாலஜி (IITs-Indian Institute of Tech nology) மற்றும் ‘எய்ம்ஸ்’ (AIIMS-All India Institutes of Medical Sciences) ஆகியவை வருகின்றன. மத்தியப் பல்கலைக் கழகங்கள், கேந்திரியா வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா போன்றவை தொழில்நுட்பம் அல்லாத நிறுவனங்களின் கீழ் வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி பேசாத மக்கள் நுழைய முடியாதவாறு செய்திருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தக் குழு இவற்றுக்குத் தெரிவு செய்திடும் தேர்வு களில் கட்டாயமாக ஆங்கில மொழிக் கேள்வித் தாள்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.

இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் நாட்டு மக்கள் மத்தியில் காணப்படும் பல்வேறு வேற்றுமைப் பண்புகளிலும் உள்ள ஒற்றுமை யை வளர்த்தெடுக்கப்படும் என்று அர சமைப்புச்சட்டம் அளித்துள்ள உறுதி மொழி களையும், சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரிய மரபுகளையும் மறுதலிக்கிறது. . இதர  மொழிகளைக் காவு கொடுத்து இந்தி யைத் தூக்கிப்பிடிப்பது தேசிய ஒருமைப் பாட்டின் மீதான நேரடித் தாக்குதலாகும். பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் வளர்த் ர்த்தெடுக்கப்பட்ட அமித்ஷா, இந்தியர்களை இப்படி மொழி அடிப்படையில் பிரித்தாள முயல்வதும், இதன்மூலம் நாட்டையே பிளவு படுத்த முனைவதும் ஆச்சரியப்படக்கூடிய ஒன்று அல்ல.

மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையால் ஏற்கனவே நொந்து நூலாகிப் போயுள்ள விவசாயிகள் குடும்பங்களுக்கு இந்த நடவடிக்கையானது கடும் பாதிப்பை ஏற்படுத்திடும். விவசாய நெருக்கடியால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள விவ சாயக் குடும்பங்களில் உள்ள இளைஞர்கள், குறைந்த கட்டணத்தில் அரசு நிறுவனங்களில் கல்வி கற்று, அதன்மூலம் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் உள்ள நிறுவனங்களில் வேலைக்குச் செல்லலாம் என்று கருதிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பரிந்துரை கள் அமல்படுத்தப்பட்டால், அவர்களின் எதிர் காலக் கனவுகள் தகர்ந்து தரைமட்டமாகிவிடும்.   ஆர்எஸ்எஸ்ஸின் பாசிஸ்ட் சூழ்ச்சியை முறியடித்திட நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவி அழைக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தைத் தூக்கி எறிந்திட விடுதலைப் போராட்டத்தின் போது ஒன்றுபட்ட பல்வேறு தேசிய இன மக்களின் ஒற்றுமையையும் பாதுகாத்திட இது மிகவும் முக்கியமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளது. 

;