states

வர்க்க ஒற்றுமையை உயர்த்திப்பிடித்து, மதவெறி நடவடிக்கைகளை முறியடிப்போம்

புதுதில்லி/சண்டிகர், மே 4- வர்க்க ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்போம், வர்க்கப்போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம், மதவெறி நடவடிக்கை களை முறியடிப்போம் என்று சண்டிகரில் நடைபெற்ற சிஐடியு நிர்வாகக்குழுக் கூட்டம் அறைகூவல் விடுத்துள்ளது. சண்டிகரில் ஏப்ரல் 22-24 ஆகிய தேதிகளில் சிஐடியு-வின் நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய தலைவர் ஹேமலதா தலைமையுரை நிகழ்த்தினார். பொதுச் செயலாளர் தபன்சென்  வேலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். தலைமையுரை மற்றும்  பொதுச் செய லாளர் அறிக்கையில் ,  அமெரிக்காவிலும் பல்வேறு தரப்பு தொழிலாளர்கள் பல்வேறு போராட்ட வடிவங்களை மேற்கொள்கின்ற னர்.  இலங்கையில் ஜனாதிபதி பதவி விலக  வேண்டும் என்று கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை மக்களுக்கு உணவு, எரிபொருள், மருந்துகள் முதலானவைகள் கிடைக்காது பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இலங்கை தான் பின்பற்றி வந்த நவீன தாராளமயப் பொரு ளாதாரக் கொள்கையின் விளைவாகக் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. நடைபெற்றுவரும் உக்ரைன் யுத்தம் இந்நெருக்கடியை மேலும் தீவிரமாக்கி இருக்கிறது. உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கம்,  உலகில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் காரணமாக அதிகரித்துள்ள விலைவாசி உயர்வினை ஈடு செய்யும் விதத்தில் தங்கள் ஊதியமும் உயர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.  நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் நடத்தி வரும் போராட்டங்களின் விளைவாக பல நாடுகளில் மக்கள் ஆதரவுக் கொள்கைகளை அமல்படுத்தக்கூடிய விதத்தில் அரசாங்கங்கள் அமைந்துள்ளன. வெனிசுலா, நிகரகுவா, மெக்சிகோ, அர்ஜெண்டினா, பொலிவியா, ஹோண்டு ராஸ், பெரு, சிலி முதலான நாடுகளில் மக்கள் ஆதரவு அரசாங்கங்கள் அமைந்துள்ளன. கடந்த ஐம்பதாண்டு காலமாக நவீன  தாராளமயப் பொருளாதாரக் கொள்கை களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத் தின் விளைவாக இன்றைய தினம் சிலி நாட்டில் மக்கள் ஆதரவு இடதுசாரி அரசாங்கம் அமைந்துள்ளது. 

தொழிலாளர் வருமானம் வீழ்ச்சி

2008-2009 இல் ஏற்பட்ட உலகப் பொருளா தார நெருக்கடியிலிருந்து உலகம் இன்னமும் மீளாத நிலையில் கோவிட் தொற்று நெருக்க டியை மேலும் ஆழமாக்கியது. இதனைத் தொடர்ந்து பல நாடுகள் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகள் காரணமாக தொழிலாளர் களின் உண்மை ஊதியம் கிரேட் பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் முதலான நாடுகளில் வீழ்ச்சியடைந்தன.  2019-2020க்கு இடையே வேலை இழப்புகள் காரணமாக தொழிலாளர் வருமானம் 10.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இது 2021 மேலும் மோசமாகியது. முதலாளித்துவ நெருக்கடிக்குத் தீர்வு நவீன தாராளமயக் கொள்கைகளே என்று  உலக முதலாளித்துவம் கூறிவந்தபோதிலும்,  அது பரிதாபகரமான முறையில் தோல்வி யடைந்தது.  கொள்ளை லாபம் ஈட்டுவதை யேக் குறிக்கோளாகக் கொண்டுள்ள முத லாளித்துவக் கொள்கையால் மக்களின் பிரச்ச னைகளுக்கு தீர்வு காண முடியாது.   எனினும் இதற்கெதிராகத் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதற் காக அது, சாதி, மதம், இனம், பிராந்தியம் முதலியவற்றைச் சொல்லி அவர்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்திட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக அது தங்கள் நாடுகளில் உள்ள வலதுசாரி சக்தி களை ஊக்குவித்து வருகிறது.

நவீனதாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் உள்ளூர் மட்டத்தில் மட்டு மல்ல, தேசிய அளவில் மட்டுமல்ல, ரோம்  நகரில் மே 6-8 தேதிகளில் நடந்துகொண்டி ருக்கும் உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேள னத்தின் 18ஆவது மாநாடு அறிவித்திருப்பது போல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதுமாகும் என்று நிர்வாகக்குழு கூறியுள்ளது. மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றதைப் பாராட்டிய நிர்வாகக் குழு, அதற்காக தொழிலாளர் வர்க்கத்திற் கும் சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் கீழுள்ள விவசாயிகளுக்கும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தது. பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ் தலைமையின்கீழ் ஆட்சியில் உள்ள இந்துத்துவா சக்திகள் ஹிஜாப், ஹலால், அசான் என்ற பெயர்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதைக் கண்டித்துள்ள நிர்வாகக்குழு, இதற்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. இந்தப் பின்னணியில் நாட்டின் சொத்துக் களை, பணமாக்கல் திட்டத்தின் பேரில், சூறை யாடுவதற்கு எதிராகப் போராட வேண்டி யுள்ளது என்று  வலியுறுத்தியுள்ளது.

பெங்களூருவில் அகில இந்திய மாநாடு

“வர்க்க ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்போம், மதவெறி நடவடிக்கைகளை முறி யடிப்போம்” என்று தொழிலாளர் வர்க்கத் திற்கு அறைகூவல் விடுத்து நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதை எதிர்த்தும், இதற்கு எதிராக கேரள அரசா ங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள மக்கள் இயக்கத் தைப் பாராட்டியும் மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு-வின் 17ஆவது அகில இந்திய  மாநாட்டை  2023 ஜனவரி 18-22 தேதிகளில்  பெங்களூருவில் நடத்திடவும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.   (ந.நி.)