புதுதில்லி, செப்.12- கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை திட்டமிட்டபடி நடை பெறுகிறது என்று இந்திய ராணுவத் தள பதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக கடந்த 9-ஆம் தேதி லடாக் சென்ற ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே திங்களன்று தில்லி திரும்பினார். தில்லியில் மானெக்ஷா மையத்தில் நடைபெற்ற ராணுவத் தள வாடங்கள் குறித்த கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். அப்போது, லடாக்கில் தற்போது நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மனோஜ் பாண்டே, இரு நாட்டு ராணுவமும் ஒப்புக்கொண்டதற்கு இணங்க படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகக் கூறினார். லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய - சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அங்கு பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. அதேநேரத்தில், பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கிழக்கு லடாக்கின் முக்கிய முனைகளில் ஒன்றான கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதி யில் இருந்து இரு நாட்டு ராணுவமும் படைகளை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.