states

img

செங்குத்தான மலைச் சரிவில் விழுந்து நொறுங்கிய வாகனம் - 16 ராணுவ வீரர்கள் பலி

கங்டோக், டிச.23- சிக்கிமில்  ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 16 ராணுவ வீரர்கள் பலியான துயர சம்பவம் நேர்ந்துள்ளது. சிக்கிம் மாநிலம் சாட்டன் என்ற இடத்தி லிருந்து வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு தாங்கு என்ற இடத்திற்கு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு மூன்று டிரக்குகள் சென்றுள்ளன.  இதில் ஒரு டிரக் காலை 8.15 மணியளவில் செங்குத்தான மலைச்சரிவில் திரும்பும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று இளநிலை அதிகாரிகள் உட்பட 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் மாங்கன் மாவட்ட மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வு முடிந்தவுடன் சம்மந்தப்பட்ட ராணுவப்பிரிவுகளிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிலிகுரியில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டலப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் அதிர்ச்சி

ராணுவ வாகனம் விழுந்து 16 வீரர்கள் பலியான சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். வீரர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.