மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கடும் சாடல்
சென்னை, ஜூலை 2 - அரசியலமைப்புச்சட்டத்தின் அரிச்சுவடி கூட புரியாத நபர் ஒரு நிமிடம் கூட ஆளுநர் ரவி பதவியில் நீடிக்க தகுதியில்லை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கூறினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கே இல்லாத அதிகாரத்தின் மூலம் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கி னார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் பதிலடி கொடுத்தார். இதனால் பதற்றமடைந்து சில மணி நேரத்திலே நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்திவைப்பாக அறிவித்தார். அரசியலமைப்புச்சட்டத்தை மீறிய ஆளுநர் ரவியின் படுமோசமான நடவடிக்கை யை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் கண்டித்து தலையங்கங்கள் எழுதின. ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து மூத்த பத்திரிகையாளர் என்.ராம், தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது: பல மோசமான ஆளுநர்கள் இருந்திருக் கிறார்கள். நல்ல ஆளுநர்களும் இருந்திருக் கிறார்கள். அரசியலமைப்புச்சட்டத்திற்கு விரோத மாக செயல்பட்டுள்ளனர். ஆனால் தமிழக ஆளுநர் ரவி போல் யாரும் செயல்பட்டதாக தெரியவில்லை. பெரும்பான்மை அடிப் படையில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். முதலமைச்சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். ஆனால் அமைச்சர்களை ஆளுநரால் நியமனம் செய்ய முடியுமா? முடியாது. சட்டம் 164 (1) என்ன சொல்கிறது என்றால், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முத லமைச்சரை ஆளுநர் நியமிப்பார். அமைச்சர் களை முதலமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில்தான் நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆளுநர் தானாக அமைச்சர்களை நியமிக்கவோ, நீக்கவோ முடியாது.
விசித்திரமான காரியங்கள்
தமிழக ஆளுநர் ரவி பல விசித்திரமான காரியங்களைச் செய்திருக்கிறார். மாநிலத்தின் பெயரையே மாற்ற முயற்சித்தார். தமிழ்நாடு என்று அரசியமைப்புச்சட்டத்திலும் ஆட்சி அலு வல் ரீதியாகவும் பெயர் உள்ளது. ஆனால் தமிழகம் என்று மாற்றி அழைப்பிதழே அச்சடித் தார். தமிழகம் என்பது பேச்சுவழக்கில் சொல்லப் படுகிறது. ஆனால் மாநிலத்தின் பெயர் என்பது தமிழ்நாடு தானே. தமிழ்நாடு என்ற பெயர் பொருத்தமில்லை என ஆளுநர் பேசுவதே மோசமானது. ஆனால் அழைப்பிதழே அச்சடித்த தற்கு எதிர்ப்பு எழுந்தது. இப்படி செய்ய வேண்டாம் என்று ஒன்றிய அரசு கூறியதற்குப் பிறகே ஆளுநர் திருத்திக்கொண்டார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக் களை தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, அதில் கையெழுத்துப்போட்டு ஒப்புதல் தராமல் உள்ளார். இதன் மூலம் அந்த சட்டங் களை அமல்படுத்தவிடாமல் செய்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் ரவி என்னென்னமோ பேசுகிறார். திராவிட இயக்கத்திற்கு எதிராகப் பேசுகிறார். இப்படி பேசுவது ஆளுநரின் வேலையே கிடையாது.இது மோசமான நடவடிக்கை. ஒன்றிய பாஜக ஆட்சியின் கையாளாக ஆளுநர் ரவி செயல்படு கிறார். தமிழக அரசுடன் அடிக்கடி தகராறு செய்பவராக ஆளுநர் உள்ளார். மாநிலத்தை மதிக்காமல், அதன் அரசியல், கலாச்சாரத்தை மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார் என்று அவர் மீது தமிழக மக்களிடம் வெறுப்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
ஆளுநரின் வேலையா இது?
பிரான்ஸ் நாட்டில் ஒரு இளைஞரை அந்நாட்டு காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். அது போல் அரசியலமைப்புச்சட்டத்தின் மீது ஆளுநர் ரவி துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆளுநரின் அதி காரம் என்னவென்று எஸ்.ஆர்.பொம்மை, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. மாநிலத்தின் நிர்வாகத்தைப் பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவின்படியே செயல்பட வேண்டும். ஆளுநருக்கு தனியே அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது.ஆனால் தமிழக ஆளுநர் நேர்மாறாகச் செயல்பட்டுள்ளார். ஆளுநரின் ஒரிஜினல் கடிதம் எப்படி இருக்கிறது என்றால், வழக்கில் ஒருவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சி களை கலைத்துவிடுவார்; மிரட்டல் விடுப் பார் என்று சொல்வது போல் உள்ளது. ஆளு நரின் வேலையா இது. இவரே நீதிபதி போல பேசுகிறார்.
நகைப்புரிக்குரிய நபர்
தனது நடவடிக்கையின் மூலம் ராஜ் பவனே ஆளுநரைப் பார்த்து சிரிக்கக்கூடி யதாக ஆக்கிவிட்டார். அரசியலமைப்புச் சட்டத்தின் அரிச்சுவடி கூட புரியாமல் ஆளு நர் மேற்கொண்ட நடவடிக்கை இது. ஆளுந ரின் நடவடிக்கையை ஒருத்தர் கூட ஆத ரித்துப் பேசவில்லை.பத்திரிகைகளில் அப்ப டியொரு செய்தியும் இல்லை. அனைவரும் எதிர்த்துள்ளனர்.இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு மோசமாக செயல் பட்ட, மக்களால் சிரிக்கக்கூடிய நபராக மாறிய ஆளுநரை இதுவரை நான் பார்த்த தில்லை. தமிழகத்தில் தகராறு செய்து, பாஜக வுக்கு ஆதரவாக, செயல்படுவதுதான் ஆளு நர் ரவியின் திட்டம். ஆனால் அவரது நட வடிக்கைகள் நேர்மாறாகப் போகிறது.பாஜக வுக்கு ஆதரவாக செய்யும் செயலுக்கு அதிக எதிர்ப்பும் வெறுப்பும்தான் எழுகிறது. தமி ழக ஆளுநர் ரவியை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். இத்தகைய செயலுக்குப் பிறகு ஒரு நிமிடம்கூட அவர் பதவியில் தொட ருவதற்கு தகுதியில்லை. இவர் தொடர்ந்து இருந்தால் ஒன்றிய அரசுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும்.
தகராறு செய்யும் திட்டத்துடன்...
தென்மாநிலங்களுக்கு ஆளுநர்களை ஒரு திட்டத்துடன் ஒன்றிய அரசு அனுப்பி யது போலத்தான் தெரிகிறது.தகராறு செய்வ தற்குத்தான் வந்துள்ளனர். தென்மாநிலங்க ளில் எதிலும் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லை. கர்நாடகத்தில் தோல்வியுற்று எதிர்க் கட்சியாகத்தான் உள்ளது.இந்த தென்மாநிலங்கள், பாஜகவுக்கு எதுவும் கிடைக்காத பாலைவனமாக அவர்களுக்குத் தெரிகிறது. இதனால் இதுபோன்ற செயல் களில் ஈடுபடுகின்றனர். ஆனால் எந்த பல னும் இல்லை. ஒன்றிய அரசுக்கு தெரியாமல் தமிழக ஆளுநர் இப்படி செய்வாரா? என்ற கேள்வி கூட எழுந்துள்ளது. இதுகுறித்து ஆராய வேண்டும். தமிழக ஆளுநரால் அமைச்சரை நீக்க முடியாது. ஒரு அமைச்சரை இவர் நிய மித்துப் பார்க்கட்டுமே. பாஜக அண்ணா மலை சொல்லும் நபரை அமைச்சராக நிய மித்துப் பார்க்கட்டுமே. அப்படி செய்தால் ஆளுநர் மேலும் மக்களால் சிரிக்கக்கூடிய நப ராக ஆகிவிடுவார். இப்படிப்பட்ட ஆளு நர்களை அரசியல்ரீதியாகத்தான் எதிர் கொள்ள வேண்டும்.
பக்குவமாக செயல்படும் தமிழ்நாடு, கேரள அரசுகள்
கேரளா, தமிழ்நாடு முதலமைச்சர்கள் நிதானமாக சிந்தித்து, ஆளுநரின் நட வடிக்கைகளை எதிர்கொள்கின்றனர். ஆளு நர்களுடன் மோதல் போக்கை கடைப் பிடிப்பதில்லை. நீதிமன்றங்களுக்கும் கொண்டுசென்று தீர்வுகாண வேண்டும். ஆளுநரின் நடவடிக்கை குறித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, போராட்டங் களையும் நடத்த வேண்டும். தமிழ்நாடும் கேரளாவும் ஒன்றிய அரசை எதிர்ப்பதில் உறு தியாக இருக்கின்றன. ஆனால் அரசுரீதியாக பக்குவமாகச் செயல்படுகின்றன. ஒன்றிய அரசை எதிர்க்கும் கட்சிகளின் செயல்பாடுகளை திசைதிருப்ப ஆளுநர்கள் இதுபோன்று செயல்படுகின்றனர். மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயல் கின்றனர். இதுதான் அவர்களின் நோக் கம். இவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசின் பொம்மை கள்தான் ஆளுநர்கள். அமைச்சரை நீக்கிய விஷயத்தில் ஆளுநர் செய்தது சரியல்ல என்று ஒன்றிய அரசு புரிந்துகொண்டதா கத்தான் தெரிகிறது. ஒன்றிய அரசிடம் கேட்கா மல் ஆளுநர் செய்திருக்க வாய்ப்புண்டு. எது வாயிருந்தாலும் உண்மை வெளிவந்து விடும்.ஆளுநருக்கு நல்ல அதிகாரிகள் உள்ளனர்.அவர்களிடம் கேட்டிருந்தால் கூட ஆலோசனை கூறியிருப்பர். மாநிலத்தில் உள்ள அட்வகேட் ஜெனரலிடம் கூட ஆலோ சித்திருக்கலாம். ஆனால் ஒருசில வெளி நபர்கள் ஆளுநர் மற்றும் ஆளுநர் மாளிகை யில் அதிகாரம் செலுத்துவதாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தொகுப்பு: எஸ்.உத்தண்ட ராஜ்