states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சத்யேந்திர ஜெயினுக்கு 6 வாரம் இடைக்கால ஜாமீன்

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி  கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயின், குளியலறையில் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் லோக் நாயக் மருத்துவமனை யில் அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சத்யேந்திர ஜெயினின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு உடனடியாக முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு 6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

ராகுலுக்கு புதிய பாஸ்போர்ட்; தில்லி நீதிமன்றம் அனுமதி

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியை இழந்த ராகுல் காந்தி தனக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கொண்ட  தூதரக பாஸ்போர்ட்டைத் திருப்பி ஒப்படைத்தார். பின்னர் தனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க அனுமதி வேண்டும் என்று தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதை எதிர்த்து  பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணிய சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இரண்டு தரப்பையும் விசாரித்த மாஜிஸ்திரேட் வைபவ் மேத்தா,  ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட மனுவை அனுமதித்து உத்தரவிட்டார்.

மோடியின் அகந்தை : கார்கே கண்டனம்

“மோடி அவர்களே, நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் திருக்கோவில். இது  மக்களால் உருவாக்கப்பட்டது. இதில், குடியரசுத் தலைவர் அலுவலகம், நாடாளு மன்றத்தின் முதல் அங்கம். ஆனால், உங்கள் (பாஜக) அரசின் அகந்தை, நாடாளுமன்ற அமைப்பையே அழித்து விட்டது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைப்பதில் குடியரசுத் தலைவரின் சிறப்பு உரிமையைப் பறித்து எடுத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் காட்ட விரும்புவது என்ன? இதைத்தான் 140 கோடி இந்தியர்களும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்” என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அசோகர், அக்பர் மட்டுமே பேரரசர்கள்; மோடி திறப்பாளர்..

“ராஞ்சியில் நாட்டின் மிகப்பெரிய நீதித்துறை வளாகத்தை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற வளாகத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்துள்ளார். ஆனால், ஒற்றை மனிதரின் (மோடியின்) ‘எல்லாம் நானே’ என்ற அகந்தையும், ஆசையும், தில்லியில் 28-ஆம் தேதி  நாடாளுமன்றக் கட்டடத்தை நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் திறந்து வைக்கும் அரசியல் சாசன சிறப்புரிமையை மறுக்கிறது. ‘அசோகர் தி கிரேட்’, ‘அக்பர் தி கிரேட்’ வரிசையில் மோடி தி இனா’கிரேட்’ (Inaugurate - திறப்பாளர்)” என்று காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

“நாடாளுமன்ற கட்டடம் பாஜக அலுவலகம் அல்ல”

“புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் நான் கலந்து கொள்வேன். முன்னாள் பிரதமராகவும், நாட்டின் குடிமகனாகவும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன். நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அந்த பிரம்மாண்ட கட்டடம் நாட்டுக்கே சொந்தமானது. அது நாட்டின் சொத்து. இது யாருடைய தனிப்பட்ட விஷயமும் அல்ல. அந்தக் கட்டடம் பாஜக அல்லது  ஆர்எஸ்எஸ் அலுவலகம் அல்ல. அதேநேரம் குடியரசுத் தலைவர் முர்மு மாநிலத்தின் தலைவர் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த அங்கம் என்பதால் அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்” என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரு மான தேவ கவுடா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் உதய தினம் கொண்டாட்டம்! 

“தெலுங்கானா மாநிலத்தின் 10-ஆம் ஆண்டு உதய தினத்தை 21 நாட்கள் கொண்டாட அம்மாநில அரசு  முடிவு செய்துள்ளது. இதன்படி ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தின் அடிப்படையில் விழா கொண்டாடப்படும். ஜூன் 2-ஆம் தேதி ஹைதரா பாத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, தியாகிகளுக்கு முதல்வர் சந்திரசேகரராவ் அஞ்சலி செலுத்தி விழாவை தொடங்கி வைக்கிறார்.

இபிஎஸ் மீது வழக்கு:  நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

சேலம், மே 26- கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சொத்து விவரங் களை மறைத்ததாக கூறி எட ப்பாடி பழனிசாமி மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.  அதன் அறிக்கை வெள்ளி யன்று (மே 26) நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நடை பெற்ற சட்டமன்றத் தேர்த லில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொத்து விபரங்களை மறைத்து காட்டியதாக நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகார் மீது முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விசாரணை அறிக் கையை மே 26 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இதன் படி, சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை யின் அறிக்கையை மே 26 அன்று சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்டது.


 

;