சென்னை,செப்.25- தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக அறிவித்து நிதி ஒதுக்கி உள்ளதை இந்திய மாணவர் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மாணவர் சங்கம் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றிட கோரி, பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. கடந்த அதிமுக அரசு இத்தகைய பல்கலைக்கழக கல்லூரி களை அரசு கல்லூரிகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தற்போது திமுக அரசு உறுப்பு கல்லூரி களை அரசு கல்லூரிகளாக அறிவித்தும் அதற்கான அரசாணை வெளியிட்டும், 41 கல்லூரிகளுக்கும் ரூ.152 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் கல்லூரிகளில் மாணவர்களிடம் ரூ. 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை கல்வி கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இத்தகைய அநியாய கட்டண வசூலை எதிர்த்தும் இந்திய மாணவர் சங்கம் கடுமையாக போராடி வருகிறது. தற்போது அரசு கல்லூரிகளாக அறிவித்துள்ள நிலையில் கூடுதலாக வசூலித்த அனைத்து தொகையும் மாணவர்களிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும். மேலும் 41 கல்லூரிகளிலும் பணியாற்றிய பேரா சிரியர்கள் மற்றும் பணியாளர்கள் குறித்தும் உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.