states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கர்நாடகத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவை ஒட்டியுள்ள ராம்நகரில் சனிக்கிழமை அதி காலை 5.30 மணியளவில் அடுத்தடுத்து மூன்று நில அதிர்வுகள் உணரப்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ராம்நகர் தாலுகாவில் மழை பெய்ததால், மக்கள் நில  அதிர்வுகளை உணர்ந்தனர். பெஜ்ஜரஹள்ளிகட்டே, படரஹள்ளி ஆகிய கிராமங்களில் நிலநடுக்கப்  பாதிப்பு அதிகமாக உணரப்பட்டதாக நில அதிர்வு மையம் கூறியுள்ளது. எனினும், நிலநடுக்கத் தால் ஏற்பட்ட பொருட் சேதம் மற்றும் உயிர்ச் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

செப்.15-க்குள் கியூட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

நாடு முழுவதுமுள்ள 44  ஒன்றிய அரசின் பல்கலைக் கழகங்கள், 12 மாநில பல்கலைக் கழ கங்கள் உட்பட மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் 2022-23 கல்வியாண்டு முதல்  ‘கியூட்’ (cute) என்ற பொது நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறி விக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை 15 ஆகஸ்ட் 30 வரை தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள்ளாகவோ அல்லது அதற்கு 2 நாள்கள் முன்ன தாகவோ தேர்வு முடிவை வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) தெரிவித்துள்ளது.

ராகுலை வரலாறு படிக்கச் சொல்லும் அமித்ஷா

“நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையை ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசமே இல்லை என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். ராகுல் , இதை நீங்கள் எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? லட்சக்கணக்கான மக்கள் வாழும் தேசம் இது. தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். ராகுல் காந்தி பாரதத்தை இணைக்க சென்றுள்ளார், ஆனால் அவர் இந்திய வரலாற்றை படிக்க வேண்டும்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜோத்பூரில் பேசியுள்ளார்.

உ.பி. + பீகார் = மோடி அரசு வெளியேற்றம்!

ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷூம் வெள்ளிக்கிழமையன்று நேரில் சந்தித்து உரையாடியதையொட்டி சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளில் உ.பி.யில் 80 எம்.பி. தொகுதிகள், பீகாரில் 40 தொகுதிகள் என மொத்தம் 120 எம்.பி. தொகுதிகள் இருப்பதால், இவ்விரு மாநிலங்களும் இணைந்தால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்பதை குறிக்கும் வகையில், “உத்தரப் பிரதேசம் + பீகார் = மோடி அரசு வெளியேற்றம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

4 மடங்கு கூட்டம் வருமாம்; குலாம் நபி சொல்கிறார்

“நான் காங்கிரஸில் பேசும்போது வந்த கூட்டத்தை விட தற்போது பேசினால் 4 மடங்கு அதிக மானவர்கள் வருவார்கள்” என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். “நான் ஜம்மு வில் சுமார் 400 பேரை சந்தித்து இருக்கிறேன். 30-35 சட்டப்பேரவை பிரதிநிதிகளையும் சந்தித்துள்  ளேன். நான் எந்த கட்சியை தொடங்கினாலும் அவர்கள் எனக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ள னர். நான் காங்கிரஸில் பேசும்போது வந்த கூட்டத்தை விட தற்போது 4 மடங்கு அதிகமானவர்கள் வருவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கையில் மாற்றம் தேவை!

“தேசியக் கல்விக் கொள்கை 2020-ல் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. அதில் சில  புள்ளிகள் இணைக்கப்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020-இல் மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக நாங்கள் கண்டறிந்துள்ளோம். எனவே புதிய கல்விக்கொள்கையை தில்லியில் உடனடியாக அமல்படுத்த முடியாது” என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோ டியா ஆசிரியர்கள் மத்தியில் கூறியுள்ளார்.

மஹூவா மொய்த்ராவிற்கு ‘தடை’ போட்ட மம்தா!

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களில் பிரபலமான முகமாக வலம் வருபவர் மஹூவா மொய்த்ரா. இவருக்கு கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தடை  விதித்துள்ளார்.  “தனது சொந்த தொகுதிக்கு அப்பால் கட்சியின் விவகாரங்களில் தலையிடும் போது மஹூவா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கும் மம்தா, “கரீம்பூர் இனி  மஹுவாவின் அதிகார வரம்பு அல்ல. அது அபு தாஹரின் கீழ் உள்ளது. அவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் உங்கள் தொகுதியை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் தேர்தல்: காங். எம்.பி.க்கள் கோரிக்கை

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ஆம் தேதி தேர்தல் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சித் தலைமையைத் தேர்ந்தெ டுக்கும் தேர்தலில் வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் தேவை என சசி தரூர் உள்பட ஐந்து  காங்கிரஸ் எம்.பி.க்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். செப்டம்பர் 6 தேதியிடப்பட்டு இந்த கூட்டுக் கடி தத்தை சசி தரூர், கார்த்தி சிதம்பரம், ப்ரத்யூதி போர்டோலோய், அப்துல் காலீக், மணீஷ் ஆகி யோர் எழுதியுள்ளனர்.

ராஜஸ்தானில் நகர்ப்புற 100 நாள் வேலைத் திட்டம்!

நாடு முழுவதும், கிராமப்புற வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசின் சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதேபோல், நகர்ப்புறங்களிலும் வேலை வாய்ப்பு இல்லாத மக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் நகர்ப்புற வேலைவாய்ப்பு என்ற திட்டத்தை ராஜஸ்தான் அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்துக்கு ‘இந்திரா காந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்,’ என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் அசோக் கெலாட் வெள்ளியன்று தொடங்கி வைத்துள்ளார்.

மழைநீர் குட்டையில் மூழ்கி சிறுமிகள் பலி

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த அத்திபலகானூரில் உள்ள மழைநீர் குட்டையில் மூழ்கி 10-ஆம் வகுப்பு படிக்கும் ஜனனி, ரத்னா ஸ்ரீ என்ற 2 சிறுமிகள் உயிரிழந்தனர்.

ஜல் ஜீவன் திட்டம்:   முதலமைச்சர் ஸ்டாலின்  ஆய்வு

சென்னை, செப். 10- ஜல் ஜீவன் திட்டம் குறித்து  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறை யன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் சிவ் தாஸ்  மீனா, நா.முருகானந்தம், பெருநகர சென்னை  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு நகரம்: இடம் தேர்வு

சென்னை, செப்.10- சென்னையில் செய்தியா ளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், “தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு போட்டிகள், சர்வதேச போட்டிகளில் வெற்றி வாகை சூட,  உலகத் தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த  சென்னைக்கு அருகில் பிர மாண்டமான விளை யாட்டு நகரம் அமைக்க  செங்கல்பட்டு மாவட்டத் தில் 500 ஏக்கர் நிலம் தேர்வு  செய்யும் பணிகளை அரசு  தொடங்கி உள்ளது”என்றார். முதற்கட்டமாக 150  ஏக்கரில் பணிகள் தொடங் கும். இதன் மூலம், தமிழ்  நாட்டை சார்ந்த வீரர்கள்  சர்வதேச தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள். விளையாட்டுத்துறையில் பல்வேறு புதுமையான திட்டங்கள் கொண்டு வர இது உறுதுணையாக அமை யும் என்றும் அமைச்சர் கூறினார்.

தொழில் முனைவோர்க்கான  விழிப்புணர்வு  கருத்தரங்கம்

சென்னை, செப்.10- தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் இணையவழி பயிற்சி வரும் 13ஆம் தேதி  காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. இம் முகாமில் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18-30 வயதிற்கு உட்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி என தொழில் துவங்க விருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை  பற்றி இம் முகாமில் விளக்கப்படும்.  பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்கஞ விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்டப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். மேலும்விவரங்களுக்கு: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க  நிறுவனம்,  தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்: 044-22252081, 22252082   8668102600, 9444557654.

பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு

சென்னை, செப். 10- நீட் தேர்வினால் ஒத்தி வைக்கப்பட்ட  பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு சனிக்கிழமை (செப் 10) தொடங்கியது. நவம்பர் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும். கட் - ஆப்  மதிப்பெண் 184 முதல் 200  வரை உள்ள 14,524 பேர் முதல் சுற்று  கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். அதோடு 332 அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் சுற்று  கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப்பட்டபின்,  வரும் 22ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில்  சேர வேண்டும். 22-ம் தேதிக்குள் கல்லூரி களில் சேராவிட்டால் அந்த இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும். மேலும் இது குறித்து www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


 

 

 


 

 

;