states

img

ஜம்மு-காஷ்மீரில் 16 மணி நேர மின்வெட்டு

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் 16 மணி நேர மின் வெட்டால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  இந்த மின்வெட்டு துயரத்தை காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் எல்லையில் ஜம்முவிற்கு அருகிலுள்ள கிஷ்த்வார் மாவட்ட மக்கள் அனுபவித்து வருகின்றனர்.  மேலும் 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பள்ளத்தாக்குப் பகுதியில் 12 மணி நேரம் முதல் 16 மணிநேர மின்வெட்டு உள்ளதாகவும் கடந்த இருபது ஆண்டுகளில் இது போன்றதொரு மின்வெட்டை சந்தித்ததில்லை என்கின்றனர் பள்ளத்தாக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள். குறிப்பாக பள்ளத்தாக்கில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசுக்குக் கீழே சென்றுள்ள நிலையில் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.  காஷ்மீருக்கு நாளொன்றுக்கு பொதுவாக 2,200 மெகாவாட் முதல் 2,300 மெகாவாட் மின்சாரம்  தேவைப்படுகிறது.

குறைந்தபட்சம் 16 மணிநேரம் மின்சாரம் வழங்க 1,800 மெகாவாட் தேவைப்படுகிறது. 16 மணி நேர மின்வெட்டால் குறிப்பாக நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் கடும் பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளனர். எதிர்வரும் நாட்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.  இப்பிரச்சனை குறித்து ஸ்ரீநகர் லால் பஜாரைச் சேர்ந்த  ஷோரூம் உரிமையாளர் இம்தியாஸ் கான் கூறுகையில், எனது தந்தைக்கு வயது 70. நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். மின்வெட்டைத் தொடர்ந்து அவரைப் பாதுகாக்க ஜெனரேட்டர் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் மூலம் அவருக்கு ஆக்ஜிசன் பற்றாக்குறை யின்றி கிடைக்கிறது. என்னைப் போல் அனைத்துக்  குடும்பங்களாலும் ஜெனரேட்டர்களை வாங்க முடியும் என்று  நான் நினைக்கவில்லை. நீடித்த மின்வெட்டு என் தந்தை யைப் போன்ற நோயாளிகளுக்கு “மரண மணியாக இருக்கிறது” என்றார். மின்வெட்டால் ஆண்டு இறுதித் தேர்விற்கு தயாராகி வரும் மாணவ-மாணவிகளும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த காலங்களில் நாளொன்றுக்கு 200-250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலை யில், குளிர்காலத்தில் நாளொன்றுக்கு 50 முதல் 100  மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்துள் ளது. பற்றாக்குறையைச் சமாளிக்க, வடக்கு மின்தொகுப்பி லிருந்து அரசு 1,150 மெகாவாட் மின்சாரத்தை வாங்கினாலும். இன்னும் 800 மெகவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது.

மின்வெட்டு ஒரே நாள் இரவில் ஏற்பட்டதல்ல. மின்வெட்டு  ஏற்படும் என்பதை கணிக்க அரசு தவறிவிட்டது. தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கம் இருந்திருந்தால், இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டிருக்காது. பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும். மின்வெட்டு பள்ளத்தாக்கு மக்களுக்கு இழைக்கப்பட்ட தண்டனை என்று தான் கூற வேண்டும். மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் ஒன்றிய அரசிற்கு  உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். மின்வெட்டை சீர்செய்யக்கோரி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து, ஒரு வாரத்தில் நிலைமை சீராகும் என எதிர்பார்ப்பதாகவும், குளிர்காலம் ஆரம்பமாகிவிட்டதால் தேவை திடீரென அதி கரித்துள்ளதாகவும் இதனால் திட்டமிட்ட காலவரையறை பின்பற்றப்பட முடியவில்லை என்கிறார்  காஷ்மீர் பிரிவு மின்வாரிய ஆணையர் விஜய் குமார் பிதுரி.  பள்ளத்தாக்கில் மருத்துவமனைகள் மின்வெட்டின் பாதிப்பை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில் காஷ்மீருக்கு வடக்கு மின்தொகுப்பிலிருந்து  மின்சாரம் வாங்குவதற்கு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ஒரு குழுவை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 காஷ்மீர்  தான் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மின் தடைகளைக் கொண்ட மோசமான மாநிலம் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டுள்ளதாக அங்கிருந்து வெளிவரும் “கிரேட்டர் காஷ்மீர்” செய்தி வெளியிட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் மாகாணத் தலைவர் நசீர் அஸ்லம் வானி சோகாமி, கூறுகையில் “காஷ்மீர்  மிக மோசமான மின் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. காஷ்மீர் முழுவதும் நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் முதல் 10 மணிநேரம் வரை  ஏற்படுத்தப்படும் மின்வெட்டால் மக்கள் கோபத்தில் உள்ளனர்” என்றார். இந்தநிலையில், இந்திய தொழிற்சங்கமையம் (சிஐடியு) மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஸ்ரீநகரில் அரசாங்கத்தின் விவசாய விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்தில் பேசிய,  சிஐடியு காஷ்மீர் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான  எம்.ஒய்.தாரிகாமி, “கடந்த இருபதாண்டு களில் இல்லாத அளவுக்கு காஷ்மீர் மிக மோசமான மின் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. பள்ளத்தாக்கு கடுமையான மின் பற்றாக்குறையால் தத்தளிக்கிறது,  வெப்பநிலை பூஜ்ஜிய நிலைக்கு குறைந்த நேரத்தில் நீண்ட மற்றும் திட்டமிடப்படாத மின்வெட்டுகளால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மருத்துவ மனைகள்  நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. மின்வெட்டால் சிறு-குறு தொழில்கள் உட்பட பிற முக்கியமான துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார். மாநிலத்தில் ஒரு “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருந்திருந்தால் இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டிருக்காது. பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என்கிறார் ஜே& கே அப்னி கட்சியின் தலைவர் அல்தாஃப் புகாரி.