புதுதில்லி, செப். 22 - நாடு முழுவதும், வியாழனன்று ஒரே நாளில் ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ மற்றும் அதனுடன் இணைந்த எஸ்டிபிஐ அமைப்பின் அலுவலகங்கள், அதன் நிர் வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 15 மாநிலங்களில் 93 இடங்களில் ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனை யில், ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’, ‘எஸ்டிபிஐ’ அமைப்புகளின் நிர்வாகிகள் 106 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ என்பது இந்தியாவில் செயல்படும் அமைப்பு களில் ஒன்றாகும். இஸ்லாமியர்கள் பெரு மளவில் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று சங்-பரிவாரங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இந்த பின்னணியிலேயே, தேசிய புலனாய்வு முகமை, உளவுத்துறை மற்றும் அமலாக்கத்துறையைச் சேர்ந்த 200 அதி காரிகள் தமிழ்நாடு உள்பட 15 மாநிலங் களில் உள்ள ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ மற்றும் எஸ்டிபிஐ-யின் அலுவல கங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றுள்ளது.
பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்த்தல், பயிற்சி நடத்து தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாகவும், இந்தப் பணியின்போது, குற்ற ஆவ ணங்கள், 100-க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக வும் கூறப்படுகிறது. அத்துடன், இந்த சோதனையை ஒட்டி, ஆந்திராவில் 5 பேர், அசாமில் 9 பேர், தில்லியில் 3 பேர், கர்நாடகத்தில் 20 பேர், கேரளத்தில் 22 பேர், மத்தியப் பிரதேசத்தில் 4 பேர், மகாராஷ்டிராவில் 20 பேர், புதுச்சேரி யில் 3 பேர், ராஜஸ்தானில் 2 பேர், தமிழ் நாட்டில் 10 பேர், உத்தரப் பிரதேசத்தில் 8 பேர் என ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பைச் சேர்ந்த 106 நிர்வாகிகள் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. தங்கள் அமைப்பு மீதான என்ஐஏ, அமலாக்கத்துறை சோதனைக்கு ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்ததுடன், உடனடியாக நாடு முழுவதும் ஆங்காங்கே எதிர்ப்பு போராட்டங்களிலும் இறங்கினர். இதையடுத்து, சோதனை நடைபெறும் இடங்களில் சிஆர்பிஎப் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், உள்துறைச் செயலாளர், என்ஐஏ இயக்கு நர் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.