states

img

சபரிமலை வருவாய் ரூ.357.47 கோடி

சபரிமலை, ஜன.20- இந்த ஆண்டு சபரிமலையில் மண்டல் மற்றும் மகர விளக்கு சீசனில் கிடைத்த மொத்த வருவாய் ரூ.357.47 கோடி (ரூ.357,47,71,909) என்று தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தார்.  கடந்த ஆண்டு வருவாய் ரூ.347.12 கோடியாக இருந்தது (ரூ.347,12,16,884). இந்த ஆண்டு 10.35 கோடி (ரூ. 10,35,55, 025) கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

அரவணா விற்பனையில் 146 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 700 ரூபாயும், அப்பம் விற்பனையில் 17 கோடி யே 64 லட்சத்து 77 ஆயிரத்து 795 ரூபாயும் கிடைத்துள்ளது.

காணிக்கையாக கிடைத்த தொகை இன்னும் கணக்கிடப்பட வில்லை. இதன் மூலம் குறைந்தது ரூ.10 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். 

கூடுதலாக  5 லட்சம் பக்தர்கள் வருகை 

இந்த ஆண்டு பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. இம்முறை சபரிமலைக்கு 50 லட்சம் (50,06412) பக்தர்கள் சென்றுள்ளனர். கடந்த சீசனில் 44 லட்சமாக (44,16,219) இருந்தது. இம்முறை கூடுதலாக ஐந்து லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.  

இந்த ஆண்டு சீசன் தொடங்குவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பே ஆயத்தப் பணிகள் தொடங்கின. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் பல்வேறு துறைகளின் கூட்டம் நடத்தப் பட்டு முன்னேற்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. பின்னர் தேவஸ்வம் அமைச்சர் தலைமையில் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அனைத்துத் துறை களின் நேர்மையான ஒருங்கிணைப்புடன், இந்த ஆண்டு புனித பயணத்தை அழகாக நிறைவு செய்ய முடிந்தது. அரசியல் நோக்கத்திற்காக சில தீய சக்திகள் பொய்ப் பிரச்சாரம் செய்ய  முயன்றதாகவும், ஆனால் அவற்றை பொய்யாக்கி பயணத்தை எளிதாக்க முடிந்தது என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டுகளை விட இம்முறை தூய்மையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக நிலக்கல்லில் 1,100, பம்பையில் 500 கொள்கலன் கழிப்பறைகள் அமைக் கப்பட்டன. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் சாலையில் சுமார் 1,200 கழிப்பறைகளும் அமைக்கப்பட்டன. இம்முறையை விட அடுத்த ஆண்டு வசதிகள் மேலும் சிறப்பாக இருக்கும் என்று தேவசம்போர்டு தலைவர் தெரிவித்தார்.