லக்கிம்பூர் விவசாயிகள் சென்ற பேரணியில் கார் நுழைந்தது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் விவசாயிகள் சென்ற பேரணியில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் ஒரு பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து,இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரை உச்சநீதிமன்றம் நியமித்தது. மேலும் 3 மூத்த போலீஸ் அதிகாரிகளையும் சிறப்பு புலனாய்வு குழுவுடன் சேர்த்தது
இந்நிலையில், லக்கிம்பூர் கெர்ரி விவசாயிகளின் போராட்டத்தில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும், மாறாக எதார்த்தமாக நடந்தவை அல்ல என்றும் இதனை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட கைது செய்யப்பட்ட 13 குற்றவாளிகள் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும் இக்குழு உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது.