பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் நீர்வளத் துறையில் லஞ்சம், ஊழல் புகார் எழுந்துள்ளது. இந்த புகார் தெரிவித்த அமைச்சர் தினேஷ் கத்திக் தலித் என்பதால் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி தனது ராஜினாமா கடிதத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அனுப்பியுள்ளார்.
உ.பி.யின் மீரட் மாவட்டம் அஸ்தினாபூர் தொகுதி பாஜக எம்எல்ஏ தினேஷ் கத்திக். தலித் சமூகத்தவரான இவருக்கு மாநில நீர்வளத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அமைச்சர் தினேஷும் தன் தந்தையை போல், சிறு வயது முதல் பாஜக.வின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கில் இருந்தவர். இவர் நேற்று திடீரென பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஆதித்யநாத் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பிவிட்டார்.
ஆனால் மாநில அரசு அமைச்சர் தினேஷின் ராஜினாமாவை உறுதிசெய்யவில்லை. மேலும், தனது புகார் மற்றும் ராஜினாமா கடிதத்தை மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதம் சமூகவலைதளங்களில் வைரலானது.
தினேஷ் கத்திக் தனது கடிதத்தில், ‘‘என் நிர்வாகத்தின் கீழ் உள்ள நமாமி கங்கா திட்டத்தின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணியிட மாற்றத்துக்காக பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளனர். இதுகுறித்து நான் பிறப்பித்த உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை. இந்த விவரங்களை கேட்க நான் முதன்மை செயலாளர் அணில் கர்கிற்கு போன் செய்து பேசினேன். அவர் விளக்கம் அளிக்காததுடன், பாதியில் இணைப்பை துண்டித்தார். நான் தலித் என்பதால் உயரதிகாரிகள் மதிப்பதில்லை, அரசு கூட்டங்களுக்கும் அழைக்காமல் புறக்கணிக்கின்றனர். எனவே, நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது புகார்கள் மீது நீங்கள் எந்த அமைப்பின் சார்பில் வேண்டுமானாலும் விசாரணை நடத்தி உண்மையை அறியலாம்’’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், உ.பி.யில் தொடர்ந்து 2-வது முறை யோகி ஆதித்யநாத் முதல்வரானது முதல் அதிகாரிகள், அலுவலர்கள் பணியிட மாற்றங்களை உயரதிகாரிகள் மூலம் நேரடியாக செய்வதாக கூறப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை கலந்து ஆலோசிக்காததுடன், அவர்களது அதிகாரம் பறிக்கப்படுவதாகவும் புகார்கள் உள்ளன.