states

img

அகிலேஷ்யாதவ் குறித்த அவதூறு கருத்து: பேஸ்புக் சிஇஓ மார்க் ஜக்கர்பெர்க் மீது வழக்கு பதிவு

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குறித்து அவதூறு கருத்து வெளியான விவகாரத்தில் பேஸ்புக் சிஇஓ மார்க் ஜக்கர்பெர்க் உட்பட 49 பேர் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த இவர் கடந்த மே மாதம், தாடியா காவல் நிலைய போலீஸ் கண்காணிப்பாளர் பெயரை குறிப்பிட்டு ஒரு புகாரை தபாலில் அனுப்பி வைத்தார்.
அதில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குறித்து Bua Babua என்ற பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக எழுதியுள்ளதாகவும் இது தொடர்பாக பேஸ்புக் சிஇஓ மார்க் ஜக்கர்பெர்க் உட்பட 49 பேர் மீது புகார் தெரிவித்திருந்தார். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால் போலீசார் புகாரை கண்டுகொள்ள வில்லை.
போலீசார் கண்டுகொள்ளாததை அடுத்து, கன்னோஜ் மாவட்ட நீதிமன்றத்தில் குமார் வழக்குத் தொடர்ந்தார். தனது புகார் குறித்து வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். விசாரித்த நீதிமன்றம், தாடியா போலீசுக்கு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து முதலில் மார்க் ஜக்கர்பெர்க் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், பின்னர் அவர் பெயரை நீக்கிவிட்டு பேஸ்புக் நிர்வாகி என சேர்த்துள்ளனர்.
அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டணி வைத்தனர். அப்போது Bua Babua என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

;