science

img

அறிவியல் கதிர்

♦ பேக்டீரியாக்களின் சவ்வை உடைக்கும் பாலிமிக்சின்கள்
பேக்டீரியாக்கள் பல்வேறு மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுவிடுகின்றன. அவற்றை அழிப்பதற்கு இறுதி முயற்சியாக பாலிமிக்சின்(Polymyxin) என்கிற சக்தி வாய்ந்த உயிரி எதிர்ப்பு மருந்து பயன்படுத்தப்படுகிறது. 1940களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்து பேக்டீரியாக்களின் செல் மேல்பரப்பில் எதோ ஒரு வகையில் தாக்கம் செலுத்துகிறது என்பது மட்டுமே இதுவரை அறியப்பட்டது. இப்போது அது எவ்வாறு பேக்டீரியாக்களை அழிக்கின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பேசல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் கட்டமைப்பு விஞ்ஞானி செபாஸ்டின் ஹில்லர் வேறு ஒரு சோதனைக்கு ஒப்பிடும் பொருளாக இந்த உயிரி எதிர்ப்பு மருந்தைக் கையாளும்போது பேக்டீரியாவின் செல் மேல்சவ்வு (cell membrane) படிகங்களாக மாறியிருப்பதைக் கண்டார். இயல்பில் நெகிழும் தன்மை கொண்ட சவ்வு பாலிமிக்சினால் நொறுங்கும் தன்மையாக மாறுவதால் அவை உடைந்து பேக்டீரியாக்கள் அழிந்து விடுகின்றன. பாலிமிக்சினின் ஒருவகையான கோலிஸ்டின் எனும் மருந்தை வெவ்வேறு செறிவுகளில் இகோலை (E.coli)பேக்டீரியாவின் சவ்வின் மேல் சோதித்து அதை அழிப்பதற்கான குறைந்தபட்ச அளவை அடாமிக் போர்ஸ் நுண்நோக்கி (atomic force microscope) மூலம் கண்டுள்ளனர். இந்த மருந்திற்கும் கட்டுப்படாத சில வகை பேக்டீரியாக்களின் சவ்வு படிகமாக மாறவில்லை. எனினும் ‘இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு; ஒரு பெரும் உடைப்பு என்று கூட கூறலாம்’ என்கிறார் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த உயிர் வேதியியலாளர் வெயின்கர்த். பாலிமிக்சின்களுக்கு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுள்ள பேக்டீரியாக்கள் அதிகம் பரவுகின்றன என்பது ஒரு பிரச்சினை. ஆனால் பாலிமிக்சின்கள் செல் சவ்வை கடினமாக்குவது தொடர்பான இந்த முதல் பார்வை மேலும் பல சிந்தனைகளுக்கு இட்டு சென்று பேக்டீரியாக்களின் எதிர்ப்பு சக்தியை முறியடிக்க அறிவியலாலர்களுக்கு உதவும் என்கிறார் ஹில்லர்.

♦ திருவனந்தபுரம் விண்வெளி மையத்தில் காற்று சுரங்க சோதனை

இந்திய விண்வெளி துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக காற்றுச் சுரங்கச் சோதனை(Trisonic Wind Tunnel) திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 08.12.22 அன்று நடத்தப்பட்டுள்ளது. காற்றின் ஊடே ஒரு விண்கலம் எவ்வாறு பயணிக்கிறது என்பதை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் விண்கலத்தை வடிவமைக்க இது பயன்படுகிறது.  இந்த சோதனையில் காற்றுச் சுரங்கத்தில் சிறிய அளவிலான விண்கலத்தின் மாதிரி நிறுத்தப்பட்டு அதன் மீது காற்று செலுத்தப்படுகிறது. முழு அளவிலான கலத்தையும் சோதிக்கலாம். இதன் மூலம் விண்கலத்தின் மீது ஏற்படும் ஆற்றல், எடைபகிர்வு, சமனற்ற அழுத்தங்கள், ஒலிஅளவுகள் ஆகியவை கணக்கிடப்படுகிறது.  இந்த சுரங்கம் முழுக்க எஃகினால் அமைக்கப்பட்டுள்ளது. 160மீட்டர் நீளமும் 5.4 மீட்டர் குறுக்கு வெட்டும் கொண்டது. ஒலியின் வேகத்திற்கு குறைவாகவும் சமமாகவும் அதைவிட அதிகமாகவும் என மூன்று நிலையில் சோதிக்க முடியும்.  புனே, திருச்சி, நாசிக், கோயம்பத்தூர், பெங்களுர், அகமதாபாத் போன்ற நகரங்களில் உள்ள நிறுவனங்களும் கனடா நாட்டு நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்போடும் டாட்டா நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. 

 வெட்டுக்கிளிகள் உருவாக்கும் மின்புலம் 
நீர்த்துளிகள் உருவாதல்,தூசுகள் இயங்குவது,மின்னல் உருவாவது ஆகியவற்றில் வளிமண்டலத்திலுள்ள மின்புலம் தாக்கம் செலுத்துவது அறியப்பட்டதே. மேலும் வளிமண்டலத்தில் துகள்கள் எளிதாக மின்னேற்றம் பெறுகிறது என்பதும் தெரிந்ததே.ஆனால் வளிமண்டலத்தில் உலவும் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள் மின்புலத்தை உண்டாக்குகின்றன என்பது புதிய விசயம். உண்மையில் இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டல் பல்கலைக்கழக உயிரியி லாளர் எல்லார்ட் ஹண்டிங் ஆய்வு செய்ய விரும்பியது வளிமண்டல மின்சாரம் எவ்வாறு உயிர்களை பாதிக்கிறது என்பதையே. அவர்களுடைய ஆய்வுக்களத்தில் பின்புல மின்சாரத்தை உள்வாங்கும் உணர்வி மீது தேனீக்கள் கூட்டம் ஒன்று பறந்தபோது பூச்சிகளிடமிருந்து மின்சாரம் பாய்வதை கண்டார்கள்.  இதேபோல் பிற தேனீக்கள் கூட்டம் உணர்வியின் மீது கடந்து செல்லும்போது மாறும் மின்னேற்றத்தை கணக்கிட்டனர். அதில் 100 வோல்ட்ஸ்/மீட்டர் அதிகரிப்பது தெரியவந்தது. பூச்சிகள் கூட்டத்தின் அடர்த்தி அதிகரிக்கும்போது மின்னேற்றமும் அதிகரித்தது. ஆகவே 2019இல் அமெரிக்க லாஸ் வேகாஸ் பகுதியில் பெருங்கூட்ட மாக பறந்த வெட்டுக்கிளிகள் எத்தகைய மின்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது குறித்து ஆர்வம் பிறந்தது.ஒரு காற்று சுரங்கத்தினுள் ஒற்றை வெட்டுக்கிளி பறக்கும்போது ஏற்படும் மின்சாரத்தை கணக்கிட்டனர். அதை கணினியின் மூலம் சிமுலேஷன் எனும் முறையில் பெரும் கூட்டம் ஏற்படத்தக்கூடிய மின்சாரத்தை மதிப்பிட்டனர். ஒரு மீட்டர் அளவில் இடி மேகங்கள் உண்டாக்கக்கூடிய அளவு மின்சாரத்தை இவை ஏற்படுத்தும் என்று தெரிந்தது. இந்த நிகழ்வு குறித்து ‘இது ஒரு சுவாரசியமான முதல் பார்வை’ என்கிறார் நியூஹாம்ப்ஷயர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த இயற்பியலாளர் ஜோசப் டவயர்.  மேலும் ஒருபோதும் இடி மேகங்கள் உண்டாக்கும் மின்னல் அளவுக்கு பறக்கும் பூச்சிகளால் ஏற்படுத்த இயலாது என்கிறார். ஆனால் சேதங்களை உண்டாக்கும் இடி மின்னல் தாக்குதல்களை கண்காணிக்கும் உணர்விகளின் செயல்பாடுகளில் அவை குறுக்கீடுகளை ஏற்படுத்தும் என்கிறார்.

 

;