science

img

அறிவியல் கதிர்

பெரியவர்களிடம் குழந்தை மூளை இணைப்புகள் 
குழந்தைகளின் மூளையில் நரம்பு செல்களுக்கு இடையே முதிர்ச்சி அடையாத சினாப்சிஸ் எனும் இணைப்புகள் உள்ளன. குழந்தைகள் ஏராளமான புதிய தகவல்களை கற்றுக்கொள்வதற்கு இவை தேவைப்படு கின்றன. இவற்றை ‘மவுன இணைப்பு’ என்று அழைக் கிறார்கள். வளரும் மூளையில் மட்டுமே இவை இருப்ப தாகவும் சிறிது காலத்திற்குப் பிறகு இவை அழிந்து விடுகின்றன என்றும் கருதப்பட்டன. அப்படியானால் வளர்ந்த ஒருவர் எவ்வாறு பழைய நினைவுகளை நீண்ட காலம் வைத்திருக்கவும் அதே சமயம் புதிய நினைவு களை ஏற்படுத்தவும் முடிகிறது? இந்த இயல்பு பிளாஸ்டி சிட்டி எனப்படுகிறது. ‘மவுன இணைப்புகள்’ இதற்கு விடையாக இருக்கலாம். ஏற்கனவே பதிந்துள்ள நினைவுகளுடன் தொடர்புள்ள இணைப்புகளை திருத்தியோ அல்லது சீர்குலைத்தோ செய்யாமல் புதிய நினைவுகளை பதிய இந்த இணைப்புகள் பயன்பட்டிருக்கலாம். ஆகவே வளர்ச்சி அடைந்த மூளையில் இதுவரை கருதப்பட்டதை விட அதிக பிளாஸ்ட்டிசிட்டி இயல்புக்கு இடம் இருக்க வேண்டும். என்கிறார் மாண்ட்ரீல் நகரிலுள்ள மேக்கில் பல்கலைக்கழக நரம்பியல்; அறிஞர் ஜெஸ்பர் ஜோஸ்ட்ராம். இது தொடர்பாக எலியின் மூளையில் நடத்தப்பட்ட ஆய்வில் எம்ஐடிஐ சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி மார்க் ஹார்நெட்டும் அவரது சக ஆய்வாளர்களும் வளர்ந்த எலிகளின் மூளையில் பிலோபோடியா எனப்படும் நீண்ட உருளை வடிவ அமைப்புகளை கண்டார்கள். இவை பெரும்பாலும் வளரும் மூளையின் நரம்பு செல்களிலேயே காணப்படும். ஆச்சரியமடைந்த அவர்கள் அவை ‘மவுன இணைப்புகளா?’ மேலும் அவை என்ன பங்காற்றுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தார்கள். வளர்ச்சியடைந்த எலிகளின் மூளையை விரிக்கும் முறையுடன் மிகை தெளிவு நுண்நோக்கியையும் பயன்படுத்தி ஆய்வு செய்தார்கள்.  மவுன இணைப்புகளில் உள்ள ஏற்பிகள் குளூடமேட் எனும் வேதிப்பொருளுடன் வினைபுரியும். இப்போது கண்டறியப்பட்ட பிலோபோடியா இணைப்புகள் இந்த வேதிப்பொருளுக்கு வினை புரியவில்லை. ஆனால் அதனுடன் மின் ஆற்றல் செலுத்தப்பட்டவுடன் அவை முதிராத இணைப்புகளிலிருந்து முதிர்ச்சி அடைந்த இணைப்புகளாக மாறின. ஒரு வளரும் மூளையில் புதிய நினைவுகள் பதியும்போது இந்த நிகழ்வுதான் ஏற்படுகிறது. ஆகவே இவை ‘மவுன இணைப்புகளே’ எனத் தெரிகிறது. ஆனால் வளர்ந்த மனித மூளையிலும் இவை பரவலாக இருக்கின்றனவா என்பது தெளிவாகவில்லை. இந்தமுறையில் மனித மூளையையும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

♦ ஆடை பிறந்தது எப்போது?
மனிதன் எப்போது ஆடை உடுத்தத் தொடங்கினான் என்பதை ஜெர்மனியில் காணப்படும் குகைகரடியின் வெட்டுண்ட பாதப் படிவங்கள் காட்டுகின்றன என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். 300000 வருடங்களுக்கு முன் வரலாற்றிற்கு முந்திய விலங்குகள் உரோமத்திற்காக தோலுரிக்கப்பட்டன என்று இதிலிருந்து தெரிகிறது.உரோமம்,தோல் மற்ற அங்ககப் பொருட்கள் 100000 வருடங்களுக்கு மேல் தங்கியிருப்பதில்லை. எனவே வரலாற்றிற்கு முந்திய காலத்தில் ஆடை உடுத்தத் தொடங்கிய காலத்திற்கு நேரடி யான சாட்சியங்கள் கிடைக்காது. இதற்கு முன் கரடியின் தோல் உரிக்கப்பட்டதற்கு ஆதாரமாக வெகு சில தொல்லியல் இடங்களே உள்ளன. இப்போது கிடைத்துள்ளது ஒரு முழுமையான சித்திரத்தை தருகிறது என்கிறார் ஜெர்மனியிலுள்ள துபிந்ஜென் பல்கலைக்கழ கத்தை சேர்ந்த இந்த ஆய்வின் ஆசிரியரும் ஆய்வு மாணவருமான ஐவோ வெர்ஹேஜென்.  குகைக் கரடிகள் துருவக் கரடிகளை ஒத்த அளவுள்ள பெரியது. 25000 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன இனம்.இவற்றின் தோலில் வெளிப்புறம் நீண்ட மயிர்கள் உள்ளன. இது காற்றோட்டமான பாதுகாப்பு பரப்பாக உள்ளது. அதற்குக் கீழ் குட்டையான அடர்த்தி யான மயிர்கள் உள்ளன. இது குளிர் உள் புகாவண்ணம் பாதுகாக் கிறது. எனவே எளிய உடையோ படுக்கையோ செய்ய பொருத்த மானது. பெரிய தையல் வேலைகள் இல்லாமல் உடலை சுற்றும் தோல்களே அந்த காலத்திய ஆடையாக இருந்தன. நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்ய தேவையான ஊசிகள் தொல்லியல் பதிவுகளில் 45000 வருடங்களுக்கு முன்வரை இல்லை. ‘எலும்புகளில் வெட்டுக்காயங்கள் காணப்படும் இடங்கள் மிகக் குறைவான சதையும் கொழுப்பும் உள்ள இடங்கள். ஆகவே இவை மாமிசத்திற்காக வெட்டப்பட்டது அல்ல. மாறாக இந்த இடங்களில் தோலானது எலும்புக்கு மிக அருகில் உள்ளது.எனவே தோலை உரிக்கும்போது தவிர்க்க முடியாதபடி வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.’ என்கிறார் வெர்ஹேஜென். 300000 ஆண்டுகளுக்கு முன் இரைகளைக் கொல்லப் பயன்பட்ட எறியும் ஒன்பது ஈட்டிகள்,குத்தும் கட்டாரி மற்றும் இரு எறி கம்புகள் ஆகிய அறியப்பட்ட மிகப்பழமையான மர ஆயுதங்களுக்கு பெயர்பெற்றது ஜெர்மனியிலுள்ள இந்த இடம். மனித இனம் ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்வதற்கு முன்னரே ஆடைகள் உடுத்த தொடங்கிவிட்டனர் என்று மரபணுக்கூறுகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. அவ்ரோக் எனப்படும் காளையினம்,குதிரை போன்றவற்றின் எச்சங்களும் வெட்டுக்காயங்களுடன் கிடைத்துள்ளன. எனினும் கரடியின் தோல், வெப்பம் கடத்தாத் தன்மையினாலும் எளிதாக பதப்படுத்த முடிவதாலும் மற்றவற்றை விட உகந்ததாக உள்ளது.

 அரிய மூலகங்கள்! தேவை அதிகம்!
வேதியியல் மூலகங்களில் லேந்தனைட்ஸ் எனப்படும் அரிய மூலகங்கள்(rare earths) மின்சாரக் கார்கள், காற்றாலைகள் ஆகியவற்றிலுள்ள காந்தங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டும் காலநிலை மாற்றங்களை சமாளிக்க உதவுபவை. மேலும் இந்த மூலகங்கள் திறன் கைபேசி, தொலைக்காட்சி திரை, செவி ஒலிவாங்கி, கணினி வன்சுழலிகள் ஆகியவற்றில் பயன்படுகின்றன. அதிகரித்து வரும் பயன்பாடுகளினால் இவை அதிக அளவில் தேவைப்படுகின்றன. இவை உலகில் பன்னிரண்டு இடங்களில் மட்டுமே அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. அமெரிக்காவில் எடுக்கப்படும் மூலகங்கள் சுத்தப்படுத்தி பதப்படுத்துவதற்கு சீனாவிற்கு அனுப்பபடுகின்றன. இதற்கான சுரங்கத் தொழிலினால் சுற்று சூழல் மாசு ஏற்படுவதுடன் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன. இதை தவிர்ப்பதற்கு ஒரு வழி உள்ளது. இவற்றை புதிதாக எடுக்காமல் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டிருக்கும் கழிவுகளிலிருந்தும் இவற்றைப் பிரித்து எடுக்கலாம். ஏன் இதை மறு சுழற்சி செய்யக்கூடாது என்கிறார் சயின்ஸ் நியூஸ் நிர்வாக ஆசிரியர் எரின் வேமன். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. கைபேசிகளிலும் காந்தங்களிலும் இருக்கும் அரிய மூலகங்கள் மற்ற பொருட்களுடன் கலந்திருக்கின்றன.அவற்றைப் பிரிப்பது எளிமையானதோ செலவு குறைவானதோ அல்ல. ஒரு அலுமினியக் கலனிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது போன்றதல்ல என்கிறார் வேமன். பிரித்தெடுக்கும் முறையை பொருளாதார ரீதியாக கட்டுப்படியாகும்படியானதாக மாற்றுவதில் தொழில்நுட்பப் பிரச்சினை மட்டுமல்ல உள்கட்டுமான சவால்களும் உள்ளன. புதிய அறிவியல் முறைகளும் மறு சுழற்சி அமைப்புகளும் தேவைப்படுகின்றன. அவை சாத்தியமாகும் என்கின்றனர் புதிய தொழில்துறையான அரிய மூலகத் துறையில் உள்ளவர்கள்.

;