science

img

அறிவியல் கதிர்

►ஒளி வீசும் தாவரங்கள் 
தாவரங்களின் இலைகளில் சிறப்பு நானோதுகள்களைப் பதிந்து அவற்றை எல்ஈடி மூலம் மின்னேற்றம் செய்து ஒளி வீசச் செய்யும் முறையை எம்ஐடி பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பத்து வினாடிகள் சார்ஜ் செய்தபின் தாவரங்கள் பிரகாசமாக ஒளிரத் தொடங்கின. இவற்றை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்ய முடியும். இந்த துகள்கள் ஒளியை உள்வாங்கிக்கொண்டு சேமித்து வைத்து பின் அதை வெளியிடுகின்றன. வாழும் தாவரங்களின் புதுப்பிக்கக்கூடிய வேதியியல் ஆற்றலை பயன்படுத்தி சுற்றிலும் பரவும் ஒளியை உண்டாக்குவது ஒரு துணிச்சலான சிந்தனை என்கிறார் எம்ஐடியை சேர்ந்த கட்டமைப்புப் பேராசிரியரும் இந்த ஆய்வின் ஆசிரியருமான ஷீலா கென்னடி. மின்மினிப் பூச்சிகளில் காணப்படும் நொதிப்பொருளான லுசிபிரேஸ் (luciferase) இந்த நுண்துகள்களில் உள்ளது. இதைப் பயன்படுத்தியே தாவரங் கள் ஒளியை உண்டாக்குகின்றன. நானோ துகள்களை வெவ்வேறு விதமான சேர்மானங்களில் பயன்படுத்தி புதிய செயல்பாட்டுக் குணங்களை உண்டாகும் புதிய அறிவியல் தாவர நானோஇயந்திரவியல்(plant nanobionics) எனப்படுகிறது.

 வைரஸ் உண்ணி
குளம்,குட்டைகளில் வாழும் ஒரு செல் உயிரினங்கள், வைரஸ் நுண்கிருமிகளை தங்களது உணவாகக் கொள்கின்றன. உணவுப் பழக்கத்தை வைத்து உயிரினங்களை தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள், அனைத்து உண்ணிகள் என்கிறோம். இந்தப் புதிய வகையை வைரஸ் உண்ணிகள் என்கிறார்கள். ஹல்டீரியா சீலியேட்ஸ் (Halteria ciliates) எனும் உயிரினம் வைரசை மட்டுமே உணவாக அளிக்கப்பட்டபோது, உயிர் பிழைத்திருந்தது தெரிந்துள்ளது. சோதனை சாலையில் இவ்வகை உணவை அளித்தபோது அவை இனப்பெருக்கமும் செய்தன. வைரஸ் உணவு கிடைக்காதபோது அவை பெருகவில்லை. சற்று பெரிய சீலியேட்டான பரமீசியம் எனும் உயிரினம் வைரஸ் மட்டுமே உணவாக அளித்தபோது பிழைத்திருக்கவில்லை.ஆகவே எல்லா சீலியேட்டுகளுக்கும் உணவுத் தேவையை வைரஸ் நிறைவேற்றாது என்பதும் தெரிகிறது. மரபணுக்களின் நகல்களை தயாரிக்க அவசியத் தேவையான பாஸ்பரஸ் சத்தை வைரஸ்கள் அளித்திருக்கலாம் என்கிறார் இந்த ஆய்வின் ஆசிரியரும் நெப்ரஸ்கா லிங்கன் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவருமான சூழலியலாளர் ஜான் டெலாங். இவற்றின் உணவுத் தேவையை நிறைவேற்ற பெரும் அளவு வைரஸ்கள் தேவைப்படலாம்.சோதனை சாலையில் அவை 10000லிருந்து 1 மில்லியன் வைரஸ்களை உண்டன. குளம் குட்டைகளில் ஒரு நாளில் ஆயிரம் பில்லியன் கணக்கில் அவை வைரஸ்களை விழுங்கலாம்.

► கார்பன் உமிழ்வும் புதிய கான்கிரீட்டும்                                                                                               

   பாந்தியான்(Pantheon) போன்ற ரோமானியக் கட்டிடங்கள் 2000ஆண்டுகளாக சிதிலமடையாமல் இருப்பதன் ரகசியத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவை கான்கிரீட் கலவையால் கட்டப்பட்டவை என்பது தெரிந்ததே. சாதாரண கான்கிரீட் கலவை சிமிண்ட், மணல், தண்ணீர் கொண்டு உண்டாக்கப்படுகிறது. ரோமன் கட்டிடங்கள் இதோடு சுண்ணாம்பும் கலக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கலாம் என்று எம்ஐடி(MIT) வேதியியலாளர் மாசிக் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் கருதினார்கள். ஏனென்றால் ரோமன் கட்டிடங்களில் சுண்ணாம்புக் கட்டிகள் காணப்படுகின்றன. இது ஏதோ தவறுதலாக நடந்ததாக கருத முடியாது. ஏனென்றால் எல்லாக் கட்டிடங்களிலும் அவை உள்ளன. கட்டிய எல்லோரும் தவறாக செய்திருப் பார்கள் என்றும் கூற முடியாது. சுண்ணாம்பு தண்ணீருடன் சேரும்போது அதிக அளவு வெப்பம் உண்டாகும். அதோடு பெரும் வெடிப்பும் ஏற்படும். ஆனால் கான்கிரீட் தயாரிக்கும்போது சுண்ணாம்பையும் சேர்க்கும் ஹாட் மிக்சிங் முறையை மாசிக் சோதித்துப் பார்த்தபோது அப்படி எதுவும் ஏற்படவில்லை. வெப்பம் உண்டானது; நீராவி வெளி வந்தது; அதோடு ரோமானிய கட்டிடங்களில் காணப்படுவது போல சிமிண்டும் சுண்ணாம்புக் கட்டிகளும் உண்டாயின.  பண்டைய ரோமன் கட்டிடவியலாளர் விட்ருவியஸ் , சரித்திரவியலாளர் பிளினி போன்றவர்கள் எழுதியுள்ள ஏடுகளில் கான்கிரீட் உண்டாக்குவதற்கான மூலப் பொருட்கள் குறித்தும் சுண்ணாம்பு எடுக்கும் ஆதார இடம் சுத்தமாக இருக்க வேண்டும்,கலக்கும்போது அதிக வெப்பம் உண்டாகும் என்பது குறித்தும் கடுமையான அறிவுரைகள் உள்ளன.

ஆனால் சுண்ணாம்புக் கட்டிகள் குறித்தும் எதுவும் இல்லை. ஆனால் இந்த ஆய்வுக் குழு அது மிகவும் முக்கியமானது என்று கருதினார்கள். கட்டிடங்களில் விரிசல் விழாமல் இருப்பதற்கு அது உதவுகிறது என்று நினைத்தார்கள்.கட்டிடங் களில் தண்ணீர் விழும்போது சுண்ணாம்புக் கட்டிகள் கரைந்து விரிசல்களுக்குள் இறங்கி மீண்டும் கட்டியாகி விரிசல்களை அடைக்கின்றன. இதை சோதித்துப் பார்க்க ஹாட் மிக்சிங் மற்றும் சாதாரண முறையில் கான்கிரீட் துண்டுகளை உண்டாக்கி அவற்றை இரண்டாக உடைத்து அவற்றிற்கிடையில் தண்ணீரை தெளித்தனர். ஹாட் மிக்சிங் முறை கான்கிரீட் துண்டுகள் இரண்டு மூன்று வாரங்களில் சேர்ந்துவிட்டன. சாதாரண கான்கிரீட் துண்டுகள் சேரவேயில்லை. இந்த முறையானது பசுமைக் குடில் வாயுக்கள் உமிழ்வைக் குறைக்க உதவும். உலக கார்பன் உமிழ்வில் 8 சதவீத கான்கிரீட் தயாரிப்பதனால் உண்டாகிறது. நவீன கான்கிரீட் கட்டிடங்களின் ஆயுட்காலம் 150ஆண்டுகளே. ரோமானிய பாந்தியனுடன் ஒப்பிடும்போது இது மிக மிக அற்பமானது. ஆகவே அடிக்கடி இடித்துக் கட்டாமல் இருக்கும்போது கார்பன் உமிழ்வு குறையும். ஒரு தொடக்க நிலை நிறுவனம் மூலம் இந்த கான்கிரீட்டை சந்தைப்படுத்த மாசிக் மற்றும் பல்வேறு சக ஆய்வாளர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

;