science

img

நீண்ட நேரம் பணியாற்றுவதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் - ஆய்வு தகவல்

நீண்ட நேரம் பணியாற்றுவதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஏஞ்சர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பிரெஞ்சு தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள், 143,000க்கும் மேற்பட்டவர்களின் வயது, புகைபிடித்தல் மற்றும் வேலை நேரம் குறித்த தரவுகளை பகுப்பாய்வு மேற்கொண்டனர். இது குறித்து,”ஸ்ட்ரோக்: ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்” என்ற ஜர்னலில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில், 10 ஆண்டுகளுக்கு மேலாக 10 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்தவர்களில் 1,224 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறுகிய காலத்திற்கு நீண்ட நேரம் வேலை செய்தவர்களுக்கு 29 சதவீதமும், 10 ஆண்டுகளுக்கு மேலாக நீண்ட நேரம் வேலை செய்தவர்களுக்கு 45 சதவீதமும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், நீண்ட நேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தின் கீழ் உள்ளவர்கள் தங்களது வேலை நேரத்தின் இடையே உடற்பயிற்சி செய்வது, நல்ல உணவுகளை உண்பது போன்றவற்றை கடைபிடித்தால் இது போன்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வாய்ப்புண்டு என்று பிரிட்டனின் பக்கவாத தடுப்பு அமைப்பு கூறுகிறது.

வெறும் தரவுகளை மட்டுமே முதலாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சொந்த தொழிலை மேற்கொள்பவர்கள், தலைமை செயலதிகாரிகள், மேலாளர்கள் உள்ளிட்டோர் நீண்டநேரம் வேலை செய்தாலும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதில்லை என்றும், அதே சமயத்தில் முறையற்ற நேரத்திலும், இரவு நேரத்திலும் நீண்டநேரம் பணிபுரிபவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதாகவும் தெரியவந்துள்ளது. 

;