science

img

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய இஸ்ரேலின் முயற்சி தோல்வி

இஸ்ரேல் நாட்டின் ’பேரேஷீட்’ விண்கலம் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது.எனவே இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் ’பேரேஷீட்’. நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பது மட்டுமின்றி, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், 2 மாதங்களாக பூமியைச் சுற்றிவந்த நிலையில், நேற்று நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. 

நிலவின் பரப்பை தொடுவதற்கு 15 கிமீ முன்னதாக ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகளின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் விண்கலம் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், தரையிறங்க திட்டமிட்ட இடத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டு விழுந்து சிதறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, “முதல் முயற்சியில் தோல்வியை சந்தித்தாலும், மீண்டும் மீண்டும் முயற்சி செய்வோம். அடுத்த 2 ஆண்டுகளில் நிலவில் விண்கலத்தை இறக்குவோம்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னர், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரசுத்துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களின் விண்கலன்களே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


;