கொரோனா தொற்றிற்கு பின் ஏற்படும் கோளாறுகள்
கொரோனா தொற்றின்போது ஏற்படும் அறிகுறிகளான தீவிர உடல் அசதி, மூச்சு திணறல், தசை பலவீனம் ஆகியவை தொற்று குணமான பின்னும் நீடிப்பதை நீண்ட கோவிட் தொற்று (long covid) என அழைக்கப்படு கிறது. இதனால் ஆறு மாதங்கள் வரை பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பாக்ஸலோவிட் (paxlovid) எனும் மருந்து இந்த கோளாறு ஏற்படுவதைக் குறைப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தொற்று ஏற்பட்டதற்கு பிறகு ஆறுமாதங்களுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியத்தையும் மேலும் இறக்கும் அபாயத்தையும் குறைப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. நீண்ட கோவிட் கோளாறு ஏற்படும் வாய்ப்பை இந்த மருந்து 26% குறைப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நோயியல் நிபுணர் ஸியாத் அல் - அலி கூறுகிறார். இந்த மருந்து இதயக் கோளாறு, இரத்த உறைதல், சிறுநீரக பாதிப்பு, தசை வலி, களைப்பு, மூச்சு திணறல் மற்றும் இரு நரம்பு கோளாறுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறதாம்.ஆனால் கொரோனா தொற்றிற்குப் பிறகு ஏற்படும் ஈரல் கோளாறு, இருமல் அல்லது சர்க்கரை நோய் ஆகியவை ஏற்படும் வாய்ப்பை குறைப்பதில்லையாம். ஃபைசர் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இம்மருந்து பாதிக்கப்படக் கூடியவர்கள் மருத்துவ மனை சிகிச்சை அல்லது இறப்பு ஏற்படும் வாய்ப்பை குறைப்பதாக இதற்கு முன் காட்டப்பட்டுள்ளது. இதன் நீண்ட கால விளைவை மதிப்பீடு செய்வதற்காக அல் -அலி குழுவினர் முன்னாள் படை வீரர்களின் மருத்துவ ஆவணங்களை பரிசோதனை செய்தனர். 280000 நோயாளிகள் 2022இல் கோவிட் தொற்று ஏற்பட்டவர்கள்.மேலும் தீவிர நோயை ஏற்படுத்தக் கூடிய குறைந்தது ஒரு இணை நோய் உள்ளவர்கள்.
இதில் கிட்டத்தட்ட 36000 நோயாளிகள் தொற்று ஏற்பட்ட ஐந்து நாட்களுக்குள் பாக்சிலோவிட் மருந்து எடுத்துக் கொண்டனர். பின் பாக்ஸலோவிட் எடுத்துக்கொண்டவர்களின் குணமாவதற்கும் எடுத்துக்கொள்ளாதவர்கள் குணமாவதற்கு ஒப்பிடப்பட்டது. மருந்து எடுத்துக் கொண்டவர்களுக்கு தொற்றிற்குப் பின் கோளாறுகள் ஏற்படும் அபாயம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும், போட்டுக் கொள்ளாதவர்களுக்கும் இது பலனளித்தது. ஆனால் சில ஆய்வாளர்கள் இந்த ஆய்வு நீண்ட கோவிட் கோளாறு என்பது என்ன என்று முழுவதுமாக விளக்கவில்லை என்கிறார்கள். இந்தக் கோளாறை வரையறுப்பது கடினம். ஆய்விற்குப் பயன்பட்ட மருத்துவ ஆவணங்கள் உதவிகரமாக இருக்கும்; ஆனால் நீண்ட கோவிட என்பதன் குறிப்பானவை அவற்றில் இல்லை. அவை கொரோனா தொற்றின் நீண்ட கால விளைவுகளான இதயக் கோளாறுகள், வாதம் போன்றவற்றை ஆய்வு செய்ய அவை சிறப்பானவை. இந்த ஆய்வில் பெரும்பாலும் வெள்ளை இன ஆண்களின் ஆவணங்களே உள்ளதும் ஒரு குறைபாடு. பெண்களின் ஆவணங்கள் சிறுபான்மையாக இருந்தாலும் அவை பத்தாயிரக்கணக்கில் உள்ளன என்பதை அலி சுட்டிக் காட்டுகிறார். ‘இது ஒரு முழுமையான நிவாரணி அல்ல; அபாயத்தைக் குறைக்க உதவும். அவ்வளவுதான் ‘ என்கிறார் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த மோனிகா வேர்டுஸ்கொ- குடீரெஸ்
செவ்வாய் கோளில் அரிசி
செவ்வாய் கோளில் அரிசி விளைவிக்கத் தேவையான ஊட்டச்சத்துக் கள் உள்ளன என்கிறார் அர்கான்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி அறிஞர் அபிலாஷ் ராமச்சந்திரன். ஆனால் அதன் மேற்பரப்பில் நெல் பயிருக்கு நச்சான பெர்குளோரேட் எனும் வேதிப்பொருள் இருப்பதால் அந்த தாவரம் பிழைத்திருக்க உதவி தேவைப்படும். ‘நாம் மனிதர்களை செவ்வாய் கோளிற்கு அனுப்ப விரும்புகிறோம்.ஆனால் எல்லா வற்றையும் அங்கு எடுத்து செல்ல இயலாது. அது பெரும் பொருட்செல வாகும். அரிசியை தயாரிப்பது எளிது என்பதால் அங்கு அதை விளைவிப்பது பொருத்தமாக இருக்கும். உமியை பிரித்துவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். அவ்வளவுதான்.’ என்கிறார் அவர். ராமச்சந்திரன் மற்றும் அவரது குழுவினர் மொஜாவ் பாலைவன மணலில் செவ்வாய் கோளின் மணற்பரப்பு போன்ற ஒன்றை உருவாக்கி அதில் நெல்லை வளர்த்தனர்.
மேலும் தாவர சத்துக்கலவை மட்டுமே கொண்டவற்றிலும் தாவர சத்துக் கலவையுடன் பாலைவன மணல் கலந்தவற்றுடனும் நெற்பயிரை வளர்த்தனர். செயற்கையாக உருவாக்கப்பட்ட செவ்வாய்க்கோள் மணற்பரப்பில் நெற்பயிர் வளர்ந்தது. ஆனால் மற்ற இரண்டை விடவும் தண்டுகள் குட்டையாகவும் மெலிந்தும் வளர்ந்தன. வேர்களும் மெலிவானதாக இருந்தன. செயற்கை மணலில் 25% தாவர சத்தைக் கலந்தபோது அவை நன்றாக வளர்ந்தன. அடுத்து இயற்கையாய் வளர்ந்த நெல்வகையையும் வறட்சி போன்ற சுற்றுசூழல் அழுத்தங்களை தாக்கு பிடிக்கக்கூடிய மரபணு மாற்றப்பட்ட நெல்வகையையும் செவ்வாய்க்கோள் மணலை ஒத்த பரப்பில் பயிரிட்டனர். பெர்குளோரேட்கலந்த ஒன்றிலும் கலக்காத இன்னொன்றிலும் இந்த சோதனையை செய்தனர். ஒரு கிலோ மணலில் 3 கிராம் பெர்குளோரேட் கலந்த மணலில் எதுவுமே முளைக்கவில்லை. ஆனால் பெர்குளோரேட்டை ஒரு கிராமாக குறைத்தபோது மரபணு மாற்றப்பட்ட வகையில் ஒரு விதை வேரும் தண்டும் பிடித்தன. இயற்கை வகையில் ஒரு விதையில் வேர் மட்டும் வளர்ந்தது. நெற்பயிரை மேலும் மரபணு மாற்றம் செய்தால் செவ்வாய் கோளில் வளரக்கூடிய நெல் வகையை கண்டுபிடிக்கலாம்.
அறிவியல் ஆய்வில் சிரமங்கள்
அறிவியல் என்பது கண்ணால் காண முடியாத, நேரடியாக அணுக முடியாதவற்றையும் ஆய்வு செய்வதாகும். அது அணுவின் உட்பொருள், தொலைதூர கோள்கள், மரபணுக்கள் என எதுவாக இருந்தாலும் அவற்றையும் மதிப்பிட்டு, தெளிவாக்கும் பல ஆண்டு கடுமையான,சிரமமான உழைப்பு, மற்றும் புதிய கருவிகள் கண்டுபிடிப்பு ஆகியவை அடங்கியவை. எடுத்துக்காட்டாக 1950களில் மேரி தார்ப் எனும் பெண்மணி கடலின் அடிப்பரப்பை ஆய்வு செய்ய விரும்பினார். ஆனால் அவர் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தன்னுடைய அலுவலகத்திலிருந்து கொண்டே அப்போதைய காலத்தில் ஒலியின் மூலம் அளக்கப்பட்ட கடல் ஆழங்களைக்கொண்டு கடல் தளத்தின் இரு பரிமாண வரைபடங்களை உண்டாக்கினார். பின் அவற்றின் நீட்சியாக விடுபட்டுப் போயிருந்த பகுதிகளையும் உருவாக்கினார். அதன் மூலமே அறிவியலாளர்கள் கண்டத்திட்டு நகர்வை அறிந்து கொண்டார்கள்.
அதைப்போலவே இப்போது அண்டார்டிக்காவை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் ஆய்வு செய்ய விரும்பும் நதியானது பல நூறு அடி ஆழத்தில் பனிப் பாறைகளின் கீழ் உள்ளது. இரண்டாம் உலகப் போர் கால தொழில்நுணுக்கங்களான ராடார் போன்றவற்றை பனிப்பாறைகளினுள் நோக்குவதற்கு பயன்படுத்துகின்றனர். பெரும் கருவிகளைக் கொண்டு பனிப்பாறை களுக்குள் துளையிட்டு காமிராவை இறக்கி படம் பிடிக்கின்றனர். கடினமான இந்த வேலைக்கு நல்ல பலன் கிடைத்தது. 2013இல் பனிப்பாறைகள் கீழுள்ள ஏரியைக் கண்டுபிடித்ததுடன் அதிலிருந்து தண்ணீரையும் சேறையும் ஆய்விற்காக எடுத்துள்ளனர். அதன்பின்னர் 2021 ஆம் ஆண்டு நீண்ட காலமாக தேடிய நதியின் காட்சி தெரிந்தது. ஆரஞ்சு வண்ண இறால் போன்ற உயிரினங்களையும் காமிரா காட்டியது. வெளிச்சத்திலிருந்து 500 மீட்டர் ஆழத்தில் இந்த உயிரினங்கள் வாழும் உலகம் ஆராயப்பட வேண்டிய ஒரு புதிய புதிர்.