science

img

காலநிலை அவசர காலம் ஆபத்து நீங்க...

காலநிலை மாற்றம் என்பது அனைத்து உலக நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு தேவைப் படுகின்ற ஒரு சர்வதேச பிரச்சனை .அதனால்தான் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்கின்ற ஒரு பொது வான அணுகுமுறையை இன்று 20 நாடுகளில் உள்ள 30க்கும் மேலான செய்தித்தாள்கள் மற்றும் ஊடக நிறு வனங்கள் வகுத்துள்ளன. புதைபடிவ எரிபொருட்க ளுக்கு மாற்றாக சுத்தமான ஆற்றலை (Clean Energy)  பெறுவதற்குப்  பதிலாக பல பணக்கார நாடுகள் எண் ணெய் மற்றும் எரிவாயுவில் முதலீடு செய்கின்றன. அதே நேரத்தில் உமிழ்வை குறைக்கும்  நடவடிக்கை யும் எடுப்பதில்லை. ஏழை நாடுகளுக்கு உதவிட முன் வருவதும் இல்லை. காலநிலை மாற்றத்தால் குழப்பங் கள் தான் அதிகரித்து வருகின்றன .திரும்ப முடியாத ஒரு நிலைக்கு உலகை அவை இட்டுச் செல்கின்றன.

பேராபத்திலிருந்து தப்பிக்க முடியாது

கடந்த வருடம் கிளாஸ்கோவில் -காப்  26 நாடு களின் மாநாடு நடந்து முடிந்ததற்குப் பிறகு வெப்ப நிலை உயர்வை 1.5° க்குள் கட்டுப்படுத்த தேவையான நட வடிக்கைகளில் ஐம்பதில் ஒரு பங்கை மட்டுமே நிறை வேற்றுவதற்கு எல்லா நாடுகளும் உறுதி அளித்தன.  பாகிஸ்தான் வெள்ளம், ஐரோப்பாவின் வெப்ப அலை,  ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீ, அமெரிக்காவின் சூறாவளி என எந்த கண்டமும் வானிலை பேரழிவிலி ருந்து கடந்த ஆண்டு தப்பவில்லை. 1.1 டிகிரி சூடேறி யதற்கே இத்தகைய மோசமான விளைவுகள் என்றால் இனிமேல் ஏற்படும் பேராபத்துகளில் இருந்தும் நாம் தப்பிக்க முடியாது. பல நாடுகள், ரஷ்யாவை நம்பி இருக்கும் நிலையை குறைக்க முற்படுவதால் புதிய புதைபடிவ  எரிபொருள் திட்டங்களுக்காக “தங்க வேட்டை “போல அவசர அவசரமாக செயலாற்றி வருகின்றன .இவை தற்காலிக நடவடிக்கை தான் எனினும் மீள முடியாத ஒரு சேதத்திற்கு உலகை இட்டுச் சென்று நிறுத்தும். புதைபடிவ எரிபொரு ளுக்கு மனித குலம் அடிமை ஆவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற அவசரத் தேவையை யும்  இது அடிக்கோடிட்டு காட்டுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தான் இனி நடைமுறை என்று மாறினால் மட்டுமே கால நிலை அவசரகாலம் என்ற ஆபத்து நீங்கி பூமிப்பந்து பாதுகாப்பாகச் சுழலும். வறட்சி உடைந்து உருகி ஓடும் பனிப்பாறைகள் மற்றும் பயிர் இழப்புகளால் ஏற்படும் சுமைகளை உலகின் ஏழை மக்கள் சுமந்து நிற்கிறார்கள். உயிர் மற்றும் வாழ்வாதார இழப்புகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க நிதி உதவி தேவைப்படுகிறது. வளரும் நாடு கள் பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைப்பதன் மூலம் கால நிலை சீர்குலைவின் அளவை சமாளிக்க  முடியும். அதற்காக அவர்கள் ஆண்டு ஒன்றுக்கு இரண்டு ட்ரில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒரு முக்கிய அறிக்கை தெரிவிக்கிறது.

தொடக்கம் மட்டுமே

எட்டில் ஒருவர் இன்று பணக்கார நாடுகளில் வாழ்கின்றனர். கரியமில வாயுவின் சரிபாதியை இந்த நாடுகள் தான் உமிழ்கின்றன. காலநிலைச் சீரழிவால் அவதியுறும் ஏழை நாடுகளுக்கு உதவிடும் தார்மீகப் பொறுப்பு இவர்களுக்கு தான் அதிகம்.வெப்ப நிலை அதிகரிப்பில் வளரும் நாடுகளுக்கு அதிகமான பங்கு இல்லாத ஒரு நிலையிலும், உலகம் ஒரு மந்த நிலையை எதிர்நோக்கியுள்ள ஒரு சூழலிலும் நெருக்கடியை சமாளித்திட கணிசமான நிதியை அவர்களுக்கு வழங்கிட பணக்கார நாடுகள் முன் வர வேண்டும். ஏற்கனவே உறுதி அளித்தபடி 2020 முதல் ஆண்டு க்கு 100 பில்லியன் டாலர் நிதி அளித்திட அவை முன் வர வேண்டும். நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்க ளில் மட்டும் மிகக்குறைந்த பட்சமாக உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் அடைந்த ஒட்டுமொத்தமான லாபம் சுமார் 100 மில்லியன் டாலர் .அதன் மீது வரி விதிக்கப்பட வேண்டும். அந்தத் தொகையை மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கிட ஐநா அறைகூவல் விட்டுள்ளது மிகச் சரியா னது .ஆனால் அத்தகைய வரி விதிப்பு கூட ஒரு தொடக்கம் மட்டுமே.

உமிழ்வின் அடிப்படையில் நிதியளிப்பு

காலநிலை பேரழிவால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள முடியாமலும் எதிர்காலத்தில் தங்களை பாது காத்துக் கொள்ளவும் முடியாதபடி ஏழை நாடுகள் இன்று கடன்களைச் சுமந்து நிற்கின்றன. இந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்வதில் கடன் வழங்குபவர்கள் தாராள மாக உதவிட முன் வர வேண்டும். ஒருங்கிணைந்த சர்வ தேச நடவடிக்கைகளுக்காக காத்திருக்க தேவை யில்லை. தேசம் தழுவிய அளவில்,ஏன், பிராந்தியம் தழுவிய அளவில் கூட இதை நடைமுறைப்படுத்தலாம். அவரவர்களின் ஒட்டுமொத்த உமிழ்வின் அடிப்ப டையில் கூட அந்த நிதி அளிப்பை அவர்கள் உறுதி செய்யலாம். தனியார் மூலதனத்திற்கும் செல்வந்த நாடுகளுக்கும் இதில் கூடுதல் பொறுப்புண்டு.

நிலவுப் பயணம் போல்...

நிலவை அடைந்த பயணத்தின் வெற்றியை சாத்திய மாக்கியது போல இந்த நெருக்கடியிலிருந்தும் மீண்டு வர நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் .நிலவுக்கு சென்றது 10 வருட  நடவடிக்கைகளின் வெற்றியாகும். அதற்காக பெரும் வளங்கள் அர்ப்பணிக்கப்பட்டன. ஆனால் இப்போது பணக்கார நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. புதைபடிவ எரிபொருள் சார்ந்த நடவடிக்கைகளால் காலநிலை மாற்ற தடுப்பு முயற்சிகளில் பின்னடைவும் நேர்ந்து விட்டது.  விளைவு? உலகம் இன்று ஆபத்தில் சிக்கும் நிலை.  கொரோனா காலத்தில் அரசாங்கங்களின் சொந்த கடன் பத்திரங்களை மத்திய வங்கிகள் பெற்றுக் கொண்டு மாநிலங்களுக்கு நிதியை அளித்து உதவின. அதே போன்றதொரு முயற்சி மீண்டும் எடுக்கப்பட்டால் காலநிலை அவசர நிலைக்கான நிதியை (Climate Emergency Fund) தாராளமாகத் திரட்ட முடியும்.

பேராபத்து நிகழாமல் தடுக்கும் வாய்ப்பு உடனே செயலில் இறங்குங்கள்

அக்கறையின்மை அல்லது மன நிறைவுக்கான தருணம் இதுவல்ல .இந்த தருணத்தின் அவசரத்தை உணர வேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா மாநாடு அது குறித்த நியாயமான வாதங்களுக்கு வலிமை சேர்க்க வேண்டும். உக்ரைன் யுத்தம், வர்த்தகப் பின்னடைவு  என்ற சொத்தையான காரணங்கள் ஒருமித்த கருத்தை திரட்டு வதற்கு தடையாக மாறக்கூடாது .ஐநா மாநாடு செயல் முறை சரியானதாக இல்லாமல் கூட போகலாம். நம்  பூமியை காப்பதற்கான ஒரு இலக்கை இந்த மாநாடு- காப் 27 நாடுகளுக்கு வழங்கி உள்ளது. மனித குலத்தை அச்சுறுத்தும் ஒரு பேராபத்து நிகழாமல் தடுத்திட இந்த வாய்ப்பு பலனளிக்கட்டும்.

தி இந்து (ஆங்கிலம்) தலையங்கம் (16.11.22),  தமிழில்: கடலூர் சுகுமாரன் 

 

;