science

img

அறிவியல் - இரமணன்

வறட்சியிலிருந்து  மரங்கள் மீண்டெழுமா?

மரங்களில் சில வறட்சிக்குப் பின்னும் மீண்டு வருகின்றன; சில மடிந்துவிடுகின்றன. இதன் காரணம் அதன் திசுக்களில் இருக்கலாம். ஆனால் பழமையான காடுகளில் உள்ள திசுக்களை ஆய்வது சவால் மிக்கதாகும். 90 வயதான மரத்தை சோதனை சாலைக்கு எடுத்து சென்று அவற்றை ஸ்கேன் செய்ய இயலாது. ஆகவே பெரும்பான்மையான ஆய்வுகள் இளமையான மரங்களை வைத்தும் அல்லது வயதான மரத்தின் திசுக்களை அகழ்ந்து எடுத்தும் செய்யப்படுகின்றன. ஆஸ்திரியாவிலுள்ள இன்ஸபிரக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சூழலியல் உறுப்பியக்கவியலாளர் பார்பரா பெய்க்கிர்ச்சர் மற்றும் அவரது குழுவினர் வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டனர். சோதனை சாலையை காட்டிற்கு எடுத்து சென்றனர். மியூனிச்சிற்கு வெளிப்புறத்திலுள்ள காட்டில் ஸ்ப்ரூசஸ் மற்றும் பீச் என இரண்டு விதமான மரங்களில் வலிமையான நீர் புகாத அல்டராசவுண்ட் சென்சார்களைப் பொருத்தினர். சிலவற்றை கூரைகளால் மூடி கோடை மழையை தடுத்து செயற்கையான வறட்சியை உருவாக்கினார். ஐந்து வருட கண்காணிப்பில் பீச் மரங்கள் ஸ்ப்ரூசஸ் மரங்களைவிட  அதிகமாக வறட்சியை தாங்கக்  கூடியவை என தெரியவந்தது. உள்ளார்ந்த இயக்கங்கள் இதற்கான காரணத்தை விளக்குகிறது. மரங்களிலுள்ள ஆயிரக்கணக்கான மெல்லிய குழாய்கள் மூலம் மேற்பரப்பு அழுத்தம் எனும் நிகழ்வினால் நீரானது  செல்கிறது. இலைகளிலுள்ள துளைகள் வழியாக ஆவியாகும் நிகழ்வு நீரை தண்டின் உச்சிக்கு செலுத்துகிறது. ஆனால் மண்ணில் போதுமான நீர் இல்லாவிட்டால் இந்த மேல்நோக்கிய இழுவை, குழாய்களில்  காற்று குமிழ்களை  உண்டாக்குகிறது. இது  எம்பாலிஸம் எனப்படுகிறது.  வறட்சியினால் பாதிக்கப்பட்ட மரங்கள் அதிக அல்டரா சவுண்ட் சமிக்கைகளை வெளியிட்டன. இந்த மெலிதான ஒலிகள் காற்றுக் குமிழிகளில் மோதி திரும்புவனவாகும். இந்த சோதனையில் ஸ்ப்ரூஸ் மரங்கள் பீச் மரங்களைவிட  அதிக எதிரொலியை வெளியிட்டன. ஆகவே அவைகளில் அதிக எம்பாலிஸம் உள்ளது எனக் காட்டுகிறது. இலைகளிலுள்ள துளைகளை  மூடுவதன் மூலம் மரங்களில் எம்பாலிஸம் ஏற்படுவதை தடுக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யும்போது ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன்டை ஆக்சைட் கிடைக்காது. மரங்கள் உயிர் வாழ்வதற்கும் வளர்வதற்கும் தேவையான கார்போஹைடிரேட் மற்றும் சர்க்கரை சத்துக்களை உற்பத்தி செய்ய இயலாது.

ஆகவே வறட்சிக் காலங்களில் மரங்கள் ‘பட்டினி கிடப்பதற்கும் தாகத்தினால் சாவதற்கும்  இடையில் தேர்வு செய்ய முடியாத நிலையை’ எதிர்கொள்கின்றன என்கிறார் பெய்கிர்ச்சர். பீச் மரங்கள் தங்களது இலைத்துளைகளை  ஸ்ப்ரூஸ்  மரங்களைவிட நீண்ட நேரம் திறந்திருந்தாலும் குறைவான எம்பாலிஸத்தினால் பாதிக்கப்படுகின்றன. அதற்கு காரணம் அவற்றின் வேர்கள் ஆழமான ஈரமான மண்ணிற்குள் செல்வதும் சிறப்பான நீர் சேமிப்பைக் கொண்டிருப்பதும் ஆகும்.  சோதனையின் முடிவில் நிலத்தில் நீர் பாய்ச்சி ஈரப்படுத்திய போது  எல்லா மரங்களும் பெரும்பான்மையான அளவுகளில் பழைய நிலைக்கு திரும்பின.எம்பாலிசமும் நீரால் நிரப்பப்பட்டன. ஆனால் மரத்தின் தண்டுப்பகுதியில் உள்பகுதியிலுள்ள ஈரத்தை அளவிட்டபோது ஸ்ப்ரூஸ் மரங்கள் அப்போதும் வற்றிய நிலையிலேயே இருந்தன. இந்த மரங்களுக்கு வறட்சியிலிருந்து மீண்டு வர ஒரு மழை போதவில்லை. நீண்ட வறட்சிக்குப் பின் இந்த மரங்கள் தங்களுடைய நீர் சேமிப்பு நிலையை திரும்ப அடையமுடியுமா, அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது தெளிவாகவில்லை.  பருவநிலை மாற்றங்கள் தீவிரமான மற்றும் அடிக்கடி  ஏற்படும் வறட்சிநிலைகளை தோற்றுவிக்கும். இதனால் வறட்சியை தாக்கு பிடித்து விரைவாக மீண்டு வரும் மரங்கள் எதிர்கால காடுகளில் அதிகம் காணப்படும். பருவ நிலை சூடாகும்போது உலகின் வெப்பக் காடுகளில் உள்ள மரங்களின் தொகுப்பு மாறக்கூடும். இதனால் அந்த உயிர்சூழலில் வாழும் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் நிச்சயமற்ற  பாதிப்புகள் ஏற்படும். வறட்சியை  தாக்குப்பிடிக்க முடியாத ஸ்ப்ரூஸ் போன்ற வகைகளுக்கு பல்வேறுதரப்பட்ட மரங்களைக் கொண்ட காடுகள் உதவுமா என்று பரிசோதிக்க உள்ளார் பெய்கிரிச்சர். ஆழமான வேர்கள் கொண்ட பீச் மரங்களுக்கு நடுவில் ஸ்ப்ரூசஸ் நட்டால் அதன் வேர்கள் இருக்கும் மண்ணின் மேற்பகுதியில் ஈரம் அதிகரிக்கலாம் என்கிறார் அவர்.

சீனாவின் செயற்கை இணைப்புக் கோள்கள்

சீனா தனது தரை நிலையங்களுக்கும் நிலவுக்கு அனுப்பும் விண்கலங்களுக்கும் இடையில் தொடர்பு இணைப்பாக ரிலே கோள்களை நிறுவ உள்ளது. 2024இல் ஒரு ரிலே கோளை அனுப்பும் என்று தெரிகிறது.அதே வருடம் தனது நிலவு திட்டமான சாங்கே -6 ஐயும் அனுப்ப திட்டமிட்டுள்ளது. 2026இல் சாங்கே -7 ஐ அனுப்ப உள்ளதாம்.

உள்  காயத்திற்கு புதிய மருந்து

மனித உடலில் இயற்கையாக நடக்கும் இரத்த உறைதல் போன்ற  நிகழ்வை ஏற்படுத்தும் ஒரு புதிய பொருளை அறிவியலாளர்கள் உண்டாக்கியுள்ளனர். இதை உடலின் உள்ளே செலுத்தும்போது காயம் ஏற்பட்டிருக்கும் பகுதியில் ரத்த உறைதலை ஏற்படுத்துகிறது. இந்தப் பொருளா னது ஒரு நானோ துகளும் ஒரு பாலிமரும் கொண்டது. இதற்கு முன் பயன்படுத்திய ரத்த நிறுத்த நானோ துகள்களை விட சிறப்பாக செயல்படுவதாக சோதனைகள் காட்டுகின்றன என்கிறார்கள். ஒன்றுக்கொன்று நிறைவு செய்யும் இரண்டு தொடர் அமைப்புகளை உண்டுபண்ணி வலுவான ரத்த உறைதலை ஏற்படுத்துகிறதாம்.

உயிரினம் விழிக்கத் தொடங்கியது எப்போது?

நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய மட்ஸ்கிப்பர்ஸ் எனும் மீன் மனிதர் களை போலவே கண் இமைகளை அசைக்கக்கூடியது. இதனால் விலங்கின முன்னோடிகள் எவ்வாறு நீரிலிருந்து நிலத்திற்கு வாழ தகவமைத்துக்கொண்டன என்பதைக் கண்டறிய  இந்த மீன்களை  ஆய்வு செய்தனர். மனிதர்களையும்  மற்ற விலங்கினங்களையும்  போல இந்த மீன்கள் கண்களை சுத்தம் செய்யவும் பாதுகாத்துக்கொள்ளவும் கண் இமைகளை மூடித் திறக்கின்றன. மனிதர்களின் முன்னோடிகள் எனக் கருதப்படும் டெட்ராபாட்ஸ் எனும் ஊர்வன நீரிலிருந்து நிலத்திற்கு வாழத்தொடங்கியபோது கண் இமைகளை மூடி திறக்கும் (blinking)இயல்பு பரிணமித்தது என்று இந்த ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.    


 

;