science

img

பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது!

பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் மூலம் எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்கள் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளன.


இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ என்ற நவீன மின்னணு செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்து உள்ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (ஏப்ரல் 1) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


‘எமிசாட்’ செயற்கைக்கோள் 436 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் நமது ராணுவத்தின் உளவுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். உள்நாட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ மையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க உள்ளது.


பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் மூலம் எமிசாட் உடன் அமெரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, லித்துனியா ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளன. மேலும், பரிசோதனை முயற்சியில் இஸ்ரோ, இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஎஸ்டி) தயாரித்த சிறிய வகை ஆய்வு சாதனங்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.


இதற்கிடையே உலகில் முதல் முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட உள்ளன. அதன்படி ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்டு 749 கி.மீ அடைந்த உடன் எமிசாட் நிலைநிறுத்தப்படும். பின்னர் 505 கி.மீ தூரத்தில் 220 கிலோ எடை உடைய 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படும். இறுதியாக 485 கி.மீ தூரத்தில் சிறிய வகை ஆய்வு சாதனங்கள் நிலைநிறுத்தப்படும்.



;