science

img

சந்திராயன்-2 வரும் ஜூலை 21-22ம் தேதி ஏவப்படலாம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சந்திராயன்-2 வரும் ஜூலை 21-22ஆம் தேதியில் ஏவப்படலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய சந்திராயன்-2 விண்கலம், ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் ஞாயிறு காலை 6.51 மணிக்குத் தொடங்கியது. 640 டன்  ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி எம்.கே III மூலம் விண்கலத்தை செலுத்த தயார் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், கவுன்ட் டவுன் நிறைவடைய இருந்த 56  நிமிடங்கள், 24வது வினாடியில், திடீரென ஏவப்படுவது நிறுத்தப்பட்டது. இதை அடுத்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திராயன் - 2 ஏவப்படுவது தற்காலிகமாக  நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து, கோளாறு குறித்து சில மதிப்பீடுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றும், முதலில் ராக்கெட்டில்  ஏற்றப்பட்ட எரிபொருளை காலி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இது மிக சிறிய கோளாறுதான் என்றும் அந்த கோளாறு ஓரிரு நாட்களில் சரி செய்யப்பட்டு விடும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

அதன்பிறகு சந்திரயான்-2 விண்கலத்தை உடனே விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். நிலவின் தென்பகுதியில் சூரிய ஒளி இருக்கும் சமயத்தில் சந்திரயான்-2 விண்கலத்தை தரை இறங்க செய்யும் வகையில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் வருகிற ஞாயிறு மதியம் (ஜூலை 21) அல்லது திங்கள் காலை (22ம் தேதி) சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

;