science

img

நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திராயன் 2 நாளை நுழையும் - இஸ்ரோ தகவல்

சந்திரயான்-2 விண்கலம் நாளை நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி, சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை மாற்றப்பட்டு பூமிக்கும் விண்கலத்துக்குமான தூரம் அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சந்திரயான் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் 6 நாட்கள் பயணத்துக்குப்பின் நிலவுக்கு அருகே சந்திரயான் 2 நாளை காலை 8 மணி அளவில் (ஆகஸ்ட் 20) சென்றடையும். அப்போது விண்கலத்தில் உள்ள திரவ எரிவாயு இயந்திரம் இயக்கப்பட்டு, இந்த விண்கலம் குறைந்தபட்சம் 118 கிமீ தூரமும், அதிகபட்சம் 18,078 கிமீ தொலைவும் கொண்ட நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும். அதன்பின்னர், திரவ எரிவாயு இயந்திரம் மூலம் விண்கலத்தின் வேகம் 4 முறை படிப்படியாக குறைக்கப்பட்டு அதன் சுற்றுப் பாதை மாற்றப்படும். இதன்மூலம் நிலவின் தரைப்பகுதிக்கும் விண்கலத்துக்குமான உயரம் தொடர்ந்து குறையும். இதை அடுத்து, வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நிலவில் இருந்து 100 கிமீ உயரத்தில் விண்கலம் இருக்கும்போது, அதிலிருந்து லேண்டர் கருவி தனியே பிரிந்து நிலவை நோக்கிச் செல்லும். அப்போது அது மணிக்கு 6,120 கிமீ வேகத்தில் செல்லும்.

இதைத் தொடர்ந்து அதன் வேகம் படிபடியாக குறைக்கப்பட்டு வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் தரைப்பகுதியில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் லேண்டர் நிறுத்தப்படும். பின்னர் எங்கு தரையிறங்குவது என்பதை அதிலுள்ள சென்சார்கள் 25 நிமிடங்கள் சோதனை செய்து சரியான இடத்தை தேர்வு செய்யும். இறுதியாக நிலவின் தென்துருவத்தில் உள்ள ‘மன்சூனு சி மற்றும் சிம்பெலஸ்என்’ என்ற இரு பள்ளங்களுக்கு இடையே லேண்டர் மிக மெதுவாக தரையிறங்கும்.

லேண்டர் தரையிறங்கிய 4 மணி நேரத்துக்கு பின்னர் அதிலிருந்து ரோவர் வாகனம் வெளியே வந்து, நிலவில் 500 மீட்டர் வரை ஊர்ந்து சென்று ஆய்வில் ஈடுபடும். லேண்டர் மற்றும் ரோவர் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 

;