science

img

சந்திரயான் 2 சவால் மிக்க நிமிடங்கள்

சந்திரயான் 2 விண்கலத்தை, செப்டம்பர் 7(சனி) அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலாவின் மேற்பரப்பில் தரையிறக்குகின்றனர். சனிக்கிழமை காலை உலகம் கண்விழிக்கும் தருணத்தில், இந்தியா - இந்த மகத்தான சாதனையை நடத்தி முடித்திருக்கும். நிலாவின் தென்துருவ பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் சந்திரனை நெருங்கிய நிலையில், வெள்ளியன்று கடைசி சுற்றுவட்டப்பாதையில் சங்கமித்தது.

நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்திரயான் 2 விண்கலத்தின் இறுதி மற்றும் 5வது கட்ட நீள்வட்டப்பாதை குறைப்பு நடவடிக்கையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செப்டம்பர் 1 ஆம் தேதியன்று மேற்கொண்டனர். விக்ரம் லேண்டர் குறைந்தபட்சம் 119 கிமீ தொலைவையும் அதிகபட்சம் 127 கிமீ தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2ஆம் தேதியன்று, 1.15மணியளவில், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது. செப்டம்பர் 3ஆம் தேதி, லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டது. சந்திரயான் 2 விண்கலத்தில் லேண்டர் நிலவின் அருகில்(109 கி.மீ) கொண்டு செல்லப்படது. பின், செப்டம்பர் 4 ஆம் தேதியன்று, இன்னும் நெருக்கமாக 36 கி.மீ அருகில் கொண்டு செல்லபட்டது. இந்நிலையில், சந்திரயான்-2 விண்கல திட்டத்தின் முக்கியமான நிகழ்வு சனி அதிகாலையில் நடக்கவுள்ளது. நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் விக்ரம் லேண்டரை தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து உள்ளனர். நிலாவின் தென்துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் என்ற பள்ளங்களுக்கு நடுவே விக்ரம் லேண்டர், 70 டிகிரி கோணத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்யப்படுகிறது. நிலவில் தரையிறக்குவதற்காக சரியான சமதளப்பரப்பை தேர்வு செய்த பின், சரியாக 1.55 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலாவில் தரையிறங்கும் எனக் கூறியுள்ளது இஸ்ரோ.

அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வைத் தொடங்க உள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை ஒரு நிலா நாள் (14 பூமி நாட்கள்) நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும். இதுவரை நிலவின் வடதுருவத்தில் மட்டுமே அனைத்து விண்கலங்களும் ஆராய்ச்சி செய்துள்ள நிலையில், முதன் முறையாக சந்திரயான் 2 நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சியை தொடங்கவுள்ளது. இஸ்ரோவின் கன்ட்ரோல் ரூமிலிருந்து சந்திரயான் 2, நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பள்ளிக் குழந்தைகள் நேரலையில் பார்க்க உள்ளனர். மேலும், இந்நிகழ்வை அனைவரும் நேரலையில் கண்டுகளிக்க யூடியூப்பில் இஸ்ரோவின் சானலை பார்க்கலாம்.

சந்திரயான் 2 : ‘சாஃப்ட் லேண்டிங்’  கடைசி 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?

சந்திரயான் 2 திட்டத்தில், தரையிறங்கும் கலன் (விக்ரம் லேண்டர்) நிலவின் மேற்பரப்பில், தானே நிலைநிறுத்திக் கொள்ளும் தருணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.     தரையில் இருந்து எந்த கட்டுப்பாடும் இல்லாமல், விக்ரம் கலன் தானாகவே வழிநடத்திக் கொள்ளும் அந்தத் தருணம், “படபடப்பான 15 நிமிடங்கள்” என அவர் விவரிக்கிறார்.

  •  நிலவில் தரையிறங்குவது என்பது கடினமானதாக  இருக்கலாம்.
  •  நிலவில் வளிமண்டலம் கிடையாது. இதனால் லேண்டரை மெதுவாக தரையிறக்க பாராசூட்டை         பயன்படுத்த முடியாது.
  • எரிபொருளை பயன்படுத்தி சமநிலையில் தரையிறங்குவதுதான் ஒரே வழி.
  • அதாவது, லேண்டர் அதனுடைய சொந்த ராக்கெட் இன்ஜின்களை பயன்படுத்தி அதன் வேகத்தை சீராக குறைக்கும்.
  • நிலவின் மேற்பரப்பை நெருங்க நெருங்க, கிடைமட்டமாக லேண்டர் நகர்ந்து கொண்டே இருக்கும்.
  • நிலவில் லேண்டர் தரையிறங்கும் அந்த தருணத்தில், ராக்கெட் இன்ஜின்கள் நகர்வை நிறுத்தி, அதே சமயத்தில், இறக்கத்தின் வேகத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு பெயர்தான் ‘சாஃப்ட் லேண்டிங்’.
  • இறுதி கட்டத்திற்கு முன்பு சுற்றுவட்டப் பாதை கலனும், லேண்டரும், நிலவில் பாறைகள் அல்லது பள்ளங்கள் இல்லாத எந்த இடத்தில் தரையிறங்கலாம் என்பதை ஆய்வு செய்திருக்கும்.
  • லேண்டர் தரையிறங்கிய பின் சந்திர மண்டலத்தில் ஏதேனும் தூசிகள் எழலாம். அப்படி இருந்தால், அந்த தூசிகள் மறைந்த பின்பு ரோவர் மெதுவாக ஊர்ந்து வெளியே செல்லும்.
  • நிலவில் தரையிறங்கிய இடத்தில் இருந்து 500 மீட்டர்  தூரம் ரோவரால் பயணிக்க முடியும்.
     

விக்ரம் லேண்டர் என்ன செய்யும்?

  • லேண்டர் தனது அருகில் உள்ள நிலவு நடுக்கங்களை ஆய்வு செய்யும். மேலும், சந்திர மண்டலத்தில் உள்ள மண்ணின் வெப்ப விவரங்களையும் சேகரிக்கும்.
  • ஆனால், நிலவின் மேற்பரப்பில் நிலவும் தீவிரமான காலநிலை ஒரு பெரும் சவாலாக அமையலாம்.
  • சூரிய வெளிச்சம் இருக்கும்போது, அங்கு வெப்பநிலை 100 டிகிரி செல்ஷியசுக்கு அதிகமாக செல்லலாம். இது -170 டிகிரி செல்ஷியஸ் வரை இறங்கலாம்.

எல்லோரும் பார்க்கலாம்!

தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் நேரலை யாக ஒளிபரப்பப்படும். இஸ்ரோ இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்படும். மேலும், யூடியூப்பில் இஸ்ரோவின் சானல், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் நேரலையாக ஒளிப்பரப்பாகும்.

முக்கிய பங்காற்றிய இரு பெண்கள்

சந்திரயான் - 2 நிலவுப்  பயணத் திட்டம் இரண்டு பெண்களின் தலை மையில் நடைபெற்றிருப்ப தாலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலவு பயணத் திட்டத்தின் இயக்குநராக ரித்து கரிதாலும், பணித் திட்டத்தின் இயக்குநராக எம்.வனிதாவும் பணியாற்றியுள்ளனர்.

நிலவில் தரையிறங்கும் தொழில்நுட்பம் (soft landing)

சந்திரயான்-2 விண் கலன் நிலவின் தென் துருவப்பகுதியில் தரையிறங்கும். விண்கலம் சுமூக மாக, மெதுவாக  ஒரு கிரகத்தில் தரையிறங்குவது என்பது, அனுப்பப்படும் கலன் சேத மடையாமல் இருப்பதை குறிக்கிறது. இதனை வெற்றிகர மாக நிகழ்த்திவிட்டால், நிலவில் விண்கலனை சுமூகமாக தரையிறக்குகின்ற தொழில்நுட்பத்தை கொண்டுள்ள நான்காவது நாடாக இந்தியா மாறும். இந்த தொழில்நுட்பத்தை இப்போது சோதனை செய்து பார்ப்பது நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் அடுத்த பயணத்திட்டத்திற்கு ஊக்கமூட்டுவதாக அமையும்.

இந்த விண்கலத்தில் என்ன கருவிகள் உள்ளன?

இந்த விண்கலத்தில் 13 கருவிகளை இந்தியா பொருத்தியுள்ளது. இவை தவிர நாசாவின் இன்னொரு கருவியை இந்தியா கட்டணம் எதுவும் பெறாமல் அனுப்பி வைத்துள்ளது.

நிலவின் சுற்று வட்டப் பாதையை அடைந்தது - நிலவை அடைய அதிக காலம் ஏன்?

இவை அனைத்தும் நிலவின் தென்துருவத்திலுள்ள இடத்தை மிகவும் நெருங்கி செல்கின்றன. இதற்கு முன்னர் நடைபெற்ற நிலவுப் பயணத் திட்டங்கள் அனைத்தும் நிலவின் மத்தியரேகை பிரதேசத்தையே அடைந்துள்ளன. தென் துருவத்திற்கு அருகில் எந்தவொரு விண்கலனும் தரையிறக்கப்படவில்லை என்பதால், தென்துருவத்தில் தரையிறங்கும் சந்திரயான்-2 அனுப்பும் தகவல்கள் புதியவையாக இருக்கும். நிலவிலுள்ள மெல்லிய காற்று மண்டலத்தை ஆய்வு செய்கின்ற கருவி ஒன்றும் உள்ளது. பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதுபோல நிலவில் நிலவு நடுக்கம் நிகழ்வது ஆய்வு செய்யப்படும். நிலவின் மேற்பரப்பில் வைக்கப்படும் கருவி நிலவிலுள்ள தட்பவெப்பம் பற்றி தகவல் அளிக்கும். நிலவிலுள்ள மண்ணை ஆரயா்வதற்கு ரோவர் ஊர்தியில் கருவி உள்ளது.

இந்தியாவுக்கு இதனால் என்ன பயன்?
இந்தியாவின் கொடியை சந்திரயான் கொண்டு சென்று நிலவில் இறங்குவதால் சிறப்பு பெறுகிறது. இந்தியாவின் பெருமையாகவும் இது கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம், சிறு கிரகங்களில் விண்கலனை தரையிறங்க செய்கின்ற மற்றும் நிலவுக்கு மனிதனை அனுப்புகிற தொழில்நுட்ப வாய்ப்புகளை இது வழங்குவதாக அமையும். இந்தியா நிபுணத்துவம் பெற விரும்புகிற முக்கிய தொழில்நுட்பம் இதுவாகும்.
 

இந்த பயண திட்டத்திலுள்ள சவால் என்ன?

நிலவு பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு ஈர்ப்பு விசை மிகக் குறைவு. காற்று மண்டலம் கிடையாது. நிலவில் தரையிறங்கும் முதல் முயற்சி இந்தியாவால் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தரையிறங்க பாராசூட்டுகளை பயன்படுத்தமுடியாது. எனவே, நிலவில் தரையிறங்குவது, ஆய்வு ஊர்தி கொண்டு ஆய்வு மேற்கோள்வது மிகவும் கடினமானவை. இதற்கு முன்னர் முயற்சித்த பாதி திட்டங்கள் தோல்வியில் முடிந்துள்ளன. அனைத்து பணிகளும் கணினியால் கட்டுப்படுத்தப்படும். நிலவில் தரையிறங்கும் கலனும், ரோவர் ஊர்தியும், சுற்றுவட்ட கலனில் இருந்து பிரியும் 15 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை.

நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்?

சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்டபோது, சந்திரயான்-2 விண்கலன் 2014ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், ரஷ்யா இதில் ஒத்துழைத்து நிலவில் இறங்கும் கலனை வழங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஷ்ய விண்வெளி நிறுவனத்தோடு ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக இது நடைபெறவில்லை. எனவே, நிலவில் தரையிறங்கும் கலனை இந்தியாவே உருவாக்க முடிவு செய்ததால் சந்திரயான் 2 விண்கலனை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது.


 

 

;