science

img

பட்டொளி வீசிப் பறந்து வரும் பச்சை வால் நட்சத்திரம்

வாழ்நாள் வானியல் நிகழ்வு

இப்போது விடியல் வானில் வலம் வந்து கொண்டிருக்கும் பச்சை வால்நட்சத்திரம் அல்லது பச்சை  வால்மீன் என்பது பற்றி வானியலாளர்கள் பரபரப்பாக பேசுகின்ற னர். காரணம் இந்த பச்சை வால்மீன்/வால்நட்சத்திரம் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் பனியுக காலத்தில், நியாண்டர்தால் காலத்தில் நம் சூரிய குடும்பத்தின் உள்வட்டத்துக்குள் வந்துபோனது. இப்போதுதான் மீண்டும் வருகிறது. இந்த வார கடைசிதான்  சூரிய குடும்ப வெளிப்புற தூதுவர் பச்சை வால்மீனின் இறுதிப் பயண வருகை. இனி இவர் வரவே மாட்டார். எனவே இது ஒரு வாழ்நாள் வானியல் நிகழ்வு. பிப்ரவரி 10 க்குள், அது செவ்வாய் கோளுக்கு  அருகில் இருக்கும்

வால் நட்சத்திரம்/வால் மீன் 

சூரிய குடும்பத்தின் எல்லை என்பது வால்மீன்  தோன்றும் ஊர்ட் மேகங்கள் (oort clouds)   வரை விரிந்துள்ளது. வால் நட்சத்திரம் அல்லது வால்மீன் என்பது சூரிய குடும்பத்தின் வெளி எல்லையாகிய, ஊர்ட்மேகங்களி லிருந்து, அழுக்கு பனிப் பந்துகளாக புறப்பட்டு சூரியனை நோக்கி வருகிறது. அந்த அழுக்கு பனி பந்துகள் சூரியனை நோக்கி, சூரியனுக்கு அருகில் வந்ததும் பனி சூரிய வெப்பத்தால் உருகி அதன் எதிர்புறத்தில் வால் போல் நீளுகிறது. இதன் மேல் சூரிய ஒளி படுவதால், இது ஒளியைப் பிரதிபலிக்கிறது. எனவே அது ஒளிர்கிறது. அவை நட்சத்திரம் போல ஒளி தருவதால், நீண்ட வாலும் இருப்பதால் அதனை வால் நட்சத்திரம் என்று ஆதிகால மக்களும் விஞ்ஞானிகளும் அழைத்தனர். வாலின் நீளம் பல நூறு கி.மீ.. இருக்கும். எனவே மிளிரும்  வால் நட்சத்திரம்/ வால்மீன் என அழைக்கப் படுகிறது. பொதுவாக ஊர்ட்மேகங்களிலிருந்து வரும் வால் நட்சத்திரங்கள் அல்லது வால் மீன்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சூரியனை சுற்றி வருவதற்கு வருகை தரும்.

பச்சை நிற வால் நட்சத்திரம் 

இப்போது வந்துள்ள பச்சை நிற வால்மீன் சுமார் 50,௦௦௦ ஆண்டுகளுக்கு முன் நமது மூதாதையர்கள் இனத்தைச் சேர்ந்த  நியாண்டர்தால் மனிதர்கள் வாழ்ந்த பனிக்காலத்தில் வந்தது. மனித இனம் ஆப்பிரிக்காவுக்கு அப்பால் அதன் எல்லையை  விரிவுபடுத்தியது. அப்போது  பெரிய மாமூத் யானை மற்றும் சபர்-பல் புலிகள் போன்ற பெரிய பனி யுக பாலூட்டிகள் நிலப்பரப்பில் சுற்றித் திரிந்தன, மேலும் வட ஆப்பிரிக்கா ஈரமான, வளமான மற்றும்  மழை பெய்யும் இடமாக இருந்தது. அதன்பின்  இப்போதுதான் நம்மை பார்ப்பதற்காக இந்த பச்சைநிற வால்மீன் நம் விருந்தாளி யாக  நம்மைச் சுற்றிப்பார்க்க வருகிறார். இனிமேல் இவர் திரும்பிவரவேமாட்டார். அப்படியே போய்விடுவார் என நாசாவின் சோடாஸ் (Chodas) தெரிவிக்கிறார். இந்த வால் நட்சத்திரம்/வால்மீனில் இரட்டை கரிமம் (இரண்டு கார்பன் அணுக்கள் C=C)  உள்ளதாலும், மற்றும் சைனோஜன் (cynogen- (CN)2, உள்ளதாலும், சூரிய ஒளி இதன் மேல் படும்போது லேசான பச்சை வண்ணத்தில் மின்னுகிறது . 

என்ன பேரோ?  நாங்க எந்த ஊரோ? 

இந்த வால்மீனின் பெயர் C/2022,E3(ZTF).. இதனை கலிபோர்னியா, பாலோமர் மலையிலுள்ள கால்டெக்கின் பாலோமர் ஆய்வக ஸ்விக்கி ட்ரான்சியன்ட் ஃபேசி லிட்டி(Zwicky Transient Facility) என்ற பரந்த-புல கேமராவைப் பயன்படுத்தி வானிய லாளர்கள், மார்ச் 2, 2022 அன்று பச்சை வால்மீன் கண்டுபிடித்தனர். அன்றிலிருந்து இன்று வரை அந்த வால்மீன் கொஞ்சம் கொஞ்ச மாக நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது தான் பூமியை நெருங்கி இருக்கிறது.

எங்கே, எப்போது பார்க்கலாம் ?

இப்போது வந்துள்ள பச்சை நிற வால்மீன் விடியல் வானில் தெரிகிறது.பின்னிரவு வானில், வடக்கே பெருங்கரடி விண்மீன் தொகுதி  தெரியும். அதன் கீழே உள்ள சிறு கரடி (smallbear) விண்மீன் தொகுதியில் உள்ள துருவ விண்மீனிலிருந்து(Polaris) 16° இல் இந்த பச்சை வால்மீன் மிளிர்கிறது. இதனை நீங்கள் சந்திரன் மறைந்த பின்னால். வெறும் கண்ணால் வட கிழக்கு வானில் விடியற் காலை. 4.00 மணியிலிருந்து 6.00 மணி வரை தெளிவாகப் பார்க்கலாம். மிக மிக லேசான பசுமை காணப்படும். 

பிப்ரவரி1-2 தேதிகளில், இது பூமிக்கு வெகு அருகாமையில் வரும். இப்போது பச்சை நிற  வால் மீன் பூமியிலிருந்து சுமார் 42 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள தூரத்தை போல் 28 % ஆகும். (0.28 வானியல் அலகு). பிப்ரவரி முதல் வாரம் வரை   இதனைப் பார்க்கலாம் என்றாலும், முதல் 3 நாட்கள் தொலைநோக்கி /இருகண் நோக்கி  இன்றி வெறும் கண்ணால் பார்க்க முடியும் .அதன் பின் இது சூரியனை விட்டு தூரத்தில் செல்வதால், செவ்வாய்க்கு அருகில் இருக்கும். நாம் காண முடியாது  

பச்சை வால் மீனால் பயன் ?

நாசாவின்  ஜேம்ஸ் வெப் விண்வெளி  தொலைநோக்கி மூலம் இதனை கண்காணிப்ப தற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வால்மீன் ஆதிகால சூரிய குடும்பத்தைப் பற்றிய தடயங்களை வழங்க முடியும்; ஏனெனில் இது சூரிய மண்டலத்தின் துவக்க கால கட்டங்களில் உருவானது என்றும் கலிபோர்னியா தொழில் நுட்பக் கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் தாமஸ் பிரின்ஸ் தெரிவிக்கிறார்.. ரொம்ப முக்கியமான விஷயம்..இதனைப் பார்ப்பதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.  அரசியல் நிலை பிரச்சனையும் உண்டாகாது. 

- பேரா. சோ. மோகனா

 

;