science

img

தொடர்பை இழந்தது விக்ரம் லேண்டர்

சந்திரயான் 2 - கடைசி நொடிகளில் பின்னடைவு  அறிவியலில் தோல்வி கிடையாது : பிரதமர்

பெங்களூரு,செப்.7- இந்திய மக்கள் மட்டுமின்றி உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சந்திரயான் 2 பயணத்தின் கடைசி நொடிகளில், விக்ரம் லேண்டர், பூமியுடனான தொடர்பை இழந்தது. எனினும் சந்திரயான் 2 திட்டத்தின் 95சதவீதம் வெற்றிபெற்றுள்ளது. 

48 நாள் பயணம்

நிலவின் தென்துருவப் பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில்  ஏவப்பட்டது. நிலவைச் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் 2 விண்கலத்தின் இறுதி மற்றும் 5வது கட்ட நீள்வட்டப்பாதை குறைப்பு நட வடிக்கையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செப்டம்பர் 1 அன்று  மேற்கொண்டனர். விக்ரம் லேண்டர் குறைந்தபட்சம் 119 கிமீ தொலை வையும் அதிகபட்சம் 127 கிமீ தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் நிறுத்தப் பட்டது.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2 அன்று, 1.15மணியளவில், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து பிரிக்கப்பட்டது. செப்டம்பர் 3 அன்று லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டது. சந்திரயான் 2 விண்கலத்தில் லேண்டர் நிலாவின் அருகில்(109 கி.மீ) கொண்டு செல்லப்பட்டது. பின், செப்டம்பர் 4 அன்று இன்னும் நெருக்கமாக 36 கி.மீ அருகில் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், சந்திரயான்-2 விண்கல திட்டத்தின் முக்கியமான நிகழ்வாக சனிக்கிழமை (செப்டம்பர் 7) அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக விக்ரம் லேண்டரை தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

நிலவின் தென்துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் என்ற பள்ளங்களுக்கு நடுவே விக்ரம் லேண்டர், 70 டிகிரி கோணத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்யப்பட திட்டம் வகுக்கப்பட்டது. விக்ரம் லேண்டரின் தரையிறங்கும் செயல்பாடு அதிகாலை 1:38 மணிக்கு துவங்கி 1:48 மணிக்கு விண்கலன் தரையிறங்கும் வேகம்  படிப்படியாக குறைந்தது. Rough breaking Phase என்று அழைக்கப்படும் ‘கடினமான கட்டத்தைத் தாண்டுவது’ என்றஇந்த தரையிறங்கும் செயல்பாட்டின் முதல் பகுதி வெற்றிகரமாக முடிந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த நொடிகளில் வெற்றிகரமாக தரையைத் தொடும் என ஒட்டு மொத்த நாடும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த தருணத்தில், 1:58 மணிக்கு விண்கலத்தில் இருந்து எந்த சிக்னல்களும் வரவில்லை. இதனால் இஸ்ரோ கட்டுப்பாட்டு  அறையில்  பதற்றம் ஏற்பட்டது. தரையிறக்கத்தில் முக்கிய நிகழ்வான Fine Breaking Phase எனப்படும் சிறப்புக் கட்டத்தை தொடுவது என்ற செயல் பாட்டின் போது எந்த சிக்னலும் வரவில்லை.

இதனால் லேண்டர் என்ன ஆனது என்ற கவலையில் விஞ்ஞானிகள் மூழ்கினர். சில நிமிடங்கள் காத்திருந்தும் பலன் இல்லை. இந்நிலையில்,   இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், பிரதமர் மோடியிடம் சென்று சூழ்நிலையை விளக்கினார்.

அதன் பின்னர் விஞ்ஞானிகள் ஆலோசனைக்குப் பிறகு சில நிமிடங்களில், இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் கூறுகை யில், “லேண்டர் விக்ரம் 2.1 கி.மீ உயரத்தை அடையும் வரை இயல்பாகவே இருந்தது. அதைத் தொடர்ந்து, லேண்டரிலிருந்து தகவல் தொடர்பு இழந்தது. கிடைத்துள்ள விபரங்கள்  பகுப்பாய்வு செய்யப்படுகிறது” என கட்டுப்பாட்டு அறையில் கலக்கமடைந்திருந்த விஞ்ஞானிகளுக்கு மத்தியில் தானும் கண்கலங்கியவாறு அறிவித்தார்.

‘தைரியமாக இருங்கள்’

இந்நிலையில் அங்கிருந்த விஞ்ஞானிகளை அரவணைத்து அவர்களிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தைரியமாக இருங்கள்  என்று கூறினார். நாம் இதுவரை செய்தது ஒரு சாதாரண விசயமல்ல; மிகப்பெரிய காரியம்; கவலைப்படாதீர்கள் என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து  காலை 8 மணிக்கு இஸ்ரோ மையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டுக்காக வாழ்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். இவர்களை நினைத்து நாடே பெருமை கொள்கிறது. நமது தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தூக்கமின்றி இரவு பகலாக உழைத்து வருகின்றனர். பின்னடைவு ஏற்படுத்திய தாக்கத்தை நான் உணர்ந்தேன். கடைசி வரை சந்திரயான் 2-க்காக உழைத்ததற்கு நன்றி. நிச்சயமாக நிலவைத் தொடும் முயற்சி வெற்றி அடையும். இந்த விஷயத்தில் இளையோர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் கனவு ஒன்றாகவே இருந்தது. எதிர்காலத்தில் நாம் மேலும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது.

கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரம் அல்ல.நமது விண்வெளித் திட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. நாட்டின் வளர்ச்சிக்காக நம்ப முடியாத அளவுக்கு பணியாற்றியுள்ளீர்கள். குறிக்கோளை எவ்வளவு நெருங்க முடியுமோ, அவ்வ ளவு நெருங்கியுள்ளீர்கள். இதுவரை யாரும் முயற் சிக்காததை நீங்கள் முயற்சி செய்துள்ளீர்கள். நமது விண்வெளித் திட்டத்தில் புதிய உச்சங்கள் இனிதான் வரவுள்ளன.

நானும், நாடும் உங்களு டனே இருக்கிறோம். புதிய விடியல் நமக்காக காத்திருக் கிறது. பொறியாளர்கள், விஞ்ஞானிகள் உழைப்பில் கர்வம் கொள்கிறேன். உங்கள் உழைப்பு நாட்டை தலை நிமிர வைத்துள்ளது. அறிவியலில் தோல்வி என்பதே கிடையாது. அதில் பரிசோதனைகள் மற்றும் முயற்சிகளே உள்ளன.  உலக அரங்கில் இந்தியா தலைநிமிர இஸ்ரோ முக்கிய பங்கு வகிக்கிறது. சாதிக்க நமக்கான வாய்ப்புகள் இன்னும் நிறைய உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். மேலும் இப்பேட்டியின் போது, “எதிர்பார்த்த வேகத் தைவிட விக்ரம் லேண்டர் வேகமாகச் சென்று நில வின் மேற்பார்வைதொட்டது என்றும் மோடி குறிப்பிட்டார். 

டாக்டர் சிவனுக்கு ஆறுதல்

பெங்களூரு மையத்தில் பேசிவிட்டு புறப்படும்போது பிரதமர் மோடியிடம் இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். பிரதமர் மோடி சிவனை கட்டி யணைத்து ஆறுதல் கூறி னார். முன்னதாக அனைத்து விஞ்ஞானிகளையும் கை குலுக்கி பாராட்டினார். நிகழ்வில் பங்கேற்க வந்தி ருந்த குழந்தைகளையும் அவர் பாராட்டினார்.