science

img

அறிவியல் கதிர் - ரமணன்

முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் கூடுமா? 

முட்டை, வெண்ணெய், கிரீம் போன்ற விலங்குப் பொருட்களில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் அவற்றை தவிர்க்குமாறு பல ஆண்டுகளாக அறிவுறுத்தப்  பட்டு வந்தது. இவை இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை  அதிகப்படுத்தி இதய நோய்கள் உண்டாகும் அபாயத்தை அதிகரிக்கின்றன என்று கருதப்பட்டு வந்தது. சர்க்கரை  நோய் போன்ற சில நோயாளிகளுக்கு இது பொருந்தும். ஆனால் தற்போதுசெய்யப்படும் பல ஆய்வுகளின்படி நிறை கொழுப்பு(saturated fat), சர்க்கரை மற்றும் சோடி யம் ஆகியவையே இரத்த நாளங்களில் பிளேக் படிவதற்கு  வழிவகுக்கின்றன. உணவிலுள்ள கொலஸ்ட்ரால் அல்ல என்று தெரிகிறது.  பிரச்சனை என்னவென்றால் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகள் நிறைகொழுப்பையும் அதிக அளவில் கொடுக்கின்றன. இதற்கு முட்டையும் ஷெல்மீன்களும் விதி விலக்காக உள்ளன(அவை சமைக்கப்படும் விதத்தைப் பொறுத்து). உண்மையில் முட்டை குறைந்த  கொழுப்பு, அதிக புரதம் மற்றும் சத்துகள் நிறைந்த  உணவு. அவை கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றன. அதனால் காக்னிடிவ் எனப்படும் அறிதிறன் குறைவதிலி ருந்து பாதுகாக்கின்றன.  இது குறித்து 890 நபர்களின் உடல்நலத் தரவுகளை கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் ஆய்வு செய்தனர். வாரத்திற்கு இரண்டிலிருந்து நான்கு முட்டைகள் எடுத்துக் கொண்டவர்களின் இரத்தக்  கொலஸ்ட்ரால் குறைவான அளவிலேயே இருந்தது. இதில்  பெண்களின் அறிதிறனும் கூடியது. ஆனால் ஆண்களின்  அறிதிறனில் மாற்றம் இல்லை. இன்னொரு மாதிரிகளில் ஆண்களின் அறிதிறன் மட்டும் கூடுவது தெரிந்தது. ஆகவே  அறிதிறனைப் பொறுத்தவரை வேறு காரணிகளும் இருக்க லாம். முட்டையில் புரதம், அமினோஅமிலம் மற்றும்  கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் அவை நரம்பு அமைப்பை பாதுகாப்பதிலும் மூளை செயல்படுவதிலும் பங்காற்றலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள் கிரிட்ஸ் - சில்வர்ஸ்டெய்ன் மற்றும் பெட்டன்கோர்ட். முட்டையில் கரோடினாய்ட்ஸ், கோலின் ஆகிய வேதிப்  பொருட்களும் உள்ளன. இவை முறையே அறிதிறன்  மற்றும் நரம்பு சமிக்கை கடத்திகளுடன் தொடர்புடை யவை. எனவே ஒரு உணவு அதிக கொலஸ்ட்ரால் கொண்டது என்பதால் அது நமது உடலுக்கோ அல்லது மூளைக்கோ கெடுதல் என்பதில்லை என்பதற்கான ஆதாரமாக இந்த ஆய்வு உள்ளது. இது ‘Nutrients’ எனும் இதழில் வந்துள்ளது. 

மயில்களின் அதீத பெருக்கம் 

மயில்களால் விவசாயிகளுக்கு பல தொல்லைகள் உண்டாகின்றன. மக்காச்சோளம் விதைத்த உடனே அவற்றை மயில்கள் உண்டுவிடுகின்றன. தக்காளி, மிளகாய், சிறுதானியங்கள் ,நெல் மற்றும் பிற தானியங்க ளுக்கும் அவை சேதம் விளைவிக்கின்றன என்கின்றார்  தமிழக விவசாயிகள் சங்க பொறுப்பாளர் ஜி.ரங்கனாதன்.  எனவே வனத்துறையினர் இது குறித்து கோவையிலுள்ள சலீம் அலி பறவைகள் ஆய்வு நிலைய அறிஞர்களுடன் இணைந்து ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர்.  முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மயில்  களின் எண்ணிக்கை பல மடங்குகளாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. குறைந்தது 38இலட்சத்திலிருந்து 61 லட்சம் வரை இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளார்கள். eBird  எனும் இணைய தளத்தில், பார்வையில் தட்டுப்படும்  மயில்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் ஆறுமடங்காக வும் இந்திய அளவில் இரண்டு மடங்காகவும் உயர்ந்துள்  ளது. மயில்களை உணவாகக் கொள்ளும் நரி, கீரி, காட்டுப்  பூனை, புனுகுப் பூனை ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது மயில்களின் பெருக்கத்திற்கு காரணமாக  இருக்கலாம். குறிப்பாக நரிகள், குள்ள நரிகள் ஆகியவை தமிழ்நாட்டின் சமவெளிகளிலிருந்து மறைந்தது முக்கிய காரணம் என இந்த ஆய்வு கருதுகிறது. மயில்களின் இரையான பாம்புகள் போன்றவை அதிகரிப்பதும் அவற்றின் பெருக்கத்திற்கு காரணமா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். மயில்களை விரட்ட வேலிகள் பயனளிப்பதில்லை. வயல்களில் குறுக்கும் நெடுக்குமாக பிளாஸ்டிக் கயிறுகளை கட்டிவைப்பது ஓரளவிற்கு தடுக்கிறதாம். சில விவசாயிகள் நாய்களைக் கொண்டு விரட்டுகின்றனராம். பல்லுயிர் சூழல், உணவுச் சங்கிலி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு காட்டுகிறது. 

பூஞ்சையிலிருந்து  புற்று நோய்க்கு மருந்து! 

கம்பளிப் பூச்சிகளை அழிக்கும் ஒருவகை ஒட்டுண்ணி பூஞ்சை கார்டிசெபின் எனும் வேதிப்பொருளை கொண்டுள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். சோதனைச் சாலையில் மனித திசு வளர்ச்சி மற்றும் மரபணு பகுப்பாய்வு மூலம் கார்டிசெபின் இன்னொரு செயலூக்க மிக்க வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. புதிய வேதிப்பொருள் புற்று நோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. விரைவாகவும் துல்லியமாகவும் இது செயல்படுகிறது. எனவே, தற்போதுள்ள சிகிச்சையில் நோய்வாய்ப்பட்ட செல்களுடன் ஆரோக்கியமான செல்களும் அழிவது இதில் தடுக்கப்படும். இதை புதிய சிகிச்சையாகவும் மருந்தாகவும் மற்ற மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.  இந்தப் பூஞ்சையின் ஒரு வகை, சீன பாரம்பரிய மருத்துவத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறதாம். அது வீக்கம் மற்றும் பேக்டீரியாக்கள் எதிர்ப்பு கொண்டது என்பதால் நவீன மருத்துவத்திலும் பயன்படுகிறது. இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் உடல் பருமன் மற்றும் இரத்தம் உறைதல் போன்ற சிகிச்சைகளுக்கு காரணமாக இருப்பது போல இதுவும் புதிய புற்று நோய் மருந்துகளை கண்டுபிடிக்க ஆரம்பப் புள்ளி என்கிறார் ஆர்என்ஏ உயிரியலாளர் கார்னேலியா தி மூர். இந்த ஆய்வு ‘FEBS Letters’ எனும் இதழில் வந்துள்ளது.