science

img

இந்நாள்... இதற்கு முன்னால்... ஏப்ரல் 10

837 - ஹேலி-யின் வால்வெள்ளி(வால் நட்சத்திரம்), புவிக்கு மிகஅருகில் வந்தது. அப்போது இது, புவிக்கு 0.0342 வானியல் அலகு (அதாவது 51 லட்சம் கி.மீ.) தொலைவுக் வந்தது. வானியல் அலகு என்பது, புவியிலிருந்து சூரியனின் தொலைவான 14.96 கோடி கி.மீ. ஆகும். வெறும் கண்ணாலேயே பார்க்கக்கூடிய, குறைந்த இடைவெளியில் வந்துபோகும் வால்வெள்ளி ஹேலி மட்டும்தான். பண்டைய கிரேக்கத்தில், கி.மு.467இல் பதிவுசெய்யப்பட்டுள்ள வால்வெள்ளிபற்றிய குறிப்புகள் ஹேலியை ஒத்திருக்கின்றன.

கி.மு.240இல் சீனாவில் பதிவுசெய்யப்பட்டுள்ள குறிப்புகள், ஹேலியைப் பற்றியதுதான் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஹேலி சூரியக் குடும்பத்திற்குள் வந்த பலநேரங்களிலும், பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், அன்றைய அறிஞர்களுக்கு, ஒரே வால்வெள்ளிதான் திரும்பத்திரும்ப வருகிறது என்பது தெரிந்திருக்கவில்லை. 1687இல் ஐசாக் நியூட்டன் வெளியிட்ட ப்ரின்சிப்பியா மேத்தமேட்டிக்காவில், ஈர்ப்புவிசை, இயக்கம் ஆகியவற்றிற்கான விதிகளைக் குறிப்பிட்டிருந்தாலும், வால்வெள்ளிகள் குறித்த அவரது ஆய்வு முழுமையடையாமலிருந்தது. அவருடைய நண்பரான எட்மண்ட் ஹேலி, சுமார் மூன்றரை நூற்றாண்டுகளாகத் தோன்றிய வால்வெள்ளிகளின் பட்டியலைத் தயாரித்தபோது, பெட்ரஸ் ஏப்பியனஸ் 1531இலும், கெப்ளர் 1607இலும், தான் 1682இலும் கண்டவை ஒரே வால்வெள்ளிதான் என்று கண்டுபிடித்தார். இது சற்றேறக்குறைய 76 ஆண்டுகள் இடைவெளியில் வருகிறது என்று, 1705இல் அறிவித்தார்.

1758இல் இது வரும் என்பதை கணித்திருந்த ஹேலி, இதைக் காண்பதற்கு முன்பே, 1742இல் (85 வயதில்!) இறந்துவிட்டாலும், அவரது பெயர் இதற்குச் சூட்டப்பட்டது. இயேசு கிறித்துவின் பிறப்புக்காலம் எந்த ஆவணத்திலும் பதிவு செய்யப்படாததால், கி.மு.6-4 காலகட்டத்தில் அவர் பிறந்திருக்கவேண்டும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். இதனால், கி.மு.12இல் புவிக்கருகில் வந்த ஹேலி வால்வெள்ளியே, இயேசு பிறந்த இடத்தை அடையாளம் காட்டிய 'பெத்லஹேமின் விண்மீன்' என்று விவிலியத்தில் குறிப்பிடப்படுவதாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

1986இல் ஹேலி புவிக்கருகில் வந்தபோது, ஒரு விண்கலத்திலிருந்து (அதுவரை காணப்பட்டதிலேயே) மிகஅருகில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட முதல் வெல்வெள்ளியாகியது. இந்த ஆய்வுகள், வால்வெள்ளிகளின் உட்கருப்பகுதி கட்டமைப்பு, இயங்கமைவு, வால் உருவாக்கம் ஆகியவை குறித்து அதுவரை இருந்த கருதுகோள்களைச் சரிபார்த்துக்கொள்ள உதவியது. தன் சுற்றுப்பாதையில்  வெள்ளியைவிட சூரியனுக்கு மிகஅருகிலும், புளூட்டோவைவிட வெகுதொலைவிலும் சென்றுவரும் ஹேலி, மீண்டும் 2161இல் புவிக்கருகில் வரவிருக்கிறது.