இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி டி3 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோள், புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ தயாரித்த எஸ்.எஸ்.எல்.வி டி3 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோள் இன்று காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளில், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜ.என்.எஸ்.எஸ்-ஆர்) மற்றும் எஸ்.ஐ.சி. யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். புவி கண்காணிப்பு, பேரிடர் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற பயன்பாடுகளுக்காக இந்த இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும், ஸ்பேஸ் கிட்ஸ் ஆஃப் இந்தியா ஸ்டார்அப் நிறுவனம் வடிவமைத்துள்ள 200 கிராம் எடை கொண்ட ‘எஸ்ஆர்-டெமோசாட்’ எனும் நானோ செயற்கைக்கோளும் எஸ்.எஸ்.எல்.வி டி3 ராக்கெட் மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.