இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடா பகுதியில் 2017 - 2019 வரையிலான ஆய்வு அறிக்கையில் 62 உயிரினங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10,500 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து காணப்படுவது மன்னார் வளைகுடா பகுதியாகும். இங்கு 2003 - 2005 ஆய்வின் முடிவில் மொத்தம் 4,223 கடல்வாழ் உயிரினங்கள் பதிவு செய்யப்பட்டு வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சார்பில், 2017 - 2019 ஆண்டுக்கான ஆய்வுகளை நடத்தவேண்டுமென முடிவு செய்யப்பட்டு ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வை நடத்த சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆய்வின் முடிவில் கடல் ஆராய்ச்சி நிறுவனம் கூறியதாவது, இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சுமார் 345 கி.மீ தூரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் 62 உயிரினங்கள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை தவிர அடையாளம் காணப்படாத 50-க்கும் மேற்பட்ட உயிரினங்களும் கண்டறியப்பட்டதாக கூறியுள்ளனர். மேலும் பவளப்பாறை திட்டுகளும், கடல் புல் திட்டுகளும் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.