science

img

விண்ணில் இருந்து அளக்கப்படும் பசுவின் மீத்தேன் உமிழ்வு

சிதம்பரம் இரவிச்சந்திரன்

உலகில் விவசாயத்தின் மூலம் ஏற்படும் மீத்தேன் உமிழ்வின் முக்கியக்காரணம் பசுக்கள் விடும் ஏப்பத்தின் மூலமே உருவாகிறது என்று புதிய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. விண்ணில் வலம் வரும் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் நடத்தப்பட்டன. கலிபோர்னியா பேக்கர்ஸ் ஃபீல்டில் ஜோவின் வாலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு பண்ணையில் செயற்கைக்கோள்களின் உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

செயற்கைக்கோள்
அனுப்பிய தகவல் பூமியில் இருந்து 450 கிலோமீட்டர் உயரத்தில் வலம் வரும் ஜி ஹெச் ஜி என்ற காலநிலை பற்றி ஆராயும் செயற்கைக்கோள் தொடரில் இருக்கும் கருவிகள் படம் பிடித்து அனுப்பிய விவரங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. நுண்ணலை அடுப்பின் அளவே உள்ள செயற்கைக்கோள்களே இத்தொடரில் உள்ளன. வாயு மண்டலத்தில் உருவாகும் மிகச்சிறிய அளவு மீதேன் உமிழ்வைக் கூட இவற்றால் துல்லியமாகக் கண்டறியமுடியும்.

பசுக்கள் ஏப்பம் விட்டால் மீத்தேன் வெளிவரும்
இந்த ஒரு பண்ணையில் இருந்து மட்டும் பசுக்கள் விடும் ஏப்பத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 5,116 டன் அளவு மீதேன் வாயு உமிழப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. வெளிவரும் இந்த வாயுவை சேகரிக்க முடிந்தால் 15,000 வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கமுடியும். மீதேன் சூழலை மாசுபடுத்தும் ஒரு முக்கிய பசுமைக்குடில் வாயு. இதன் அளவு அதிகமானால் அது காலநிலை மாற்றத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

வேளாண்மையில் வெளியிடப்படும்  மீத்தேன் உமிழ்வு
கார்பன் டை ஆக்சைடு வாயுவை விட 30% அதிக வெப்ப ஆற்றல் மீத்தேனில் இருந்து கிடைக்கும். விவசாயத்தின் மூலம் வெளியிடப்படும் மீத்தேனின் அளவைத் துல்லியமாக பூமியில் இருந்து அளப்பது கடினம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலகில் உமிழப்படும் பசுமைக்குடில் வாயுக்களில் 9.6% விவசாயப் பணிகளின் மூலமே ஏற்படுகிறது என்று அமெரிக்க சூழல் முகமை ( U s EPA) கூறுகிறது.

பசு ஏப்பம் விட்டால் வீட்டிற்கு மின்சாரம் கிடைக்கும்
மொத்த மீத்தேன் உமிழ்வில் 36% உமிழ்வு கால்நடைப் பண்ணைகள், பசு வளர்ப்பு மையங்கள் மூலமே நிகழ்கிறது. உலகில் 140 கோடி பசுக்கள் இருப்பதாக என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதில் ஒவ்வொன்றும் தினம்தோறும் 500 லிட்டர் மீதேன் வாயுவை வாயு மண்டலத்தில் கலக்கச்செய்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதைத் திறம்பட சேகரிக்க முடிந்தால் வீடுகளுக்கு தட்டுப்பாடு இல்லாத மின்சாரத்தை வழங்கலாம் என்று கருதப்படுகிறது.

செரித்தலும் மீத்தேன் உமிழ்வும்
மீத்தேன் உமிழ்வு எண்டெரிக் நொதித்தல் (enteric fermentation) என்ற செரித்தல் நிகழ்வில் நடை பெறும் நொதித்தல்முறை மூலம் உருவாகிறது. செண்டெரிக் நொதித்தல் என்பது நான்கு அறைகள் உடைய பசு, எருமை, ஆடு, செம்மறியாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளில் நுண்ணு யிரிகள் மூலம் உணவுப்பொருட்கள் கரையும் பொருட்களாக மாற்றப்படும் செரித்தல் நிகழ்வு.

உமிழ்வைக் குறைக்க
பசுமைக்குடில் வாயுக்களில் மீத்தேன் உமிழ்வைக் குறைப்பது என்பது அமெரிக்காவில் பைடன் நிர்வாகத்தின் சூழல் பாதுகாப்பு இலட்சியங்களில் ஒன்று.  பல பண்ணைகள் அமைந்துள்ள கலிபோர்னியா அமெரிக்காவில் அதிக மீத்தேன் உமிழ்விற்குக் காரணமாக இருக்கும் மாகாணம்.

ஸ்பெஷல் தீவனம்
கால்நடைகளில் இருந்து உமிழப்படும் மீத்தேனைக் குறைக்க சிறப்பு தீவனங்களை அளிப்பது உட்பட பல நடவடிக்கைகளை எடுக்க அந்நாடு ஆலோசித்துவருகிறது. கடலில் இருக்கும் சில தனிச்சிறப்புமிக்க ஆல்காக்களைக் கால்நடைத் தீவனத்துடன் கலப்பதன் மூலம் மீத்தேன் உமிழ்வை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைக்கமுடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பசுக்களுக்கும் முகக்கவசம்
மே 2022 தொடக்கத்தில் வேல்ஸ் நகரில் நடந்த டெரா ஆர்ட்டா வடிவமைப்பு ஆய்வு தொழில்நுட்பப் போட்டியில் பசுக்களின் ஏப்பத்தின் மூலம் வெளியேற்றப்படும் மீத்தேனைத் தடுக்கும் முகக்கவசம் முதல் பரிசைப் பெற்றது. வேல்ஸ் ராயல் கலைக் கல்லூரி மாணவர்களே இதனை வடிவமைத்தனர்.

மனிதனுக்குப் போட்டியாக
புவி வெப்ப உயர்விற்கு முக்கியக்காரணமாக இருக்கும் மனிதனுக்குப் போட்டியாக கால்நடைகள் குறிப்பாக பசுக்கள் மாறுமா? ஏற்கனவே மாட்டுப்பண்ணைகள் அமைக்கப்படுவதற்காக பிரேசிலில் அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படும் நிலையில் இக்கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

;