politics

img

பிணங்களின் அரசியல் - ப.செல்வகுமார்

பிணக் குவியல்களின் மேலலயும்
பசித்த கழுகுகளை ஒத்திருக்கிறது 
உம் பாசிச வெறி
இடுகாட்டில் வெந்த சாம்பலை 
உடலெங்கும் பூசிக் கொண்டு
ஆர்ப்பரிக்கிறாய்
சவ ஊர்வலம் 
ஒருவழிப்பாதையென
மகிழ்ந்திருக்கிறாய்
நெற்றிக்காசை சேகரம் செய்து
வரலாற்று உண்டியலை நிரப்புகிறாய்
எங்கள் எலும்புகள் 
வேய்ந்த வீட்டில் 
சுட்டெரித்த மண்டையோட்டை
திருஷ்டிக்கு வைத்திருக்கிறாய்
சுடர்வீசும் எம் பிள்ளகளின் 
கண்களில் ஒளிபிடுங்கி
பந்தமேந்தி நெய் வார்க்கிறாய்
கண்ணீர் வடிய வடிய 
எம் குலக்கொடிகளின் வாழ்வை
திடுமென போட்டுடைக்கிறாய்
உயிர்ப் பிச்சை யாசித்த கைகளில் 
சவப்பெட்டி திணிக்கிறாய்
நெஞ்சு வெடித்தழும் 
எந்தாயின் அழுகுரலை 
கீதமென கசியவிட்டு
வர்த்தகமாக்குகிறாய்
சவமெரிந்த கரிப்பூச்சினை 
நவதிரவியங்களால் மறைத்துக்கொண்டு
பாம்புரித்த சட்டையை நெய்து
புஷ்பகம் ஏறுகிறாய்
நிலம் கடந்து புலம்பெயர்ந்து
சாத்தானின் வேதமென ஓதுகிறாய்
பிணங்களை கணக்கிட்டு
உயிருக்கு விலையெழுதி
மரணத்தை வியாபாரம் செய்கிறாய்
கால்களால் வயிற்றை மிதித்தபடி
கொடும் அலகினால் கண்களை 
கொத்தித் தின்றபடியே நோட்டமிடுகிறாய்
பிரிதொரு கூக்குரலின் திசையை.

;