politics

img

100 இடங்களை இழக்கிறதா பாஜக?

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகதனிப்பட்ட முறையில் 282 இடங்களில்வெற்றி பெற்றது. அதன் தலைமையிலான கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் இம்முறை பாஜகவுக்கு அந்த அளவுக்கு இடங்கள் கிடைக்காது என்பதே பொதுவான கணிப்பாகஉள்ளது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.குறிப்பாக, கடந்த மக்களவைத் தேர்தலில் நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80ல் பாஜக 71 இடங்களிலும்,அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.அப்போது தனித் தனியாகப் போட்டியிட்ட சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள்தற்போது கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. எனவே, இந்த மாநிலத்தில் பாஜக கடந்ததேர்தலை விட 30 முதல் 35 இடங்கள் வரை இக்கூட்டணியிடம் இழக்க வாய்ப்புள்ளது.அதேபோல், கடந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. மொத்தம் 65 இடங்களைக் கொண்டுள்ள இந்தமாநிலங்களில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 62 இடங்களைப் பிடித்தது. ஆனால் இம்முறை அந்த மாநிலங்களில் அக்கட்சியால் அவ்வளவு இடங்களைக் கைப்பற்ற முடியாது என்பதே கள நிலவரம். சுமார் 30 முதல் 35 இடங்கள் வரை அந்த மாநிலங்களில் பாஜக இழக்க வாய்ப்புள்ளது.ஏனெனில் இந்த மூன்று மாநிலங்களிலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்போதெல்லாம் காங்கிரஞூஸ அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன்படி பார்த்தால் கடந்த மக்களவைத் தேர்தலை விட இந்த முறை அதிகவாக்குகள் பதிவாகியுள்ளதால் அது காங்கிரஸுக்கு ஆதாயமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.அதேபோல், குஜராத், ஹரியானா, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த தேர்தலில் பாஜக ஸ்வீப் எனப்படும் 100 சதவீதவெற்றியைப் பெற்றது. ஆனால் இம்முறை அதற்கு வாய்ப்பு இருக்காது. குஜராத்தில் 5-6 இடங்கள், ஹரியானாவில் 2-3 இடங்கள், தில்லியில் 2-3 இடங்கள், உத்தரகண்டில் 2 இடங்கள், இமாச்சலப் பிரதேசத்தில் 2 இடங்கள், கர்நாடகத்தில் 2-4 இடங்கள் என்று இந்த மாநிலங்களில் பாஜக 13 முதல் 18 இடங்களை அக்கட்சி இம்முறை இழக்க நேரிடலாம். 

மகாராஷ்டிரத்தில் சிவசேனையுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் இது பொருந்தாக் கூட்டணியாக போய்விட வாய்ப்புள்ளது. பாஜகவுடன் மத்தியிலும், மகாராஷ்டிர மாநிலத்திலும் கூட்டணியில் இருந்து கொண்டே அக்கட்சியை சிவசேனை நாள்தோறும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளது. இதனால் இரு கட்சிகளுக்கு இடையே அடிமட்டத் தொண்டர்களிடம் கசப்புணர்வு பரவிவிட்டது. இப்போது தேர்தலுக்கு முன் இரு கட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்தாலும் அது கள அளவில் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை. பாஜக-சிவசேனையை விமர்சித்தும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்தும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே நடத்திய பொதுக் கூட்டங்களுக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் கூட்டம் திரண்டது. இவை பாஜக-சிவசேனை கூட்டணி அரசு மீது மாநில மக்களின் அதிருப்தியை ஓரளவு வெளிப்படுத்தியது என்றும் கூறலாம். கடந்த மக்களவைத் தேர்தலில் இக்கூட்டணி மாநிலத்தில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 42 இடங்களை வென்றன. இம்முறை அங்கு பாஜக சுமார் 10 இடங்களையும் சிவசேனை 10 இடங்களையும் இழக்க வாய்ப்புள்ளது. பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றி பாஜகவுக்கு கிடைக்காது என்று கூறலாம். ஏனெனில் பீகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக கடந்த முறை 30 இடங்களில் போட்டியிட்ட 22 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை அக்கட்சி பீகாரில் போட்டியிடுவதே 17 இடங்களில்தான்.

அதில் 12-14 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றாலும் அது கடந்த தேர்தலை விட 8அல்லது 10 இடங்கள் குறைவாகவே இருக்கும். ஜார்க்கண்டிலும் சுமார் ஐந்து இடங்களை அக்கட்சி இழக்க வாய்ப்புள்ளது. அதேபோல், அசாம் மாநிலத்திலும் (குடியுரிமைச் சட்டத்தின் எதிர்விளைவாக) பாஜக 5-6 இடங்களை காங்கிரஸ் கட்சியிடம் இழக்க நேரிடலாம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பாஜகவுக்கு கடந்த தேர்தலில் கிடைத்த 282 இடங்களில் இருந்து இம்முறை சுமார் 100 முதல் 110 இடங்கள் வரை குறையலாம்.மாறாக, அக்கட்சிக்கு கடந்த தேர்தலைவிட இம்முறை கூடுதல் வெற்றியை அளிக்கக் கூடிய பெரிய மாநிலங்களாக மேற்கு வங்கமும், ஒரிசாவும் மட்டுமே கருதப்படுகின்றன. இந்த மாநிலங்களில் பாஜக கடந்த தேர்தலில் முறையே 2 மற்றும் 1 இடத்தில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை இந்த இரு மாநிலங்களிலும் அக்கட்சி தலா 8 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. எனினும், மற்ற வட இந்திய மாநிலங்களில் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டும் வகையில் இது இருக்காது என்று கருதப்படுகிறது.பாஜகவும் இதை உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. அக்கட்சியின் செயலாளர் ராம் மாதவ் அண்மையில் கருத்து தெரிவிக்கையில், பாஜக கூட்டணிக்கு ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் என்றும் கூறியிருந்தார்.இதனிடையே, தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலைகளை மனதில் கொண்டே ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை பிரதமர் மோடி அண்மையில் புகழ்ந்து பேசியதாகக் கருதப்படுகிறது. அதேபோல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை பாஜக தலைவர் அமித் ஷா சில தினங்களுக்கு முன் தொடர்பு கொண்டு பேசியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

நன்றி:தினமணி (11.5.19)

;