politics

img

40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் சென்னையில் மு.க.ஸ்டாலின் பேட்டி

40 தொகுதிகளிலும் முழுமையாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்லும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.17வது மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 9 கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஞாயிறன்று (மார்ச் 17) மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “தில்லியில் மட்டுமல்ல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழவிருக்கிறது. தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். ஆனால், திட்டமிட்டு 3 தொகுதிக்கு தேர்தல் நடத்த மறுக்கிறார்கள். அதற்கான சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களில் 2 பேர் பெண்கள்” என்றார்.

இதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மத்திய-மாநில ஆட்சிகளின் மீது மக்கள் எந்தளவிற்கு வெறுப்பாக உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இந்த ஆட்சியாளர்களை அப்புறப்படுத்த மக்கள் தயாராக உள்ளனர்” என்றார்.“திமுக சார்பில் போட்டியிடும் 20 பேரில் 13 பேர் புதியவர்கள். மார்ச் 20ந் தேதி திருவாரூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 19ந் தேதி (செவ்வாய்) வெளியிடப்படும். தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், கதாநாயகியாவும் இருக்கும்; வில்லனாக இருக்காது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என அணிக்கு பெயரிட்டுள்ளோம். அதனடிப்படையில் பிரச்சாரம் அமையும். தேர்தல் ஆணையம் சுயமாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே நீதிமன்றம் சென்றுள்ளோம்” என்றும் அவர் கூறினார்.இந்த சந்திப்பின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

;