politics

img

கருத்துக்கணிப்புகள் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கின்றனவா?

தேர்தல் காலம் நெருங்க நெருங்க அரசியல் கட்சியினருக்கு ‘ஜுரம்’ எகிரும் அளவுக்கு ஊடகங்களுக்கும் எகிறிவிடும். தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை – அவர்களில் ஆண்கள், பெண்களின் விகிதம். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள சாதியினர் மதத்தினர் பற்றிய கணக்கெடுப்பு (சென்சஸ்), கட்சிகள் எதோடு எதுசேரும். ஒட்டிக்குமா? பிச்சுக்குமா? ஒட்டிக்கிட்டா பெட்டியில் எவ்வளவு? வெட்டிக்கிட்டா எவ்வளவு குறைந்து போனது? என்றெல்லாம் மூளையைக் கசக்கி கசக்கி சாறாக்கி எழுதத் தொடங்கிவிடுவார்கள். இப்போதெல்லாம் எழுதுவது ஏது? கணினியில் தட்டித்தட்டி அச்சேற்றிவிடுவார்கள்.நாள்தோறும், வாரம் இருமுறை, வாரம்தோறும், இருவாரங்களுக்கு ஒருமுறை என்று வெளி வரும் இதழ்கள் எல்லாமும் தேர்தலையும் கணிப்புக் கற்பிதங்களையும் நோக்கித்தான் இருக்கும். பொதுவான வாசகர்களுக்கு இந்தத் தீனிதான் நிறைவுதரும். இன்னொரு தீனி உயர்தட்டில் இருக்கிறது அறிவு ஜீவிகளுக்கு அதிகம் பிடித்தமானது. அதுதான் கருத்துக் கணிப்பு. வாக்குப்பதிவுக்கு முந்தையது அலை அலையாய் வரும். வாக்குப்பதிவுக்குப் பிந்தையது சுனாமிபோல. வாக்குப்பதிவு முடியும் நாள் இரவில் தொடங்கி அடுத்தநாள் மதியத்திற்குள் அடித்து அது ஓய்ந்துவிடும். அதெல்லாம் மெய்யா பொய்யா என்பதை வாக்கு எண்ணிக்கை நாளன்று விவாதித்துக் கொண்டிருப்பார்கள். மெய்யாய் ஒன்று அமைந்தால் விருது கொடுக்கப் போவதுமில்லை. பொய்யாய் ஒன்று அமைந்தால் தண்டனை வழங்கப்போவதுமில்லை. இதனால்தான் பதில் சொல்லும் கட்டுப்பாடின்றி சகட்டுமேனிக்கு கருத்துக்கள் கணிக்கப்பட்டதாக மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றன.


ஆனால், கருத்துக்கணிப்பு என்பது பிறந்து குழந்தையாக இருந்தபோது என்ன நடந்தது தெரியுமா? அப்போது இந்தக் குழந்தைக்கு திசை காட்டும் குச்சிக் கணிப்பு(straw vote)  என்று காரணப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதனை முதலில் சோதித்துப் பார்த்தது அமெரிக்காவில்தான்.1936ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆட்சியில் இருந்த ஜனநாயகக் கட்சி சார்பில், ஃபிராங்க்ளின் டி. ரூஸ் வெல்ட்டும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் ஆல்ஃப் லாங்டனும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தல் பற்றி லிட்டரரி டைஜஸ்ட் இதழ் கருத்துக் கணிப்பு நடத்தியது. சாதாரணமாக வாக்காளர்களை சந்தித்து அல்ல. சுமார் ஒரு கோடி அஞ்சலட்டைகளை வாக்காளர்களுக்கு அனுப்பியது. இவர்களில் 23 லட்சம்பேர்தான் பதில் அனுப்பியிருந்தனர். அவற்றின் அடிப்படையில் அந்த இதழ் எதிர்க்கட்சி வேட்பாளரான லாங்டன் 57 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என்றும் ஆளுங்கட்சி வேட்பாளரான ரூஸ்வெல்ட் 43 விழுக்காடு வாக்குகளுடன் தோல்வி அடைவார் என்றும் கணித்தது.அதே தேர்தலில் ஜார்ஜ்கேலப் என்பவரும் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினார். அவருடையது மேலே குறிப்பிட்டதற்கு நேர்மாறாக இருந்தது. இவர் கடிதம் போட்டு கணிக்கவில்லை. வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து முடிவை வெளியிட்டார். இதன்படி ரூஸ்வெல்ட் 56 விழுக்காடு பெறுவார். லாங்டன் 44 விழுக்காடு பெறுவார்.இறுதியில் கேலப் கணிப்புதான் சரியானதாக இருந்தது. ரூஸ்வெல்ட் மீண்டும் வெற்றி பெற்று அதிபரானார். லிட்டரரிடை ஜஸ்ட் நடத்திய கருத்துக் கணிப்பு தவறாக இருந்ததால் அதன்மீதான வாசகர்களின் நம்பகத்தன்மை போய்விட்டது. இதனால் அந்தப் பத்திரிகையின் விற்பனை வீழ்ச்சியடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அந்தப் பத்திரிகை டைம் பத்திரிகைக்குள் கரைந்துபோகும் நிலை ஏற்பட்டது. இப்போது அந்த நிலையா இருக்கிறது? எவ்வளவு தவறாகக் கணித்தாலும் எந்தக் கூச்சமும் இருப்பதில்லை. வருத்தம்கூட தெரிவிப்பதில்லை.இருப்பினும் கருத்துக் கணிப்பையே தேர்தல் முடிவுபோல் சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள். கருத்தினைக் கணிப்பது ஒருவரோ இருவரோ அல்ல. பல நிறுவனங்கள் கணிக்கின்றன. பெரும்பாலும் இதிலே ஈடுபடுகின்றவை ஆங்கில இதழ்களும், ஊடகங்களும்தான். மாநில மொழிப் பத்திரிகைகள் சிலவும் முயற்சி செய்வது உண்டு.இந்தியாவில் தேர்தல் கருத்துக் கணிப்பு என்பது 1984ஆம் ஆண்டு வரை கூட பிரபலம் அடையவில்லை. இதனை கவன ஈர்ப்பு விஷயமாகக் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு பிரனாய் ராய்க்கு உண்டு. 1987ல் உலகம் இந்த வாரம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், 1989 பொதுத் தேர்தலின்போது வெளியிட்ட கருத்துக்கணிப்பு ஆட்சியில் இருந்த ராஜீவ் காந்திக்குக் கலக்கத்தையும், வி.பி.சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு உற்சாகத்தையும் தந்தது. இது கற்பனையல்ல நிஜம் என்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்தன.அதன்பிறகு கருத்துக் கணிப்பின் மீது மோகம் பிறந்தது. உண்மையில் பிரனாய் ராய் தேர்தல் பகுப்பாய்வு செய்வதற்கான விதிமுறைகளைக் கற்றுத்தரும் அரசியல் அறிவியல் பாடப் பிரிவில் செஃபாலஜி படித்தவர் அல்ல. அவர் பொருளாதாரப் பட்டதாரி. பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான மக்கள் கருத்தைத் தீர்மானிக்கும் வழிமுறைகளையே தேர்தல் கருத்துக் கணிப்புக்குப் பயன்படுத்தி வெற்றியும் பெற்றார்.


ஆனால் அதன்பிறகு களத்தில் இறங்கிய பல நிறுவனங்கள் இதனைத் தொழிலாக மாற்றிக் கொண்டன. ஊதியத்திற்கு ஊழியர்களை அமர்த்திக் கொண்டனர். கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப கணிப்பு வெளியிடும் நிறுவனங்களாகவும் சில மாறிப்போயின. ஒரு சிலர் ஊதியம் பெற்றுக் கொண்டு கொஞ்சம் முன்பின்னாக எண்களை மாற்றிப்போட்டு சோதிடக்குறிப்பு எழுதுகின்றவர்கள் போல் ஆகிவிட்டதும் நடந்தது.இதற்கு ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். அனைத்தையும் பட்டியலிட இடம் போதாது. மூன்று மக்களவைத் தேர்தல்கள் தொடர்பான கருத்துக் கணிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறோம். பாருங்கள் அதில் இந்த உண்மை பளிச்சென விளங்கும்.2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அணிக்கு 222 இடங்கள் கிடைத்தன. இதற்கு நெருக்கமாக நின்ற என்டிடிவி – இந்தியன் எக்ஸ்பிரஸ் கணிப்பு கூட பாஜக அணி என்று வரும்போது 230லிருந்து 250 வரை என தாராளப்போக்கைக் காட்டியது. ஊடகங்களை மக்கள் தோற்கடித்தார்கள்.இதேபோன்ற காட்சி 2009லும் நீடித்தது. ஒருமுறை தோற்றுப்போன பாஜக அணியை மீண்டும் உயர்த்திப்பிடிக்க முயன்றன ஊடகக் கணிப்புகள். 200 இடங்கள் வரை வாரி வழங்கின. அதேசமயம் பழைய எண்ணிக்கையில் கூட காங்கிரஸ் அணி வெற்றி பெறாது என்ற ஆசையையும் வெளிப்படுத்தின. மீண்டும் மக்களே எஜமானர்கள் ஆனார்கள். பாஜகவுக்கு முந்தைய தேர்தலைக்காட்டிலும் குறைந்தது 159 இடங்களை மட்டும் அளித்து பலவீனப்படுத்தினர். காங்கிரசை 222லிருந்து 262க்கு உயர்த்தினர். (2004 முதல் 2008 வரை இடதுசாரிகள் வெளியே இருந்து ஆதரவளித்து குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் வகுத்து காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வழிகாட்டியதும் ஒரு காரணம்)


2014 மக்களவைத் தேர்தலிலும் நிலைமை இதுதான். பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்ற போதிலும் இடங்களின் எண்ணிக்யைக் கணித்தபோது பாஜக அணிக்கு 280 வரை கொடுத்த போதும் காங்கிரஸ் கூட்டணிக்கு 100க்கு குறைவாக யாரும் கொடுக்கவில்லை. ஆனால், அக்கட்சி 47 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சியாகும் தகுதியையும் இழந்ததுதான் வரலாறு.கருத்துக் கணிப்பு மக்கள் விருப்பத்தைப் பிரதிபலிப்பது 25 விழுக்காடு என்றால் கணிப்பை நடத்தும் நிறுவனங்களின் விருப்பத்தைத்தான் 75 விழுக்காடு பிரதிபலிக்கிறது. யார் என்ன கணித்தாலும் மக்களே இறுதி முடிவெடுப்பவர்களாக – நிலைமையைத் தலைகீழாய்ப் புரட்டிப்போடுபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் 1836 அமெரிக்கத் தேர்தலிலிருந்து 2014 இந்தியத் தேர்தல் வரை நடந்துள்ளது. வாக்காளர்கள் தீர்மானித்தால் எதையும் நிகழ்த்திக்காட்டுவார்கள்; மாற்றிக்காட்டுவார்கள்.



;