politics

பழைய சொல், புதிய தேடல் ‘நாரி’

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1.035 மில்லியன். இதில் உத்திரபிரதேச மாநிலம் கௌதம புத்த நகர் வாக்குச்சாவடிக்கென ஒரு சிறப்புண்டு. இத்தேர்தலின் முதல் இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி ( PINK BOOTHS) இதுதான். 

கோவா மற்றும் குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் போது சோதனை முயற்சியாக இவ்வகை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு வாக்குச்சாவடி இளஞ்சிவப்பில் நிறுவப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் வாக்கு சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து இத்தேர்தலில் வட இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் அமைக்கப்பட்டன. 

இளஞ்சிவப்பினலான பலூன்கள், அலங்கார உடைகள், இளஞ்சிவப்பு சீருடையுடனான தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்துநர், மேற்பார்வையாளர்,..என நூறு சதவீதம் பெண்களால் நிர்வகிக்கும் வாக்குச்சாவடி. முதல் முறையாக வாக்களிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், இஸ்லாமியப் பெண்கள்,...எனப் பலரையும் கவரும் படியான யுக்தி இது.

தேர்தல் நடைமுறை மீதும், வாக்களித்தல் மீதும் ஆர்வமில்லாத வடகிழக்கு மாநிலம் குறிப்பாக சிக்கிம், மிசோரம் மாநிலங்களில் பரவலாக அமைக்கப்பட்டன. அதிகபட்சமாக, ஏழு தொகுதிகள் கொண்ட தலைநகர் டெல்லியில் பதினேழு வாக்குச்சாவடிகள் இளஞ்சிவப்பாக அமைக்கப்பட்டன. 

 தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 67,700 வாக்குச்சாவடிகளில் ஒன்றுகூட முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் இளஞ்சிவப்புச் சாவடி அமைக்கப்படவில்லை என்பது ஒரு குறை.

இத்தேர்தல் யுக்தியை இந்திய ஊடகங்கள் ‘ NARI SHAKTI ‘ என்றும் ‘PINK BOOTH’ என்றும் குறிப்பிட்டன. அது என்ன ‘நாரி’?

நாரி - தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்ற ஒரு சொல். நாரை, நன்னாரை , நாரிகை இதனுடன் தொடர்புடைய பிற சொற்கள்.

மர்மக் காய்ச்சலுக்கு முக்கிய மருந்தாக பயன்படும் நிலவேம்பு, அநாரியதித்தம் என அழைக்கலாகிறது. இது தவிர பீ நாரி , முள் நாரி மருத்துவ குணமுள்ள மூலிகைத் தாவரங்கள்.

‘நாரிய ரில்லையிஞ் ஞாலமேழு மென்ன ‘ என்கிறது கம்பராமாயணம்.

நாரிகேளம் - தேங்காய் ( சிந்தாமணி நிகண்டு)

நாரிகேளப்பாகம் என்றொரு வகை செய்யுள் இருக்கிறது. தேங்காயை உரித்து உடைத்து பருப்பைத் தின்றால் இனிப்புத் தருவதைப் போல பிரித்து பகுந்து படித்தால் சுவைதரும் செய்யுள்.

வில்லின் நாணி நாரியின் பேரொலி என்கிறது கந்தன் புராணம்.இங்கு நாரி என்பது அம்பு. 

குறு நரிக்கு நல்ல நாராயம் கொளல் - பழமொழி நானூறு. இங்கு நாராயம் என்பது வில்.

கள், தேன் போன்ற நறுமணப் பொருட்கள் ‘ நாரி ‘ என்கிறப் பெயரில் அழைக்கப்படுகிறது.

நாரி என்பதற்கு லியோ அகராதி வில் நாண், யாழ் நரம்பு , இடுப்பு எனப் பல பொருளைத் தருகிறது. 

நாரிகை - பெண்

நாரிக்கருத்து - இடுப்பு வலி

நாரிப்பிடிப்பு - இடுப்புப் பிடிப்பு

நாரி - இடை, ஒரு பண், கள், சேனை, தேன்,நன்னாரி, பன்னாடை, பார்வதி, வாசனை, பெண் (வேமன் தமிழ்ச்சொல் அகராதி )

நாரரி - நார்+அரி - பிடரி மயிருடைய சிங்கம் .

சிவனுக்கு ஒரு பெயர் நாரிபாகன்.

நாரீ தூசணம் - பாதி விரத்தியத்தைக் கெடுப்பது ( யாழ்ப்பாணம் அகராதி )

அவன் நாரி முறிய வேலை செய்தான். நாரி பிடித்துக்கொண்டது, நாரிக்குத்து - பேச்சு வழக்குகள்.

இடுப்பிற்கு நாரி என்று பெயர். இடுப்பு எலும்பு நாரி எலும்பு. அதாவது மனித விலாக் கூட்டிற்கும் இடுப்பு வலயத்திற்கும் இடையில் அமைந்த 5 பெரிய முள்ளந்தண்டெலும்புகள் நாரி எலும்புகள். 

அதே நேரம் வடமொழியில் இச்சொல் பெண்ணைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. மார்ச் 8, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய சாதனைப் பெண்களுக்கு குடியரசுத் தலைவரால் ‘ நாரி சக்தி புரஸ்கர் ‘ விருது வழங்கப்பட்டு வருகிறது. அதே நாளில் சாகித்ய அகாதமி ‘ நாரி சாதனா ‘என்கிற நிகழ்ச்சியை நடத்துகிறது. முழுக்க பெண்களாலான நிகழ்வு இது.

மேனகா காந்தி, பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி துறை அமைச்சராக பதவி வகிக்கையில் NARI - National Repository of Information for Women என்கிற திட்டத்தை அறிமுகம் செய்தார். 

பெருமாள் முருகன் எழுதிய ஒரு நாவல் ‘ அர்த்தநாரி ‘. அர்த்தம் - பாதி ; நாரி - பெண். அதாவது தன்னில் பாதியை பெண்ணாகக் கொண்டவன் என்று பொருள். சிவனின் ஒரு பெயர் அர்த்தநாரிஸ்வரன்.

தமிழில் நாரி என்பது பெண், தெங்கு, இடுப்பு, அம்பு , வில்,...என பலப் பொருளைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. வடமொழியில் நாரி என்றால் பெண்.  

இதிலிருந்து நாரி சக்தி என்பதை பெண் சக்தி என்றும் ‘நாரி’ என்றால் மகளிர் என்றும் பொருள் கொள்ளலாம்.

;